Article No.2014
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 24 July 2014
Time uploaded in London : காலை 6-02
‘யுதனேசியா’ என்னும் கருணைக் கொலை பற்றி தற்காலத்தில் பத்திரிக்கைகளில் நிறைய படிக்கிறோம். யாரேனும் தீராத நோயில் நீண்டகாலம் கஷ்டப்பட்டால், அவர் இருப்பதைவிட போவதே மேல் என்று அவரை மேலுலகத்துக்கு அனுப்பிவைப்பது பல நாடுகளில் சட்டபூர்வம் ஆக்கப்பட்டுவிட்டது. அன்பின் காரணமாக ஒரு வகைப் பறவையும் இப்படி செய்கிறது! தான் பெற்ற குஞ்சுகளையே அது கொன்றுவிடுகிறது.
அமெரிக்காவில் மாக்கிங் பர்ட் mocking- bird – என்னும் பறவை வகை உண்டு. இவை கிளி, மைனா போல தான் கேட்ட ஒலிகளை அப்படியே செய்துகாட்டி விகடம் செய்யும் பறவை வகை.
இது பற்றிய அதிசயச் செய்தி இதோ:–
ஆர்ச்சிபால்ட் ரட்லெட்ஜ் என்பவர் எழுதுகிறார்: “நான் சிறுவயதில் படு சுட்டிப்பயல். அமெரிக்காவில் கரோலினாவில் வசித்தபோது பறவைகளைக் கூண்டில் அடைத்துப் போட்டு மகிழ்வேன். ஒரு மாக்கிங் பறவை வகையைப் பிடித்து கூண்டில் போட்டால் வாழ்நாள் முழுதும் அதன் இசையைக் கேட்டு மகிழலாம் என்று குஞ்சு ஒன்றைப் பிடித்துக் கூண்டில் அடைத்தேன். என்ன அதிசயம் பாருங்கள்! மறு நாள் அதன் தாய் வந்து அதற்கு உணவு ஊட்டியது.
அட நமக்கு இனி செலவும் இல்லை; கவலையும் இல்லை! ஒரு தாய் கவனிப்பது போல நாம் கவனிக்க முடியாது. அன்பைத் தடைப் போட்டுத் தடுக்கும் தாழ்ப்பாள் கிடையாதே என்று எண்ணினேன்.
அந்தோ பரிதாபம்; இரண்டாவது நாள் கூட்டில் உள்ள பறவையைக் கொஞ்சுவதற்காக எட்டிப் பார்த்தேன். அது இறந்து கிடந்தது. எனக்கு மிகவும் வருத்தம்.ஆனால் காரணம் தெரியவில்லை.
புகழ்பெற்ற அமெரிக்க பறவையியல் நிபுணர் ஆர்தர் வெய்ன் என்பவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: மாக்கிங் பறவை வகைப் பறவைகள் தங்கள் குஞ்சுகள் கூண்டில் அடைக்கபட்டால், அதற்கு விஷமுள்ள பழங்களைக் கொண்டுவந்து ஊட்டிக் கொன்றுவிடும். ஏனெனில், தனது அன்பிற்கினிய குஞ்சுகள் இப்படி அடைபட்டு, சித்திரவதைப் படுவதை அவைகளின் தாய் விரும்புவதில்லை” என்றார்.
பறவைகளிடமிருந்துதான் மனிதன் கருணைக் கொலையைக் கற்றுக் கொண்டானோ?
பறவைகளுக்குதான் எவ்வளவு சுதந்திர உணர்வு!
சோழ மன்னன் செங்கணானிடம் தோல்வியடைந்து, சிறைக்காவலில் வைக்கப்பட்ட கணைக்கால் இரும்பொறை, காவலர்கள் தண்ணீர் தர தாமதித்ததால், மானத்துடன் உயிர்துறந்தான். அதுபோல சிறை வாழ்வை விட இறப்பதே மேல் என்று எண்ணுகின்றன இவ்வகைப் பறவைகள்.
இதே போல வேடன் பிடித்த ஆண் புறா இறக்கக் கண்டு, பெண்புறாவும் தீயில் விழுந்து வேடனின் பசிதீர்த்த கதையை நாம் அறிவோம்.
கழுகு விரட்டி வந்த, புறாவுக்காக தன்னுயிரையே ஈந்த சோழர்குல முன்னோனான சிபிச் சக்ரவர்த்தி கதையையும் புறநானூற்றில் கண்டோம்.
“பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்” – என்றும் பாடுகிறோம். ஆனால் பறவைகளிடமிருந்து மனிதர்கள் கற்றது ஏராளமானவை என்பதை நம் புலவர்கள் பாடத் தவறவில்லை.
இந்திய இலக்கியங்களில் காகம், குருவி, கிளி, குயில் முதலியன பற்றிப் புலவர்கள் பாடியதைப் பற்றி எழுதினால் புத்தகங்கள் அளவுக்கு விரிவடையும்!
You must be logged in to post a comment.