முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்!-1

IMG_4438

Article No.2012

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 23  July 2015

Time uploaded in London : காலை 8-26

 

By .நாகராஜன்

 

பாரதியாரின் தெளிவான சிந்தனை

மகாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனையும், தீர்க்கதரிசனமும் எண்ணி எண்ணி வியக்கப்பட வேண்டிய விஷயங்கள்!

அவர் தொடாத விஷயங்களே இல்லை; பல பிரச்சினைகளில் தெளிவான தம் வழிகாட்டுதலைத் தருவது அவருடைய தனி பாணி.

 

புராதனமான பாரதப் பண்பாட்டு உலகிலேயே சிறந்த பண்பாடு என்பதையும், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் முன்பு ஹிந்துக்களாகவே இருந்தவர்கள் என்பதையும், ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை சிறந்து ஓங்க வேண்டும் என்பதையும் அவர் நன்கு விளக்கியுள்ளார்.

 

இந்த விஷயங்கள் அடங்கிய கட்டுரைகள் பொதுவாக வெளியிடப்பட்டுள்ள பாரதியார் கட்டுரைத் தொகுப்பு நூல்களில் இடம் பெறவில்லை. இதன் காரணம், இந்தக் கட்டுரைகள் விஜயா, இந்தியா ஆகிய பத்திரிகைகளின் பல இதழ்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நமக்குக் கிடைத்தவையாகும். ஆகவே அவற்றை முயன்று தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

 

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கான காரணங்களாக பாரதியார் இனம் கண்டு தெரிவிப்பது:- 1)அதர்மம் 2) சமுசயம் 3) வினாசம்

இது பற்றிய கட்டுரையை அவர் நடத்திய விஜயா பத்திரிக்கையில் ‘மொகலாய ராஜ்யத்தின் அழிவு’ என்ற கட்டுரையில் காணலாம்.

விஜயா, இந்தியா, சூரியோதயம் ஆகியவை சகோதர பத்திரிகைகள் என்பதால் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை இன்னொன்றில் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. ஆக இந்தியா பத்திரிகையில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை மீண்டும் விஜயா இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 IMG_3762

அவுரங்கஜீப்பின் நோக்கமும் முயற்சியும்

இதே கட்டுரையில் அவுரங்கசீப்பைப் பற்றிய விவரங்களையும் அவர் தந்துள்ளார். பாரதியாரின் கட்டுரையின் சில பகுதிகளைக் காண்போம்:-

“அவுரங்கஜீப் பெரிய பண்டிதன். கூர்மையான அறிவுடையவன்; சோம்பரென்பதே அறியாதவன்: எப்போதும் ஊக்கம், எப்போதும் செய்கை. ‘அரசர்களும், தண்ணீரும் ஒரேயிடத்தில் தங்கியிருக்கலாகாது. அப்படியிருந்தால் தண்ணீர் அழுகிப் போய் விடும். அரசன் கையிலிருந்த அதிகாரம் நழுவி விடும் என்று அவுரங்கஜீப் தனது மக்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.

இதை அவன் தனது ஜீவ தர்மங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தான். இப்படி எத்தனையோ விதமான நற்குணங்களிலிருந்தும் பயனில்லை. பாரத ராஜ்யம் மொகலாயர் கையினின்றும் நழுவ வேண்டுமென்று கால சக்தி நிர்ணயம் செய்து விட்டது. அவுரங்கஜீப் தனது அரிய திறமைகளையும், சிறந்த குணங்களையும் துணையாக வைத்துக் கொண்டு எப்படியேனும் பாரத நாட்டை மொகலாய அதிகாரத்தின் கீழ் சாசுவதமாக ஒருமைப்படுத்தி வைக்க வேண்டுமென்று முயற்சி செய்தான். 1658-ம் வருஷம் முதல் 1707-ம் வருஷம் வரை அவன் ஆட்சி புரிந்த ஐம்பது வருஷ காலத்திலும் ஒவ்வொரு கணமும் ‘மொகலாய ராஜ்யம் ஒருமைப்பட வேண்டும்; பலப்பட வேண்டும், சாசுவதப்பட வேண்டும்’ என்ற கருத்துடன் பாடுபட்டான். அவனுடைய ஒவ்வொரு செய்கையும் மொகலாய ராஜ்யத்தின் அழிவுக்கு ஹேதுவாயிற்று.

bharati malar thani oruvanukku

அவுரங்கஜீப்பின் அழிவு

கேடு வருமுன்பாகவே மதி கெட்டுவரத் தொடங்கி விட்டது. அவன் படித்த படிப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் விட்டது. அவனுடைய சக்திகளும் குணங்களும் நெருப்புப் பிடித்த வீட்டிலுள்ள மரக்கட்டைகளையும், எண்ணெய்க் குடங்களையும் போல அவனுடைய நோக்கம் நாசமடைவதற்கே துணையாயிருந்தன. அவனுடைய வீரியம், தீரத்தன்மை, சித்த திடம் – இவையெல்லாம் இராவணனுடைய வீரியம், தீரத்தன்மை, மனோதிடம் இவற்றைப் போல நாசத்திற்கே காரணங்களாக மூண்டன. சாக விதியுடையவனுக்கு அமிருதமும் விஷமாக ஸம்பவிக்கிறது.”

அவுரங்கஜீப் பற்றிய பாரதியாரின் கணிப்பு தான் எவ்வளது துல்லியமானது!

மேலும் அவர் கூறுவதை அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.

********************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: