அழகிய பெண்+ பெர்னார்ட் ஷா = அழகான, புத்திசாலிப் பிள்ளை!

Shaw1981CZ

Article No.2019

Written லண்டன் சுவாமிநாதன்

Swami_48@yahoo.com

Date : 26  July 2014

Time uploaded in London :7-07

 

1.இசாடொரா டங்கன் என்ற பெண்மணி, புகழ்பெற்ற கதாசிரியரும் நாடக ஆசிரியருமான பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு “அருமையான” யோஜனை சொன்னார்.

“பாருங்கள் நான் எவ்வளவு அழகு! நீங்களோ பெரும் புத்திசாலி என்று உலகமே பாராட்டுகிறது. என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். நமக்குப் பிறக்கும் குழந்தை என்னுடைய அழகையும், உங்களுடைய புத்திச் சாலித்தனத்தையும் கொண்டிருக்கும். ஏனெனில் மரபியல் கூட, தாய், தந்தையரின் அம்சங்கள் குழந்தையிடம் இருக்குமென்று ஒப்புக் கொள்கின்றது” – என்றார்

பெர்னார்ட் ஷா சொன்னார்: “உண்மைதான்! தாய் தந்தையரின் அம்சங்கள் இருக்கும் என்பது உண்மையே. ஒருவேளை என்னுடைய அழகையும், உன்னுடைய புத்திசாலித்தனத்தையும் கொண்டுவிட்டால் என்ன செய்வது? ஆகையால் திருமணமே வேண்டாம்” என்றார்.

Xxxx

2.தனக்குத் தானே எழுதிய தாக்குதல் பேட்டிகள்!

பெர்னார்ட் ஷா புகழ் பெறாத, ஆரம்ப காலத்தில் அவரைக் கடுமையாகத் தாக்கியும் , அவமதித்தும் மாலைப் பத்திரிகைகளில் பேட்டிகள் வரும். எல்லோரும் அதைப் படித்துவிட்டு இப்படி ஒரு ஆள் இல்லவே இல்லை. கற்பனை செய்து எழுதுகிறார்கள். உண்மையில் ஒரு ஆள் இருந்தால் பேட்டி காண வருபவனை மாடியிலிருந்து உருட்டி விட்டிருப்பார் அல்லது போலீஸையாவது கூப்பிட்டிருபார் என்றெல்லாம் மக்கள் பேசத் துவங்கினார்கள். நல்ல பிள்ளை நாயகமாக நடிக்கிறாரே! இது உண்மையாக இருக்கவே இருக்காது என்றனர்.

உண்மை என்னவென்றால், அந்தப் பேட்டிகள் அனைத்தும் பெர்னார்ட் ஷாவாலேயே எழுதப்பட்டன!!

Xxx

shaw2

3.வாழைப்பழத்தில் ஊசி!

ஒருமுறை ஒரு நாடகத்துக்கு இவரை விமர்சனம் எழுதச் சொல்லி டிக்கெட் அனுப்பி இருந்தனர். நாடகமோ சுத்த மோசம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி ஒரு விமர்சனம் எழுதினார்:-

“நான் ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டேன். ஒரு நாடகத்துக்குப் போயிருந்தேன். பொதுவாக விமர்சகர்களுக்குக் கொடுக்கப்படும் விஷய அட்டை எதையும் தரவில்லை. ஆகையால் நாடகத்தின் பெயரே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆமை வேகத்தில் நாடகம் நகர்ந்தது. பாதி நாடகத்துக்கு எடுத்துக் கொண்ட நேரத்தை வேறு ஒருவராக இருந்தால் ஐந்தே நிமிடத்தில் அந்த விஷயத்தைச் சொல்லி இருப்பார்கள். இப்ஸென் போன்றோர் , பத்து வருஷத்துக்கு முன்னரே சொல்லியிருப்பார். போகட்டும்.

நாடக இடைவேளை நேரம் வந்தது. சரி! கொஞ்சம் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என்று நடந்தேன். நாடகம் பார்க்கிறோம் என்பதே மறந்து வீட்டுக்கே வந்துவிட்டேன்! நாடகத்தின் முடிவைப் பார்க்கமல் விமர்சனம் எழுதுவது முறையன்றே! அவ்வளவுதான்; நாடகத்தை ஏற்பாடு செய்தோருக்கு ஒரு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்”

(நாடகம் படு சுமார் என்பதை இப்படி அங்கதமாக எழுதினார்)

Xxx

4.இன்னா செய்தாரை ஒறுத்தல்…….

பழைய புத்தகக் கடையில் ஷாவின் நூல்!

ஒரு முறை ஜி.பி.ஷா, ஒரு பழைய புத்தகக் கடையில் நுழைந்தார். அவருடைய நாடகத் தொகுப்பு அங்கு இருப்பதைப் பார்த்துத் திடுகிட்டார். காரணம், இது அவரே கையெழுத்திட்டு அவரது நண்பருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம். உடனே அந்த நண்பரைப் பழிவாங்கத் திட்டமிட்டார். பழைய புத்தகக்காரனிடமிருந்து அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கினார். “மீண்டும் அன்புடன் ஜி.பி.ஷா” என்று கையெழுத்திட்டு, அந்த பழைய நண்பருக்கு அனுப்பிவைத்தார்!

அனுப்பி “வைத்தார்” – என்பதைவிட அனுப்பி வைதார்! என்பதே பொருத்தம்!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல் – குறள் 314

shaw3

Xxx

5.வாங்கிக் கட்டிக்கொண்டார்!

லேடி ராண்டால்ப் என்பவர் இவரை விருந்துக்கு அழைத்திருந்தார். அதற்கு வரமுடியாதென்று சொல்லி, ஷா ஒரு பதில் கடிதம் அனுப்பினார்:–

அன்பரே? என் வழக்கங்களை மாற்றும்படி என் மீது தாக்குதல் தொடுத்தீரே! நான் என்ன தவறு செய்தேன்?

என்று ஷா எழுதினார்.

லேடி ராண்டால்ப் வில்லாதி வில்லி! சூராதி சூரி! அவர் எழுதினார்:-

“அன்பரே; உம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி யான் ஒன்றும் அறியேன். உம்முடைய நடை உடை பாவனை அளவுக்கு அது மோசமாயிராது” — என்று நம்புகிறேன்.

–தொடரும்…………………..

Xxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: