Research Article No. 2085
Written by London swaminathan
Date : 19 August 2015
Time uploaded in London :– 16-42
புத்தரும் பூர்ணாவும்
புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் தர்மப் பிரசாரம் செய்யப் புறப்படுவதற்கு முன்னால் புத்தரின் அனுமதியைக் கோரினார்.
உடனே அவர்கள் இருவரிடையே நடந்த சம்பாஷனை பின்வருமாறு:–
“பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்?
குருவே, சூனப்ராந்தம் என்ற இடத்தில்
அதுவா? அங்குள்ள்வர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்?
அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன்.
சரி, அப்படி கைகளால் குத்து விட்டால்?
அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து என் தர்மப் பிரசாரத்தைத் தொடருவேன்.
அது சரி, ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாயாம்?
அதனால் என்ன, ஆளைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன்; என் கடன் பணி செய்துகிடப்பதுவே!
சரி, உன்னைக் கொன்றுபோட்டுவிட்டால்……?
மிகவும் மகிழ்ச்சியுடன் இறப்பேன்; அட இவ்வளவு சீக்கிரம் நிர்வாண நிலையை (முக்தி) அடைய உதவினார்களே! என்று அகம் மகிழ்வேன்; உளம் குளிர்வேன் என்று பூர்ணா பதிலிறுத்தார்.
புத்தர், “பூர்ணா, உன் இஷடப்படியே செய்; நீ பரிபூரண பக்குவம் பெற்றுவிட்டாய்” என்று சொல்லி பொறுமையின் சின்னமான பூர்ணாவுக்கு ஆசிவழங்கினார்.
ஐசக் நியூட்டன்
புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் (வைரக் கல்) என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீவைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்ட்ன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள்.
உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது.
நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்றுசொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார்.
சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே”- வெற்றி வேர்க்கை
நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள்
அகராதி பிடித்த மனைவியால் ஆங்கில அகராதி எரிந்தது!
டாக்டர் தாமஸ் கூப்பர் என்பவர் முதலாம் எலிசபெத் மஹாராணி காலத்தில் பெரும் ஆங்கில அகராதியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முன்னரே இருந்த அகராதியில் மேலும் 33,000 சொற்களைச் சேர்க்க அவர் எண்ணினார். இதற்காக அவர் எட்டு ஆண்டுக் காலம் கஷ்டப்பட்டுச் சேர்த்த 33,000 சொற்களைக் காகிதங்களில் எழுதிவைத்தார். அவரது மனைவியோ எழுத்து வாசனை தெரியாத பிடாரி, கொடுமையின் சின்னம். அவர் வெளியே போயிருந்த நேரத்தில் அவரது நூலத்திற்குள் சென்று அத்தனை காகிதங்களையும் குவித்து சொக்கப்பனை கொளுத்தி மகிழ்ந்தாள்.
அந்த முட்டாள் பெண்மணி, தன் கணவர் படித்துப் படித்துப் பாழாய்ப் போய்விடுவாரோ என்று பயந்தாள்! அவர் திரும்பிவந்து பார்த்தபோது அவருக்குப் புரிந்துவிட்டது. எனினும் மனைவியிடம் யார் செய்த வேலை இது? என்று கேட்டார். ஏன்? நான்தான் செய்தேன்! என்றாள் துணிச்சலாக. அவர் சொன்னார், ஓ தீனா, எனக்கு பெரும் தொல்லை செய்துவிட்டாயே – என்று. பின்னர் மீண்டும் எட்டு ஆண்டுகளுக்கு மேஜையில் உட்கார்ந்து பொறுமையாக எழுதி அகராதிப் பணியை முடித்தார்.
பொறுமையின் சின்னம் தாமஸ் கூப்பர் என்றால் மிகையாகாது.
You must be logged in to post a comment.