Research Article No. 2040
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 3 August 2015
Time uploaded in London : – 17-51
(This has been published in English already)
கந்த சஷ்டிக் கவசம் தெரியாத அல்லது கேட்டறியாத தமிழர்கள் இருக்க முடியாது.தேவராஜ சுவாமிகள் அருளிய இக்கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. வட இந்தியாவில் இதே போல துளசிதாசர் இயற்றிய ஹன்மான் சாலீசா மிகவும் பிரசித்தமானது. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அனுமன் பெயரைச் சொல்லிய மாத்திரத்தில் பூதப் பிசாசுகள் நடுங்கி ஓடி விடும். அதே போல கந்த சஷ்டிக் கவசம் சொன்னால் பேய், பிசாசுகள், பில்லி, சூனியம் அண்டாது.
கந்த சட்டிக் கவசத்தில் வரும் வரிகள், பில்லி சூனியம் பற்றி மிகவும் விளக்கமாக விளம்புகிறது. இதே நம்பிக்கை பழங்கால எகிப்திலும் இருந்தது. மத்தியக் கிழக்கில் இப்பொழுது சிரியா, இராக் நாடுகள் உள்ள சுமேரியாப் பகுதியிலும் இருந்தது. இதற்கெல்லாம் மூலம், அதர்வண வேதம் அதன் பத்தாவது மண்டலத்தில் இந்த விஷயங்கள் வருகின்றன. கேரளத்தில் இப்பொழுதும் மாந்த்ரீகச் சடங்குகள் நடக்கின்றன. நம்மூர் அரசியல்வாதிகள் கூட எதிரிகளை ஒடுக்கவோ, மடக்கவோ, ஒரேயடியாக ஒழிக்கவோ இத்தகைய “மிளகாய் யாகங்களை” நடத்துகின்றனர்.
வேத கால மக்கள் உலகெங்கிலும் பரவியபோது நல்ல விஷயங்களை எடுத்துச் சென்றது போலவே இது போன்ற “ஆபிசாரப் பிரயோகங்களையும்” எடுத்துச் சென்றனர்.
இங்கிருந்து போனதற்கு என்ன ஆதாரம்? ரிக் வேத கலம் முதல் இன்று வரை இது மட்டுமின்றி எல்லாச் சடங்குகளையும் நாம் மட்டுமே செய்து வருகிறோம். இடையில் வந்த கலாசாரம் என்றால் என்றோ மறைந்து போயிருக்கும்.
எகிப்திய பேஸ்
இப்பொழுது என்னைப் பொன்றோர் லண்டனில் குடியேறி ஒவ்வொரு தலை முறையிலும் எப்படி பழைய வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோமோ அப்படி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய இந்துக்கள் விட்டு விட்டனர். ஆனால் அவை அனைத்தும் எகிப்திய பபைரஸ் (பேப்பர்) தாளிலும், சுமேரியக் களிமண் பலகைகளிலும் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.
“பில்லி சூனியம்
பெரும்பகை அகல
……………………………….
ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
……………………………………………………………………..
இப்படி நாம் கவசம் சொல்லுகிறோம். விநாயக கவசத்தில் சுருக்கமாக மாரணம் என்ற ஒரு சொல்லில் இவை அடக்கப்படுவிட்டது. பில்லி, சூனியம், ஏவல் வைப்போர், இப்படி எதிரிகளின் வீட்டில் மயிர், எலும்பு, நகம், பொம்மைகள் ஆகியவற்ரைப் புதைத்து வைத்து அவர்களை ஒடுக்குவர். இதைத் தான் தேவராய சுவாமிகள் விளக்கமாகப் பாடியுள்ளார்.
எகிப்தில் பல சிலைகள் மூஞ்சி சிதைக்கப் பட்டுப் மூளியானதற்கு இத்தகைய சடங்குகள் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதி யுள்ளனர். ஒருவருடைய உருவத்தைச் செய்து அதன் மீது மந்திரம் ஏவி அதை உடைத்தால் அவர் அழிந்து போவார் அல்லது மனம் உடைந்து போவார் என்ற நம்பிக்கை உலகெங்கிலும் நிலவியது.
எகிப்தியர் கீழ்கண்ட முறைகளைக் கையாண்டனர்:-
1.சாபம் இடும் மந்திரங்களைச் சொல்லுவது
2.களிமண் அல்லது மெழுகு பொம்மைகளைச் செய்து, சில சடங்குகளுக்குப் பின்னர், அவைகளை உடைப்பது
3.துர் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு கெட்ட சொப்பனங்களை உண்டாக்கி பயமுறுத்துவது
4.ஐஸிஸ் என்னும் தேவதையைக் குறித்தே பெரும்பாலான உச்சாடனங்கள் சொல்லப் படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக பேஸ் என்னும் குள்ள தெய்வம் உதவி செய்யும். இது நல்லதுக்கும் பொல்லாததுக்கும் உதவும் விகடகவி, பபூன் போன்ற உருவமுள்ள தெய்வம். ஆண்குறி பெரிதாகக் காட்டப் பட்டிருக்கும். திருஷ்டி பொம்மை போல நாக்கு வெளியே தொங்கும். அதைப் போலவே அவலட்சணமாக இருக்கும். நன்மை, தீமைகளுக்கு உதவும் மாந்த்ரீக தெய்வம். நம் பண்பாட்டில் கணபதி விக்னங்களை உருவாக்கவும் செய்வார், உடைக்கவும் செய்வார் என்பது போல.
இது தவிர எகிப்தியர்கள் ஏராளமான வகை தாயத்துகளைப் பயன்படுத்தினர். மம்மி என்னும் சவங்களுடன் நிறைய தாயத்துக்கள் கிடைக்கின்றன. நாம் யந்திரத் தகடுகளில் எழுதி அதை தாயத்துக்குள் போட்டுக் கழுத்தில் தொங்க விடுவதுபோல எகிப்தியர், புதிய பபைரஸ் புல் காகிதத்தில் எழுதி அதை தாயத்தாக வைத்துக் கொண்டனர். நாம் சங்கரன் கோவில் முதலிய கோவில்களிலும் மாரியம்மன் கோவில்களிலும் உடல் உறுப்புகளை வெள்ளியில் செய்து காணிக்கை உண்டியலில் போடுவது போல எகிப்தியர்களும் செய்தனர். எனது முந்தைய ஆராய்ய்சிக் கட்டுரைகளில் இது போன்ற பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன். இந்த நம்பிக்கை கிரேக்க நாடு வரை சென்று பரவியது.
அதர்வ வேதம் பத்தாவது மண்டலம் சொல்லும் விஷயங்கலை தமிழ் மாறன் எழுதிய, “அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு” (பக்கம்175-182) நூலில் காண்க.
கிரீஸ் நாட்டில்
வெளிநாட்டுக் காரர்கள் சரித்திரம் எழுதியபோது பிதகோரஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ ஆகியோரைக் காட்டி உலகில் மிகவும் முன்னேறிய மக்கள் கிரேக்கர்கள் என்று புகழ்ந்து வைத்துள்ளனர். அவர்களுடைய மூட நம்பிக்கைகளையோ, அட்டூழியங்களையோ பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் உலகில் யாரும் அடிமைப்படுத்தாத சுதந்திர நாடு கிரேக்கம்.
ஆனாலங்கும் மேற்கூறிய எல்லா நம்பிக்கைகளும் இருந்தன. சாக்ரடீஸ் விஷம் அருந்தி சாவதற்கு முன்னர். ஆத்ம நண்பன் கிரீட்டொவை அழைத்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு மறக்காமல் கோழியடித்துக் கும்பிட்டு விடு என்று சொல்லிவிட்டுச் செத்ததை முன்னரே எழுதி இருக்கிறேன்.அவர் சேவல்கோழி காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் செய்திருந்தார்.
கிரேக்கர்கள் ஹெகதி என்னும் தெய்வத்தை முச்சந்திகளில் நிறுத்திவைத்து பேய் பிசாசு, துர் தேவதைகளுக்குப் பரிகாரம் செய்தனர். ஹெகதி என்பது சக்தி என்ற சொல்லின் திரிபு. நாம் முச்சந்திகளில் இரவில் போகப் பயப்பட்டது போல அவர்கள் முச்சந்திகளில் உணவு வைத்து வழிபட்டனர். அது நள்ளிரவில் முச்சந்திகளில் ஊளையிடும் நாய்களுடன் தோன்றும் என்று நம்பினர். இப்பொழுது எல்லா, எகிப்திய, சுமேரிய, கிரேக்க தெய்வங்களையும் மியூசியங்களில் காணலாம்.
ரிக் வேதத்தில் பூஷன் என்னும் தெய்வம் சாலைத் தெய்வமாகவும் , வழிப்போக்கர்களுக்கு உதவும் தெய்வமாகவும் போற்றப்படுகிறது.
சுமேரியப் பண்பாட்டில்
கண் திருஷ்டி விழுந்தால் கெடுதி என்ற நம்பிக்கை சுமேரியாவில் இருந்தது. நாம் வீட்டு வாசல்களிலும் கடை வாசல்களிலும் பூதம் போல, அவலட்சணமான ஒரு உருவத்தை வைக்கிறோம். அல்லது த்ருஷ்டி கழிய பூசனிக்காய் மீது வரைந்து தொங்க விடுகிறோம். சுமேரியர்கள் இதே போல பசசுஜு என்னும் அவலட்சண தேவதையை வாயில்களில் தொங்கவிட்டனர். போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் – என்பது போல அதை தாயத்தாகச் செய்து கழுத்திலும் மாட்டிக் கொண்டனர். அவர்களும் இந்துக்களைப் போல சாபங்கள் கொடுத்தனர். தீய சக்திகளை ஒழிக்க இரவு பூஜைகளைச் செய்தனர். அவர்களுடைய உச்சாடனங்கள், அதர்வ வேத மந்திரங்கள் போல இருக்கும்.
பெண்களை வசீகரிக்க மந்திரங்கள் வைத்திருந்தனர். இப்பொழுது வெளிநாடுகளில் காதலர் தின அட்டைகளில் ஒரு இருதயத்தை அம்பு (மன்மதன் மலர் அம்பு) துளைப்பது போல வரைந்து உலகெங்கிலும் பயன்படுத்துகின்றனர். இது அதர்வ வேத மந்திரத்தில் உள்ள வர்ணனை என்பதை முன்னொரு கட்டுரையில் தந்தேன். எல்லா உச்சாடனங்களையும், அதர்வ வேத மந்திரங்களையும் ஒப்பிட்டால் நாம்தான் மூலம்/ வேர் என்பது வெள்ளிடை மலை யென விளங்கும்.
எகிப்தில் பேஸ், சுமேரியாவில் பசுஜு. கிரேக்கர்கள் இவைகளின் பெயருக்கு இணையான கிரேக்க தெய்வங்களைச் சொன்னார்கள்.
Source:
Dictionary of the Ancient Near East by British Museum
Ancient Egypt by David Silverman
Atharva Vedam (Tamil Book) by Tamilmaaran
Dictionary of World Myth by Roy Willis
Encyclopaedia of Gods by Michael Jordan
Pictures from various sources
You must be logged in to post a comment.