துருக்கியை ஆண்ட ஹிட்டைட்ஸ்கள் இந்துக்களா?

lion gate

அரண்மனையின் சிங்க வாசல்

Written by London swaminathan

Research article No.1924

Date :11th June 2015

Time uploaded in London: 11-07

ஹிட்டைட்ஸ்கள் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் தமிழில் தருகிறேன். முழு விவரம் வேண்டுவோர் நேற்று வெளியான எனது ஆங்கில கட்டுரையைப் படிக்கவும்.

1.ஹிட்டைட்ஸ் எங்கிருந்து வந்தனர் என்பது ஆராய்ச்சியளர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் கி.மு.1800 முதல் கி.மு1200 வரை இருந்துவிட்டு திடீரென்று காணாமற் போய்விட்டனர்.

2.அவர்கள் துருக்கியையும், வடக்கு சிரியாவையும் ஆண்டது பைபிள் குறிப்புகள், எகிப்திய கல்வெட்டுகள், 10,000 களிமண் பலகை கியூனிபார்ம் எழுத்துக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்தது.

3.துருக்கியிலுள்ள பொகஸ்கோய் என்னும் இடத்திற்கு பழங் காலத்தில் ஹட்டுசா என்று பெயர். அங்குதான் இவர்கள் அரண்மனை, நூலகம், கல்வெட்டுகள், கோவில்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதே நகரில்தான் மிடன்னிய வம்சம் பற்றிய தகவல்களும் கிடைத்தன. கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே வேத கால தெய்வங்கள், தசரதன், பிரதர்தனன் முதலிய மன்னர்கள் பெயர்கள் எல்லாம் அங்கே கிடைத்ததால் வேதமும் சம்ஸ்கிருதமும் கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே துருக்கியிலும் சிரியாவிலும் முழங்கிய அசைக்க முடியாத சான்றுகள் கிடைத்தன.

4.ஆனால் ஹிட்டைட்ஸ் பற்றி இவ்வளவுத் தெளிவாக எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் அவர்கள் பேச்சிய மொழி இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது — அதாவது சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

5.தென் கிழக்காசிய நாடுகள் முழுவதும் ராமாயணத்திலுள்ள பெயர்களை எல்லாம் அவர்கள் எப்படி உருத் தெரியாமல் மாற்றினரோ அப்படி இவர்களும் பெயரை மாற்றியிருக்கலாம். இனி இந்துக்களுடன் இவர்களைத் தொடர்புபடுத்தும் அம்சங்களை மட்டும் பார்க்கலாம்

yazilikaya

சம்ஸ்கிருத மொழிக் குடும்பம்

6.இவர்கள் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியை பேசினர்.

7.ஒரு ஹிட்டைட் மன்னரும் எகிப்திய மன்னரும் செய்த உடன்படிக்கையில் ஆயிரம் தெய்வங்கள் சாட்சியாக செய்தனர். இந்த ஆயிரம் என்பதை இந்து மத நூல்களில் மட்டுமே காணமுடியும். தசாம்ஸ முறையைக் கண்டுபிடித்ததும் நம்மவர்கள்தான். சஹஸ்ர நாமம், சஹஸ்ர கண்கள், கைகள் என்றெல்லாம் வேதங்கள் துதிபாடும். இந்திரனை ஆயிரத்துடன் தொடர்பு படுத்தும் பெயர்கள் சிலவும் உண்டு

8.இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இவர்களிடம் இருந்தது. இறந்தவுடன் மன்னன் கடவுள் ஆகிவிடுகிறான் என்பதும் அவர்கள் கொள்கை. இது எல்லாம் இந்து மத நம்பிக்கைகள். ஆய் அண்டிரன் என்ற மன்னன் இறந்தவுடன் சொர்க்கத்தில் அவனுக்கு இந்திரன் வரவேற்பு கொடுக்க நிற்பது பற்றி புற நானூறு பாடுகிறது. இது போன்று நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும்.

9.இந்த மன்னர்கள் மற்றவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்தது, பெண் கொடுத்து மற்ற நாட்டுடன் உறவைப் பல்ப்படுத்தியது ஆகியனவும் இந்து மத வழக்கங்களே. ராவணன் — பாண்டிய மன்னன் உடன்படிக்கை, மிடன்னிய தசரதன் – எகிப்திய மன்னன் உடன்படிக்கை ஆகியன பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதிவிட்டேன். காந்தாரத்தில் இருந்து வந்த காந்தாரி, கேகயத்தில் இருந்து வந்த கைகேயி, விதேக நாட்டில் இருந்து வந்த வைதேகி ஆகியோரை நம் இதிஹாசங்களில் காண்கிறோம்.

 hariti

65 கடவுள் உருவங்கள்

10.இவர்களுடைய 65 கடவுள் உருவங்கள் எழிஜிகாய என்னும் இடத்தில் சுவற்றில் வரையப்பட்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் இந்து தெய்வங்களைப் போல வாகனங்கள் மீது பவனி வருகின்றனர். சிலப்பதிகாரமும் , தேவரமும் துர்க்கையை மான் வாகன தேவி (கலையதூர்தி) என்று வருணிக்கின்றன. தமிழ் நாட்டிலோ இந்தியாவின் இதர பகுதிகளிலோ அததகைய கலயதுர்தியை இப்போது காணமுடிவதில்லை. ஆனால் துருக்கியில் காணலாம்.

11.ஹிட்டைட்ஸ்களும் வேத காலம் போல இடி மின்னல் கடவுளையும் (இந்திரன்) , சூரியனையும் வணங்கினர்.

12.ஹிட்டைட்ஸ் அரண்மனையின் முன்னால் இரண்டு பெரிய சிங்கங்கள் நிற்பதைக் காணலாம். வேதத்தில் சிங்கம், சிம்மாசனம் இருப்பது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

13.இதே போல இருதலைக் கழுகு அவர்கள் சின்னமாகக் காட்டப் பட்டுள்ளது. இது விஜய நகர அரசர் காலம் வரை நம் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையையும் முன்னரே எழுதிவிட்டேன். இவை எல்லாம் இந்து மத தாக்கத்தைக் காட்டுகின்றன.

14.ஒரு கல்வெட்டில் கடவுளருக்கு வெள்ளியில் விக்ரகம் செய்தது பற்றியும், காளைகள் ரதத்தை இழுத்துச் செல்வது பற்றியும், காளையே கடவுள் என்றும் படிக்கிறோம். இவை எல்லாம் இந்து மத தாக்கமே. இந்திரனை காளை என்று வேதங்கள் புகழ்கின்றன.

15.ஹரிதி என்ற குழந்தைகளைக் காக்கும் தெய்வம் புத்த மதக் கடவுள் என்றும் நேபாளம், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஹரிதி வழிபடப்படுவதாகவும் கலைக் களஞ்சியங்கள் கூறும். இந்தக் கடவுள் இந்து மதக் கடவுளே. ஏனெனில் புத்தர் கடவுள் வழிபாடு பற்றி எதுவுமே சொல்லவில்லை. இந்த ஹரிதி போன்ற தேவி சிலை துருக்கியில் கிடைத்து இருக்கிறது.

vahanas

16.அதர்வண வேத மந்திரங்களைப் போல பல வழிபாட்டுத் துதிகள் உள்ளன. பில்லி சூனியம் போக்கல், பேய்களை உண்டாக்கி பாதுகாப்பு பெறல், குடும்பச் சண்டையைத் தீர்த்துவைத்தல், மலடித் தன்மையை நீக்கல் போன்ற பல வழிபாடுகள் ஹிட்டைட்ஸ் இடமும் உண்டு. தந்தை செய்த பாவம் மகனுக்கு வருமென்று எண்ணி ஒருவர் உருக்கமாக வழிபடும் துதியும் உளது.

17.இவர்களுடைய பெயர்கள் சம்ஸ்கிருத மொழியின் திரிபே என்று ஆரியதரங்கிணி நூலில் விரிவான ஆரய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளார் கல்யாணராமன் என்ற அறிஞர்.

18.வாய்மொழிக் கோசர், அதியமான் போல இவர்கள் பெயர்களிலும் சத்திய என்பது நிறைய வரும். ராம்செஸ் (ராம சேஷன்) என்ற எகிப்திய மன்னனுடன் சமாதான உடன்பாடு செய்தவன் பெயர் ஹட்டுசீலி. இது சத்தியசீல என்பதன் திரிபு. அவர்களது தலைநகர் ஹட்டுசா. இது சத்தியவாச என்பதன் திரிபு. இப்படி நிறைய பெயர்கள் கல்யாணராமன் கொடுத்த பட்டியலில் உள்ளது. (சத்திய வான் என்பதன் திரிபு அதியமான்; இவர்களை சத்யபுத்ரர்கள் என்று அசோகர் கல்வெட்டு கூறும்)

19.ஹிட்டைட்ஸ்களுடைய மோதிரங்கள், முத்திரைகள் ஆகியனவும் இந்து மத தாக்கத்தைக் காட்டும். ராமன் பட்டமேற்பு விழாவுக்கு தசரதன் அனுப்பிய அழைப்பிதழில் கழுகு முத்திரை வைத்து அனுப்பியதாக கம்பன் பாடியதையும் அதே கழுகு முத்திரை சிந்து சமவெளியில் கிடைத்திருப்பதையும் தனியொரு கட்டுரையில் தந்துள்ளேன். இது போல பலவகை முத்திரைகள் துருக்கியில் கிடைத்திருக்கின்றன. சாகுந்தலம், முத்ராராக்ஷசம் போன்ற வடமொழி நாடகங்களில் மோதிர-முத்திரைகள் கதையின் அடித்தளமாக விளங்குகின்றன.

20.கல்யாணராமன் தரும் பட்டியல்:

ஹிட்டைட் – ஹட்டி-க்ஷத்ரிய- கேட்டா (பைபிள்)

ஹட்டுசா= சத்வாச

அனிட்டா = அநீத

ஹட்டுசீலி= சத்வ சீல

முரஸீலீஸ்= முர சீல

துதாலியா= துக்தாலயா

அர்ணவாண்டா= அருணபந்த.

ஹட்டுசீலிஸ் மனைவி புதுகீபா= பத்மசிவா

double headed

புதுஹீபா, ஹூரியன் வம்சத்தைச் சேர்ந்தவள். இது சூரியன் என்பதன் திரிபாகும். ப=வ, ஹ=ச, ஜ=ய, ர=ல ஆக மாறுவது பற்றி எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஏராளமான சான்றுகள் கொடுத்துள்ளேன்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: