Article No. 2106
Written by S NAGARAJAN
Date : 29 August 2015
Time uploaded in London :– 12-06
ச.நாகராஜன்
பாரதி புதையல் மூன்றாம் தொகுதி
ரா.அ.பத்மநாபனின் தமிழ்த் தொண்டு
மிக மிக அருமையான இந்த நூலை பாரதி பக்தர் ரா.அ.பத்மநாபன் தொகுத்து 1975ஆம் ஆண்டு பாரதி தினத்தன்று வெளியிட்டிருக்கிறார். இது அமுதநிலையம் பிரைவேட் லிமிடட்டின் 248வது நூல். 321 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் அன்றைய விலை ரூ 12.
பதிப்புரையில் ரா.அ.பத்மநாபன் கூறுவது:- “பாரதியாரின் எழுத்துகளில் இதுவரை வெளியாகாதவை அல்லது எப்போதோ பத்திரிகைகளில் வெளி வந்து மறைந்து கிடப்பவை – இவற்றைத் தேடித் திரட்டி, நூல் வடிவில் தொகுத்துத் தருவதே “பாரதி புதையல் நூல் வரிசையின் நோக்கமாகும். இவ்வரிசையில் இது மூன்றாவது தொகுதியாகும். முதல் தொகுதி 1958-இலும் இரண்டாம் தொகுதி 1959-இலும் வெளியாயின.”
தமிழ் மக்களுக்கு இதை விடச் சிறந்த சேவையை எப்படிச் செய்ய முடியும். ரா.அ.பத்மநாபனுக்கு தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.பாரதியின் புகழ் பரப்பும் பணியே இவரது வாழ்க்கைப் பணி.
இந்த நூலில் பாரதியாரின் வெளியிடப்படாத கவிதைகள் நான்கும், கட்டுரைகள் இருபத்தி ஒன்பதும் உள்ளன. இத்துடன் மிக முக்கியமான தொகுப்பாக பாரதியாரைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் உடன் பழகியவர்களும் எழுதிய 26 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது ஒரு அரிய கஷ்டமான காரியம். எங்கெங்கோ எப்போதோ பிரசுரிக்கப்பட்டவற்றை ஒரே நூலில் படிக்க முடிகிறது.
பல்வேறு சுவையான சம்பவங்கள். சம்பவங்களில் உடன் இருந்தோர் அதை விவரிக்க, அவற்றைப் படிக்கும் போது அதிகாரபூர்வமாக அவற்றை உணர முடிகிறது.
R A Padmanabhan
சோழனும் கம்பனும்
மாமா பாரதியார் என்று வ.உ.சி எழுதிய கட்டுரையில் தன்னைச் சோழனாகவும் பாரதியாரைக் கம்பனாகவும் நினைக்க வைத்த சந்திப்பை உளமுருக விவரிக்கிறார். மாஜினியின் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்து வந்த விசுவாசப் பிரமாணச் செய்யுளை பாரதியார் ஆங்கிலத்தில் படித்துக் காட்ட, வியப்புற்ற வ.உ.சி அதைத் தமிழ்ப்பாட்டாகத் தர வேண்டினார். உடனே அதே இடத்தில் கவிதை ஒன்று உருவானது. அது தான் ‘பேரருட் கடவுள் திருவடியாணை’ என்று தொடங்கும் கவிதை.
நாராயண ஐயங்காரின் கட்டுரைகள்
சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் கடை கண்ட நிபுணரான பண்டிட் எஸ்.நாராயண ஐயங்கார் பாரதியாரின் நண்பர். அவர் 9-9-1956, 16-9-1956 தினமணி சுடர் இதழ்களில் எழுதிய கட்டுரைகள் காசியிலிருந்து பாரதியாருடனான நாராயண ஐயங்காரின் நட்பை விளக்குகிறது.
கங்கைக் கரையில் அமர்ந்து ஷெல்லியின் பாடல்களைப் படித்து அர்த்தம் சொல்வார் பாரதியார். ஒரு சமயம் சரஸ்வதி பூஜையன்று பெண் கல்வி வேண்டுமென்பது பற்றி அவர் பேச அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ஶ்ரீ சீதாராம சாஸ்திரிகள் அதை ஏற்க மறுக்க பாரதியாரோ இன்னும் ஆணித்தரமாகத் தன் கருத்தை வலியுறுத்தினார். காசியில் இருந்த போது அவருக்கு வயது 18. நாராயண ஐயங்காருக்கு வயது 16. ஏராளமான சுவையான சம்பவங்களை விவரிக்கிறார் நாராயண ஐயங்கார்.
வ.வே.சு. ஐயரும் பாரதியாரும்
புதுவையில் இந்தியா வெளியிடும் பொறுப்பை ஏற்றவர் ,மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார். இவர் பாரதியாரின் புதுவை வாழ்க்கையில் உடன் இருந்தவர். வ.வே.சு ஐயரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு இவர் 1942 மார்ச் கலைமகள் இதழில் எழுதிய கட்டுரை நூலில் இடம் பெற்றுள்ளது. ஶ்ரீ அரவிந்தர் ரிக்வேதம் படிக்கும் போது அவரோடு பாரதியாரும் ரிக் வேதம் படித்தார்.ஆர்யா என்ற அரவிந்தரின் மாதப் பத்திரிகைக்கு பாரதியார் விஷயதானம் செய்து வந்தார். சதுரங்கம் ஆடும் போது ஏப்போதும் ஐயருக்கு எதிர்க் கட்சியில் பாரதியார் இருப்பார். எப்போதும் ஐயர் தான் ஜெயிப்பார். பாரதியாருக்கு ரோஷம் பிறந்து விடும்.மறுபடியும் ஐயரை ஆடச் சொல்லி ஓரிரு முறை தான் ஜயித்த பின் தான் எழுந்திருப்பார்.
குவளை கிருஷ்ணமாச்சாரியாரின் அரிய கட்டுரைகள்
பாரதியாரை யானையிடமிருந்து காப்பாற்றிய குவளை கிருஷ்ணமாச்சாரியார் பல சுவையான சம்பவங்களை விவரமாக எழுதியுள்ளார். 1938இல் அவர் ஹிந்துஸ்தான் வாரப் பதிப்பில் எழுதிய கட்டுரை இது.பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா, பார் நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் என்று பாரதியார் எழுத ஆரம்பித்த பாடல்கள் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு அறுபத்தாறு பாடல்களுடன் நின்றது.
பாரதியாருக்கு இறந்து போன அவரது தந்தை உருவத்தையும் தாய் உருவத்தையும் காண்பித்த கோவிந்தசாமி என்னும் சித்தரைப் பற்றி குவளை கிருஷ்ணமாச்சாரியார் 1939 கலைமகள் எழுதிய சுவாரசியமான கட்டுரையும் இதில் இடம் பெறுகிறது.
இப்படி முக்கியமானவர்களின் எழுத்துக்களின் தொகுப்பைப் படிக்கும் போது பாரதி பக்தர்கள் பரவசமடைவதில் வியப்பே இல்லை.
பாரதியாரைக் கற்கவும் புரிந்து கொள்ளவும் விரும்புவோர் உடனடியாகப் படிக்க வேண்டிய நூல் இது.
எழுதிய அனைவரும் தமிழ் உலகிற்கு ஒரு அரிய தொண்டைச் செய்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.
************