Written by S NAGARAJAN
Date : 31 July 2015
Post No. 2030
Time uploaded in London : 7-51 am
By ச.நாகராஜன்
பாரதியாரின் “சிவாஜி” கவிதை
1910 பிப்ரவரி முதல் தேதியிட்ட விஜயா இதழில் பாரதியாரின் முஸ்லீம்கள் பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம்.
இதற்கு முன்பாகவே 1906ஆம் ஆண்டு இந்தியா இதழில் தொடர் கவிதையாக வெளியிடப்பட்டக் கவிதைத் தொடர் தான் ‘சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது’ என்ற கவிதைத் தொடர்.
1906ஆம் ஆண்டு நவம்பர் 17, 24, டிசம்பர்1, 6 ஆகிய தேதியிட்ட இந்தியா இதழ்களில் தொடராக இது வெளி வந்தது.
இன்னும் வரும் என்ற குறிப்புடன் வெளி வந்த இதன் தொடர்ச்சி வெளிவரவில்லை.
190 வரிகள் உள்ள கவிதையில் பாரத நாட்டின் சிறப்பு, துருக்கரின் அதர்மச் செயல்கள், அவர்கள் இன்னல்கள் தருவது அவர்களை வெல்லும் புனிதப் போரில் பங்கு கொள்ள –மிலேச்சரை வெற்றி கொள்ள – தூயவரையும், வீரர்களையும் அழைப்பது, அநாரியத் தன்மையை அடையாதே, ஈடிலாப் புகழினோய், எழுகவோ எழுக என அர்ஜுனனை கண்ணபிரான் கீதையை உபதேசித்து விழிப்புறச் செய்து பற்றலர் தமையெலாம் பார்க்கிரையாக்கியது என வரிசையாக விவரிக்கும் அற்புத நடையைக் காண்கிறோம்.
சிவாஜியின் வீர உரை என்றும் இந்திய நாட்டினருக்குப் பொருந்தும் வகையில் கவிதை வரிகள் ஒளிர்கின்றன.
அவுரங்கஜீபின் அழிவுக்குக் காரணம் அதர்மம் என்று மகாகவி கூறியுள்ளதை நோக்கி விட்டு அந்த அதர்மங்கள் முகலாயர் காலத்தில் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் மகா கவிஞர்.
“ஆலயம் அழித்தலும், அருமறை பழித்தலும்,
பாலரை, விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்
கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்
சாத்திரத் தொகுதியைத் தழல்படுக்கின்றார்
கோத்திர மங்கையர் குலங் கெடுக்கின்றார்
எண்ணில, துணைவர்காள், எமக்கிவர் செயுந் துயர்
கண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்
திண்மையை அழித்து பெண்மையிங் களித்தனர்
பாரதப் பெரும்பெயர் பழிப் பெயராக்கினர்
சூரர் தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”
அதர்மத்தின் முழுப் பட்டியலை இதை விட வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்?
எழுகவோ எழுக!
“மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?”
என்ற சிவாஜி மஹாராஜாவின் வார்த்தைகளில் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார் மகா கவிஞர்.
“மொக்குள் தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்”
என்பதைச் சுட்டிக் காட்டும் கவிஞர் “எழுகவோ எழுக” என அறைகூவல் விடுக்கிறார்.
அற்புதமான இந்தக் கவிதை பாரதியார் இந்தியா எப்படி எழ வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையைத் தெளிவாக விளக்கும் ஒரு கவிதை.
தர்ம பாரதம்
அதர்மப் பட்டியலுக்கு எதிராக தர்ம நாடு பாரதம் எப்படி இருக்கும்?
ஆலயங்கள் உயிர்ப்புடன் வாழும், அருமறை தழைக்கும்,
பாலரும், விருத்தரும் போற்றப்பட்டு வாழ்வர்
பசுக்கள் வாழ்விக்கப்படும்
மாதர் கற்புடன் இருக்க மறையவர் வேள்வி எங்கும் நடக்கும் சாத்திரத் தொகுதி தழைக்கும்
கோத்திர மங்கையர் குலம் ஓங்கும்
கண்ணியம் இருக்கும், ஆண்மை ஓங்கும்,
பொருள் செழித்து வளரும், மருள் ஒழியும்
திண்மை பெருகும் ஆண்மை மிளிரும்
பாரதப் பெரும்பெயர் உலகெங்கும் போற்றப்படும்
சூரரின் வீரியம் கூடும் மேன்மை பெருகும்
நம் ஆரியர் உலகத் தலைமை கொள்வர்
என்றல்லவா இப்படி தர்ம பாரதம் விளங்கும்!
ஆனால் துருக்கர் விதைத்த மருள் இன்னும் இந்த நாட்டை விட்டு நீங்காமல் இருப்பது நமது தவத்தின் குறைவே ஆகும்!
இந்தக் கவிதையின் குறிப்பில் மகாகவி ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதை பலமுறை வற்புறுத்தியுள்ளதை நினைவு கூர்கிறார்.
சிவாஜி கூறியுள்ள வீர வசனங்களை நியாயப் படுத்தும் விதமாக மகாகவி பாரதியார் இந்தக் குறிப்புரையில் கூறியுள்ளதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
அத்தோடு அதர்மத்தின் கோரப் பிடியில் ஹிந்து சொத்துக்கள் கொள்ளை போன விவரத்தையும் ஒரு சிறிது நோக்குவோம்.
இதைப் படிக்கும் நேயர்கள் 190 வரிகள் கொண்ட இந்தக் கவிதையை ஒரு முறை படித்து கவிதை கூற வரும் பாரத சக்தியைத் தம்முள் ஏற்றிக் கொண்டால் இனி வருவதை நன்கு படிக்க ஏதுவாகும்.
–தொடரும்
You must be logged in to post a comment.