Compiled by S NAGARAJAN
Article No.1926
Date :12th June 2015
Time uploaded in London: 8-22 am
By ச.நாகராஜன்
‘பறந்து போன பக்கங்கள்’ என்ற நூலை கோமல் சுவாமிநாதன் என்ற நாடகாசிரியர் (தோற்றம் 27-1-1935 மறைவு 1995) எழுதியுள்ளார்.1997இல் நூலாக அவரது கட்டுரைகள் வந்த போது அவர் அமரராகி விட்டார்.
தனது வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை அருமையான நடையில் எழுதியுள்ளார். தமிழக நாடகக் கலையின் வரலாறை இதன் மூலம் அறிய முடியும்.
காங்கிரஸ் பேச்சாளராக அவர் இருந்த இளம் வயதில் காமராஜரைப் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.
விருதுநகரில் ஒரு உபதேர்தல். பொதுப்பணித்துறை பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது கோமல் சுவாமிநாதன் உள்ளிட்ட சிலர் காமராஜரின் தாயாரைப் பார்க்கச் சென்றனர். “என் வீடு இருக்கும் போது அங்ஙனே போய் ஏன் தங்குறான்?” என்று அந்த மூதாட்டி கேட்டபோது தான் காமராஜர் அவரைப் பார்க்க வரவே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவனை ஒரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்லுங்கப்பா” – தாய்க்கே உரித்தான ஆதங்கத்துடன் அவர் இருபது வயது கூட நிரம்பாத ஒரு ‘பையனிடம்’ சொல்ல, அந்தப் பையனான கோமல் சுவாமிநாதன் அதை காமராஜரிடம் சொன்ன போது,”கிறுக்கச்சி! அது ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் காமராஜர்.
ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி கூறிய ஒரு விஷயம் இது. அவர் காமராஜருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதி அனுப்பும் பொறுப்பில் இருந்த போது நிகழ்ந்தது இது.
காமராஜரின் தாயாரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில்,”நீ மாசம் அனுப்பற ஐம்பது ரூபாய் பத்தலை. விலைவாசி ஏறிக் கிடக்கு. கூட பத்து ரூபா அனுப்பு” என்று அவர் எழுதியிருந்தார்.
அதற்கு காமராஜரின் பதில் ;”உனக்கு பத்து ரூபாய் அதிகம் அனுப்ப வேண்டுமென்றால் பாலமந்திர் ஏழைக் குழந்தைகளுக்கு நான் அனுப்பும் பணத்திலிருந்து பத்து ரூபாய் குறைத்து அதை உனக்கு அனுப்ப வேண்டும். அந்த பிள்ளைகளுக்கு குறைத்து அனுப்பக் கூடாது. அதனால் இந்தப் பணத்திலேயே சமாளித்துக் கொள்”
எப்படிப்பட்ட தலைவர்கள் சமீப காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்! அவரைப் பற்றி அந்தக் காலத்தில், தீய சக்திகள் அடுக்கு மொழியில், கொள்ளை அடித்து சுவிட்சர்லாந்தில் கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார் அவர் என்று மேடை தோறும் முழங்கும். அதை நம்பி ஏமாந்த அப்பாவிகள் ஏராளம்.
இன்று எத்தனை சைபர்கள் அந்த எண்ணுக்கு என்றே தெரியாதபடி கோடி கோடியாக கொள்ளை. கொள்ளை அடித்தவர் பெரிய ஹீரோவாக மொபைல் போனுடன் காரில் வலம் வருவதை வேறு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். அவ்வளவு தைரியம்!
இடம் ரேஷம் கார்டு விநியோகிக்கும் மையம். இட மாற்றத்திற்கான விண்ணப்பத்தை நீட்ட, அதை வாங்கிய இளம் பெண்மணி முன்னும் பின்னுமாக ஐந்து நிமிடம் திருப்புகிறார். கொடுத்தவருக்கு தன் ‘இங்கிலீஷில்’ சந்தேகம் வந்து விட்டது. “ஏதேனும் தப்பா இருக்கா!”
“பேப்பர் சரியில்லை. கீழே போய் எழுதி வாங்கிட்டு வாங்க!”
அரை மணி நேரம் மண்டையைப் பிய்த்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைகிறார் அவர். கீழே இருந்த ஒருவர் மாடியிலிருந்து வரும் அவரைக் கூப்பிட்டு விஷயத்தை விசாரிக்கிறார்.
தன்னிடமுள்ள பேப்பரை எடுத்து பழைய கால ரெஜிஸ்ட்ரார் அலுவலக தமிழில் தமிழ் கூட்டெழுத்தில் மனு ஒன்றை எழுதி, ஒரு பேப்பரைக் கொடுத்து, “இதை கொடுங்க” என்கிறார்.
ஐந்து ரூபாய் கட்டணம்.
மேலே போய் பேப்பரைக் கொடுத்தவுடன் அந்த எழுத்தைப் பார்த்தவுடன் இளம் பெண்மணி புன்முறுவல் பூக்க இடமாற்றத்துடன் ரேஷன் கார்டை அடுத்த வாரம் வாங்கிக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டுகிறார்.
சிறுதொகையில் கூட கேவலமான லஞ்சப் பங்கு. இதே நிலை தான் – (பழைய கால பிறப்பிதழில் பெயர் இருக்காது. அதை எழுத) கார்பரேஷனிலும் லஞ்சத் தொகை.
ஆர்டிஓ ஆபீஸிலும் இதே நிலை தான். சார்பதிவாளர் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம்.
எங்கும் லஞ்சம்; எதிலும் லஞ்சம். ஸயின்டிபிக்காக ஊழல் முறைப்படுத்தப் பட்டுள்ளது.
ஆங்காங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏஜெண்டுகள். அவரை மீறிச் சென்றால் ஆயிரம் நொள்ளைகள் சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.
காமராஜர் போல ஊழலின்றி தியாகம் செய்த தலைவர் எங்கே! ஊழலை முறைப்படுத்தி ஒன்றரைத் தலைமுறையை அழித்து விட்டவர்கள் எங்கே!
தமிழகம் இறைவனின் சாபத்தை வாங்கி விட்டதோ!
அவன் அருளின்றி சாப விமோசனம் கிடைக்காது.
சாப விமோசனத்திற்கு பிரார்த்திப்பது ஒன்றே நமது வழி.
ஆனால் அப்போதும் தீய சக்திகளின் ஒலி
“சீரங்கநாதரையும் தில்லை நடராஜரையும்;…..”
என்று ஓங்கி ஒலிக்கத் தான் செய்யும்.
ஒரு மனதாக அனைவரின் நலத்திற்காகவும் செய்யப்படும் பிரார்த்தனையில் தீயினில் தூசாகும் மாசுகள்; லஞ்சம் ஒழியும்.தர்மம் வெல்லும்.
*******
You must be logged in to post a comment.