கட்டுரை எண்:- 1951
Written by London swaminathan
Date: 24 June 2015
Uploaded in London at 9-32 காலை
(தமிழ் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நல்ல விஷயங்களைச் “ஷேர்” செய்யுங்கள். யார் எழுதினாரோ, யார் படம் எடுத்தாரோ அவரவர் பெயருடன் வெளியிடுங்கள். நிறைய பேர், எனது ஆயிரத்து எண்ணூறு கட்டுரைகளை எனது பெயரை நீக்கிவிட்டு, தங்கள் பெயரில் வெளியிடுவதை எனது நண்பர்களும், உறவினர்களும் எனக்குச் சுட்டிக் காட்டி வருகின்றனர். எல்லோருக்கும் நல்ல புத்தி வரவேண்டும் என்று பிரார்த்தித்து எழுதும் கட்டுரைகளையும் கூடத் திருடுபவர்கள், கொஞ்சமும் மாற மாட்டார்களோ!!! ஆனால் இப்படி ஒரு கலாசாரத்தைப் பரப்பினால், அவர்களது முதலாளிகளும் பிள்ளைகளும் கணவன்மார்களும் மனைவியருமே அவர்களை இப்படி ஏமாற்றி விடுவார்கள் என்பதை மறக்கவேண்டாம்.)
தென் இந்தியாவில் இரண்டு அதிசய சம்பவங்கள் நடந்தன. இரண்டுக்கும் நல்ல ஆதாரங்களும் உள்ளன. செங்கல் பட்டுக்கு அருகிலுள்ள மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவிலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதே போல 12 ஆண்டு சிறையில் இருந்த பத்ராசலம் இராமதாசர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முஸ்லீம் மன்னரிடம் இராம லெட்சுமணர் வந்து செலுத்திய கதையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலிருந்து பக்தர்களுக்குக் கிடைக்கும் செய்தி என்ன என்பதையும் இது போன்ற வேறு இரண்டு சமபவங்களையும் சேர்த்து நான்கு கதைகளைச் சுருக்கமாகக் காண்போம்:
கதை 1
செங்கல் பட்டுக்கு அருகில் மதுராந்தகத்தில் கடல் போலப் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி உளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை வந்துவிட்டால் இந்த ஏரி நிரம்பும். எந்த நேரத்திலும் கரையை உடைத்து ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்படும். 1795 முதல் 1799 வரை அந்தப் பகுதியில் கர்னல் லியோனல் பிளேஸ் என்பவர் கலெக்டராக இருந்தார். இப்படி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் கரையைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடு பட்டார். ஊரிலுள்ள ராமர் கோவிலில் மண்டபம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களைக் கண்டவுடன் அதையும் ஏரிக் கரையைப் பலப்படுத்த பயன்படுத்த எண்ணினார். கோவில் பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கற்களின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அப்போது ராமனே ஏரியைக் காப்பார் என்றும் அர்ச்சகர்கள் கூறிவிட்டனர்.
அர்ச்சகர்களின் வாதம் ஆங்கிலேய கலெக்டர் பிளேசுக்கு திருப்தி தரவில்லை. உங்கள் இராம பிரான் ஏரியைக் காக்க முடியுமானால் ஏன் இப்படி அடைக்கடி ஏரிக்கரை உடைகிறது? என்று எள்ளி நகையாடியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு ஏரி முழுதும் நிரம்பி வழிந்தோடும் அல்லது கரை உடையும் அபாயம் இருந்ததால் கலெக்டர் விழித்திருந்து கரைகளைப் பாதுகாக்கும் பணியில் எல்லோரையும் ஈடுபடுத்தி இருந்தார். அப்பொழுது கலெக்டர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.
ஏரிக் கரையின் மீது, கையில் வில்லும் அம்புமாக இரண்டு உருவங்கள் நடந்து சென்று கொண்டிருந்தன. பளிச்சிடும் ஒளியுடன் அவர்கள் நடந்து சென்றனர். அதற்குப் பின்னர் மழையும் நின்றவுடன் கலெக்டர் பெருமூச்சுவிட்டார். மறுநாள் இந்த அதிசயத்தை அவரே சொல்லி, வந்தவர்கள் இராம லெட்சுமணரே என்றும் உணர்ந்தார். வெள்ளைக்காரர்கள் எங்கு போனாலும் முதலில் ஊர்க் கதைகளை அறிந்து அதை டயரி அல்லது கடிதம் அல்லது புத்தகமாக எழுதிப்போட்டு விடுவர். ஆகையால் அவருக்கு இராம லெட்சுமணர் கதை, தோற்றம் எல்லாம் அத்துபடி.
இதுபோல பல அதிசய சம்பவங்கள் செங்கல்பட்டு காஞ்சீபுரம் பகுதியில் நடந்ததால் கர்னல் பிளேஸ், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் அங்குள்ள கோவில்களுக்கு நகைகளை அளித்து அவை இன்றுவரை அவர்கள் பெயரிலேயே உள்ளன. கர்னல் பிளேஸின் பெயர் மதுராந்தகம் கோவிலிலும் உளது. சாதாரண ராமர் – ஏரி காத்த ராமர் ஆகி இன்றும் நமக்கு அருள் பாலிக்கிறார்.
கர்நாடகத்தில் ஹம்பியி், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ராமர் (இந்து நாளேடு)
கதை 2
தவறு செய்தவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இது இந்து மத விதி. மக்கள் வரிப்பணத்தை எடுத்து இறைவனுக்கே கோவில் கட்டினாலும் தவறுதான். இப்படித் தமிழ் நாட்டில் தவறு செய்து, அடி உதை பட்டவர், கல்லினையும் உருக்கும் அமுதத் தேன் போன்ற திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் ஆவார். குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் கோவில் கட்டியமைக்காக, அவரைப் பாண்டிய மன்னர் தண்டித்தார். பின்னர் இருவரும் சிவனைக் காணும் பேறு பெற்றனர்.
இறைவனின் அருள் கிடைப்பதற்கான விதிகளை யாரும் அறியார். அதனால்தான் இவைகளையெல்லாம் அவனது திருவிளையாடல்—லீலா விபூதீ- என்று முத்திரை குத்தி, தலைப்பிட்டு விடுகிறோம். பிரபஞ்சத்தையே கட்டி ஆளும் இறைவனின் விதிகளை ஐன்ஸ்டைன், ஐசக் நியூட்டன் போன்றோரின் விதிகள் போல 1, 2, 3 என்று எழுதிக் காட்ட வொணாது.
இதே போல ஆந்திரப் பிரதேசத்தில் பத்ராசலத்தில் இராமதாசர் என்பவர் இராம பக்தனாக இருந்தார். தனிர் ஷா என்னும் மன்னன், அவரை வரி வசூல் அதிகாரியாக நியமித்தார். அவர் இராமன் மீதுள்ள பேரன்பின் காரணமாக வரிப் பணத்தில் ஸ்ரீ இராமனுக்குக் கோவில் எழுப்பினார். அவர் மீது சட்டம் பாய்ந்தது. 12 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. ராமன் பெயரைச் சொல்லிக் கதறினாலும் பலன் இல்லை. தற்கொலை செய்துகொள்ள திட்டம் போட்டார். ஆனால் மறு நாளைக்கு சிறைக் கதவுகளைக் காவலாளிகள் திறந்து விட்டு நீங்கள் முழு வரிப் பணத்தையும் செலுத்தியதால் அரசன், உம்மை விடுவித்தான் என்றனர். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனெனில் அவர் வரிப் பணத்தைத் திருப்பித் தரவுமில்லை. அவ்வளவு பணம் அவரிடம் இல்லவும் இல்லை.
சிறையிலிருந்து வெளியேறி மன்னனின் அரண்மனைக்குச் சென்ற போதுதான் முதல் நாளிரவு இரண்டு பேர் இராம லெட்சுமண உடை அணிந்து வந்து, முழு வரிப்பணத்தையும் இராமதாசர் அனுப்பியதாகச் சொல்லி ஒப்படைத்து விட்டுச் சென்றனர் என்பதை அறிந்தார். ஏற்கனவே இராமர் மீது பல கீர்த்தனைகளை இயற்றிய அவர், தனிர் ஷா பெயருடன் இன்னும் ஒரு கீர்த்தனையும் பாடினார். எனக்குக் காட்சி கொடுக்காமல் தனி ஷாவுக்குக் காட்சி கொடுத்தனையே! இராமா இது என்ன நியாயம்? என்று. இறுதியில் அவரும் இராமரின் தரிசனம் பெற்று வாழ்க்கையின் லட்சியத்தை ஈடேற்றினார்.
நம்பினார் கைவிடப் படார்.
“நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு” – என்று யுகப் புரட்சி செய்த பாரதி போன்ற கவிஞர்கள் பாடியது இதனாலன்றோ!
கதை-3
ஆனந்தாஸ்ரம சுவாமி ராம்தாஸ் சொன்ன கதை:
ஒரு சிப்பாய் (வீரன்) இருந்தான். அவனுக்கு ஓரிடத்தில் காவல் காக்கும் பொறுப்பு தரப்பட்டது. ஒரு நாள், அவனுக்கு இரவுக்காவல் “ஷிப்ட்” வந்தது. அப்போது ஒரு பஜனை கோஷ்டி இனிய சங்கீதத்தை இசைத்து இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் சென்றது.
காவல் பொறுப்பை மறந்துவிட்டு அவனும் அந்த கோஷ்டியில் சேர்ந்தான். நேரம் போனதே தெரியவில்லை. பொழுது விடிந்தது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றார்கள். இவன் மட்டும் காவல் காக்கும் இடத்துக்கு வந்தான். படைத் தளபதி பிடித்துக் கொண்டார். அவன் நடந்ததை உள்ளது உள்ளபடி சொன்னவுடன் கடும் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டான்.
மறுநாள் இரவும் பஜனை கோஷ்டி அவ்வழியாக சென்றது. ஒரு அழகிய பெண் மீது காதல் கொண்டவன் கதிதான் இறைவன் மீது ஆராக் காதல் கொண்டவனின் நிலையும். அன்றும் பஜனை கோஷ்டியுடன் சென்றுவிட்டு காவல் பணிக்குத் திரும்பினான். காலையில் படை அதிகாரி வந்ததும் அவனே ஓடிச் சென்று கடமை தவறியதை ஒப்புக் கொண்டான்.
அதிரிகாரியோ, “என்ன உளறுகிறாய்? நான் தான் இரவு உன்னைச் சோதிக்க வந்தேனே! எங்கேயாவது நீ மறுநாளும் இப்படிப் போய்விடுவாயோ என்று எண்ணி வந்தேன். நீ நன்றாகக் காவல் காத்தாய். இப்போது நீ போகலாம்” – என்று சொன்னார்.
பக்தனுக்கு உண்மை விளங்கியது. இறைவனே தனக்காக இப்படிக் காவல் காக்கவந்தான் என்பதை அறிந்து வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர பக்தன் ஆகிவிட்டான். மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சிவ பெருமான், வந்தி என்னும் கிழவிக்காக அடி வாங்க வில்லையா? அது போன்ற கதைதான் இதுவும்!
கதை 4
இரண்டாம் கதையில் பத்ராசல ராமதாசைக் கண்டோம். மூன்றாம் கதையில் ஆனந்தாஸ்ரம சுவாமி ராமதாசைக் கண்டோம். இதோ இந்த நான்காம் கதையில் வேறு ஒரு ராமதாஸை – சமர்த்த ராமதாசரைக் காண்போம்:–
மொகலாய சாம்ராஜ்யத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி, முஸ்லீம் மன்னர்களை நடுநடுங்கச் செய்தவன் மாவீரன் சிவாஜி. பவானி தேவியின் அருள் பெற்று இந்து சாம்ராஜ்யத்தை அவன் ஸ்தாபித்தவுடன், இந்தியாவில் 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டதை நாம் நன்கு அறிவோம்.
மாவீரன் சிவாஜி இரண்டு சந்யாசிகள் மீது பக்தி பூண்டவன். சமர்த்த ராமதாசரையும் துகாராம் சுவாமிகளையும் இரு கண்களெனப் போற்றியவன் அவன். ஆகையால் இரவு நேரத்தில் குதிரையில் ஏறி, துகாராம் கதை சொல்லும் – உபந்யாசம் செய்யும் – இடத்துக்குப் போவது அவன் வழக்கம். இதை நன்கு அறிந்த முஸ்லீம் படைகள், ஒரு நாளிரவில் அவன் போய் கதை கேட்டுக் கொண்டிருந்த மண்டபத்தைச் சூழ்ந்து கொண்டனர். பக்தி வெள்ளத்தில் மூழ்கிய சிவாஜிக்கோ ஒன்றும் தெரியவில்லை. துகாராம் சுவாமிகளோ முக்காலமும் உணர்ந்த முனிவன். உடனே சிவாஜியைக் காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்ட ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
இறைவனே சிவாஜி போல வேடம் அணிந்து பஜனை மடத்தின் வெளியே ஒரு குதிரையில் தாவி ஏறி ‘சிட்டாக’ப் பறந்தார். உடனே முஸ்லீம் படை வீரர்கள் சிவாஜியைத் தீர்த்துக் கட்டும் ஆவேசத்தோடு அந்தக் குதிரையைப் பின் தொடர்ந்தனர். அதுவோ அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. படைவீரர்கள் வழிதெரியாமல் திகைத்து நின்றனர்.
பஜனை முடிந்தவுடன், ‘அசல்’ சிவாஜி ஒரு சிரமுமின்றி அரண்மனை சேர்ந்தார். ஒற்றர்கள் மூலம் நடந்த எல்லாவற்றையும் பின்னர்தான் அறிந்தார். இறைவனுக்கும் குருவுக்கும் மேலும் ஒரு முறை நன்றி செலுத்தினார்.
—சுபம்—-
You must be logged in to post a comment.