Article No.1993
Compiled by London swaminathan
Date 14th July 2015
Time uploaded in London: காலை 9–36
டாக்டர்களையும் நீதித்துறை நிபுணர்களையும் மனுவும் வள்ளுவனும் கண்ட முறையை நாளைக்குச் சொல்லுகிறேன். இன்று மேலை நாட்டினர் அவர்களை எப்படி நோக்கினார்கள் என்பதைக் காண்போம்.
அன்புடையீர்,
ஆங்கிலக் கட்டுரையில் 15 சம்பவங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அத்தனையும் கொடுத்தால் இடம் போதா, நேரம் போதா! ஆக ஒரு சில மட்டும் இங்கே:–
டயோஜெனிஸ் (Diogenes) எனவர் 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதை. ஒரு டாக்டரும் வழக்கறிஞரும் அவரிடம் சென்று எங்களிடையே ஒரு வாக்குவாதம், சர்ச்சை! யாருக்கு முதல் மரியாதை? வரிசையில் யார் முதலில் செல்ல வேண்டும்?
தத்துவ வித்தகர் சொன்னார்:
திருடன் (Thief) முதலில் போகட்டும்; அவன் பின்னால் மரணதண்டனையை நிறை வேற்றுபவன் (executioner) செல்லட்டும்!
உடனே வக்கீல் சந்தோஷத்துடன் முதலில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்தார் டாக்டர்!
Xxxx
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ஒரு ஏழை வழக்கறிஞர் இறந்து போனார்.
எல்லா சட்டத்தரணிகளும் சேர்ந்து ஆளுக்கு ஒரு ஷில்லிங் வசூல் செய்து சவ அடக்கம் செய்ய முன் வந்தனர்.
வழக்கறிஞர் குழு ஒன்று, அந்த ஊரின் தலைமை நீதிபதியிடம் போய், “ஐயன்மீர்! நீவீர் ஒரு ஷில்லிங் கொடுத்தால் நன்றிக் கடற்பாட்டுடையராய் இருப்போம்” என்று நவின்றனர்
அதற்கு அவர் மறுமொழி கொடுத்தார்:
ஒரு ஷில்லிங்! ஒரே ஷில்லிங் தானா? ஒரு வழக்கறிஞரைப் புதைக்க ஒரே ஷில்லிங் என்றால் இந்தாருங்கள் ஒரு ‘கினி’ தருகிறேன். இன்னும் 20 வழக்கறிஞர்களை அடக்கம் செய்யுங்கள்.”
ஒரு கினி = 21 ஷில்லிங்
ஷில்லிங், கினி என்பதெல்லாம் பழைய பிரிட்டிஷ் நாணயங்கள். நம்மூர் அணா, தம்பிடி போன்றவை
Xxxx
ஒரு வழக்கறிஞர் தன்னுடைய படத்தை வரையச் சொல்லி பணம் கொடுத்தார். அவர் தனது ஒரு கையை ‘பேண்ட் பாக்கெட்’டுக்குள் வைத்துக் கொண்டு நிற்பது போல ‘போஸ்’ கொடுத்தார். படம் தத்ரூபமாக வந்தது. அதைப் பார்த்த aவரது நண்பர்கள் புகழ்ந்தனர்:
ஐயா, படத்தைப் பார்த்தால் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அதே ‘ஸ்டைல்”! அதே தோற்றம்! என்று புகழ்ந்து தள்ளினர்.
பக்கத்தில் ஒரு வயதான விவசாயி நின்று கொண்டிருந்தார்.அவர் சொன்னார்;
“எல்லாம் தத்ரூபமாக, அச்சடித்த மாதிரி அப்படியே இருக்கிறது. ஆனால் அந்த வழக்கறிஞரின் கை, மற்றொருவர் பாக்கெட்டில் இருப்பது போல வரைந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமே!”
Xxxxxx
அமெரிக்காவில், ஒரு நகரத்தில், ஊரிலேயே மிகவும் பிரபலமான ஒரு செல்வந்தர் ஒரு படுகொலை செய்துவிட்டார். சாட்சியங்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே இருந்தன. கட்டாயம் மின்சார நாற்காலியிலிருந்து (மரண தண்டணை) தப்பிக்கமுடியாது என்று தெரிந்துவிட்டது. அவரே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்கோ ஏராளமான நண்பர்கள். அவரை எப்படியும் காப்பாற்றுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டனர்.
மேலை நாடுகளில் இதுபோன்ற வழக்குகளில் ஜூரர் எனப்படும் நடுவர் பன்னிருவர் இருப்பர். அவர்களே ஒருவர், குற்றம் இழைத்தாரா அல்லது இல்லையா என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்வர். பின்னர் நீதிபதி தண்டனை என்ன என்பதை அறிவிப்பார்.
விவாதம் முடிந்து ஜூரிகளின் அறிவிப்பு வெளியாகும் நாள் வந்தது. அவர்கள் ஒருமித்த முடிவு எடுத்து குழுத்தலைவர் மூலம் அறிவித்தனர்:
“அவர் குற்றவாளி அல்ல!”
நீதிபதிக்கு வியப்பு ஒரு புறம்; ஆத்திரம் மறுபுறம்!
அட! பாவிப்பயல்களா! குற்றவாளியே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டுவிட்டானே! எப்படியப்பா, இப்படிப்பட்ட முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்டார்.
“கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றவாளி இருக்கிறானே, அவன் மஹா பொய்யன். அவன் உண்மை பேசியதே இல்லை. அவன் கொலைகாரன் என்று சொல்வதை நாங்கள் நம்பமுடியாது!”
நீதிபதியும் வாய் பேசாது அந்த செல்வந்தரை விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
Xxxx
இதோ டாக்டர்கள் பற்றி………………
ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்வதற்குத் தயாராக ஒரு நோயாளி காத்திருந்தார். அவர் படுக்கை வண்டி அருகே மற்றொரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை நோக்கி நோயாளி:
“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. ஏனெனில் என் வாழ்க்கையில் இதுதான் முதல் ஆபரேஷன்@.
அந்த இளம் பெண் சொன்னாள்:
“எனக்கும் மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. என் கணவர்தான் இன்று ஆபரேஷன் செய்யும் டாக்டர். அவருக்கும் இதுதான் முதல் ஆபரேஷன் கேஸ்!”
Xxxx
அலெக்ஸாண்டர் டுமா (Alexander Dumas) என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். அவருடைய ஊரான (Marseilles) மார்செய்க்கு பிரபல டாக்டர் (Dr.Gistal) ஒருவர் வந்து குடியேறினார். ஒருநாள் நாவலாசிரியரை விருந்துக்கு அழைத்தார். விருந்தும் முடிந்தது. அந்த டாக்டர் பெருமையாக தனது புகைப்படத் தொகுப்பை எடுத்து மேஜையில் வைத்தார். டுமாவும் அதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
டாக்டர் சொன்னார்
அன்பரே! உங்கள் எழுத்துகளும் படைப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச் சுவையாக எழுதுவதில் கைதேர்ந்தவர் நீவீர்! எங்கே என் புகைப்படத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்ப்போம்?
நாவலாசிரியர் பேனாவைக் கையில் எடுத்தார்; எழுதினார்:–
“டாக்டர் கிஸ்டார் ஊருக்கு வந்தார்
நோய்களை எல்லாம் தீர்க்க ஆசை!
மருத்துவ மனைக்கு தேவையே இல்லை!
தரைமட்டம் ஆக்கிவிட்டோம்”
இபடி ஒரு கவிதையை அவர் எழுதியவுடன் டாக்டருக்கு மிகவும் மகிழ்ச்சி!
“எழுத்தாளர்களுக்கு மற்றவர்களைப் புகழ்வது ஒன்றே தொழில்” என்று டாக்டர் பாராட்டி முடிவதற்குள் டுமா, இன்னும் ஒருவரியைச் சேர்த்தார்:
ஆனால் இடுகாடு (cemetery) எல்லாம் பெரிதாப்போச்சு!
ஆக, டயோஜெனிஸ் காலம் முதல் டாக்டர்கள் என்றால் யம தர்மன்கள், வக்கீல்கள் என்றால் கொள்ளைக்காரன்கள் என்ற கருத்து மேலை நாடுகளில் இருந்து வருகிறது. நாளைக்கு நமது பண்பாட்டில் எப்படி? என்பதைப் பகிர்வோம்.