Written by S NAGARAJAN
Date : 31 ஆகஸ்ட் 2015
Post No. 2111
Time uploaded in London : 12-11
By ச.நாகராஜன்
பதிப்புகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!
மஹாகவி பாரதியார் போன்ற ஒரு பெரும் கவிஞனை காலம் எப்போதோ ஒரு முறை தான் தோற்றுவிக்கிறது
வாழ்ந்த காலத்தில் அவரைக் கொண்டாடாமல், அவரைச் சற்றே வறுமையில் வாட விட்டு விட்டது தமிழ்ச் சமுதாயம்.
ஆனால் இப்போது அவரது பெருமை நன்கு புரிந்து விட்ட நிலையில் காலத்தை வென்ற கவிஞன் என்று அவன் போற்றப்படும் நிலையில் அவனுக்குத் தமிழர்கள் சிலர் இழைக்கும் கொடுமைக்கும் துரோகத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டே ஆக வேண்டும்.
மஹாகவிக்கு துரோகமா என்று விழிகளில் வியப்பைத் தேக்க வேண்டாம்.
அவர் நமக்கு விட்டுச் சென்ற படைப்புகளை உள்ளது உள்ளபடி வெளியிடாமல் தங்களின் ‘கெட்ட’ நோக்கத்திற்கு இசைந்த வகையில் வெளியிடுவதைத் தான் இங்கு துரோகம் என்று குறிப்பிடுகிறோம்.
அறியாமல் செய்தாலும் பிழை பிழை தான்! ஆகவே பாரதி ஆர்வலர்கள் இந்தப் பதிப்பாளர்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல பதிப்பையே தேடிப் பிடித்து வாங்க வேண்டும். சரியான தலைப்புகள், சரியான பாடம் தெரிந்த போது தனது பிரதியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மனம் போன படி மாற்றலாமா?
பல்வேறு வித நோக்கங்கள்! அதற்கு பலி மஹாகவி! அது தான் வருத்தமாய் இருக்கிறது.
முதலில் எழுத்துக்களை மாற்றி வெளியிடுதல் தவறல்லவா. ஷ, ஸ, ஹ, ஜ போன்ற எழுத்துக்களைக் கையாளுவதில் அவருக்குத் தடை இருந்ததே இல்லை. ஸ்வ சரிதை என்பதை பல பதிப்புகள் சுய சரிதை என்று மாற்றி வெளியிடுவதைப் பார்க்கலாம்.
எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அவரது தீர்க்கமான சிந்தனை பற்றிய அருமையான சம்பவங்கள் உண்டு, (அவற்றை எனது தனிக் கட்டுரையில் காணலாம்)
ஆகவே அவர் எழுதிய எழுத்துக்களை அப்படியே அவரது படைப்புகளில், கதை, கவிதை, கட்டுரையில் வெளியிட வேண்டும்.
அடுத்து தலைப்புகளை மாற்றுதல்.
ஶ்ரீ கிருஷ்ணன் மீது ஸ்துதி என்பது அவர் கொடுத்த தலைப்பு, கண்ணனை வேண்டுதல் என்பது புதிய தலைப்பு. எளிமைப் படுத்துகிறார்களாம்! மனம் போன படி தலைப்பு, வார்த்தைகளை ‘எளிமைப் படுத்த’ இவர்கள் யார்?” ஸ்வ சரிதை என்பது 1948ஆம் ஆண்டு பாரதி பிரசுராலயம் கொடுத்திருக்கும் தலைப்பு. சிலர் இதை சுயசரிதம் என்றும் கனவு என்றும் தலைப்பு கொடுத்து பிரசுரிக்கின்றனர்.
கவிஞனின் உள்ளத்தைத் தெரிவிக்கும் தலைப்புகளையே மாற்றலாமா?
அடுத்து மஹாகவி ராகம், ஸ்வரக் குறிப்புகளைத் தன் பாடல்களுக்குத் தந்துள்ளார். அதை விடுத்து பாடல்களைப் பதிப்பது இன்னுமொரு தவறு!
வார்த்தைகளையே மாற்றுவது அல்லது மனம் போன படி ‘தமிழ்ப் படுத்துவது’, சில வரிகளை மறைப்பது அல்லது மாற்றுவது என்று பாரதியார் பல ‘தமிழர்களிடம்’ படாத பாடு படுகிறார்.
சீர் பிரித்து பிரசுரிப்பது ஒரு வழக்கமாக ஆகி விட்டது இப்போது; மர்ரே கம்பெனியின் கம்ப ராமாயணப் பதிப்பின் நேர்த்தியைக் கண்டோர் “தாமும் அதுவாகப் பாவித்து” பாரதியாரை “சீர் பிரிக்கிறார்கள்”! இதிலும் பல விதம்!!
பரலி சு.நெல்லையப்பர் ஆங்கிலேய அதிகாரிகள் பாரதியாரின் பாட்டுக்களை தடை செய்து விடுவார்கள் என்ற நோக்கத்துடன் நாட்டுப் பாட்டு என்ற நூல் தலைப்பில் அவரது கவிதைகளை வெளியிட்டார்; பரப்பினார். இது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் சுய லாபங்களுக்காக அவரை மாற்றுவது தான் வேடிக்கை!
தமிழினம் காப்பதாக ‘தம் இனம்’ காப்போர்!
சில ‘இஸம்’களிடம் அவர் மாட்டிக் கொண்ட விந்தையையும் பல பதிப்புகளில் பார்க்கிறோம். கம்யூனிஸ்டுகளின் பாரதி ஒரு விதம்! திராவிட– ஆரியம் என்ற பிரிவினைக் கொள்கை கொண்டோரின் பாரதி இன்னொரு விதம்! பார்ப்பன எதிரிகள் என்று தம்மை பகிரங்கமாகச் சொல்லி கொள்வொர் பாரதியைத் துணைக்கு அழைத்து அவருக்கு ‘ட்ரீட்மெண்ட்’ கொடுப்பது இன்னொரு விதம்!
இத்தனைக்கும் மீறிய மகாகவி அவர். அவரை உள்ளபடி தேடிக் கண்டு பிடிப்பது அவர் மறைந்த நூறு ஆண்டுகளுக்குள்ளேயே மிகவும் சிரமமான காரியமாக ஆகி விட்டது.
1936ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பாக தேசீய கீதங்கள் என்று தலைப்பிட்ட நூலை பாரதி பிரசுராலயம்,திருவல்லிக்கேணி, சென்னை வெளியிட்டுள்ளது. இந்த நூலைப் பார்த்து இன்றுள்ள பலரது பதிப்புகளையும் பார்க்கும் போது வேதனை தான் பிறக்கிறது. முதலில் தமிழை இப்படிப்பட்ட வக்கிரம் பிடித்தவர்களிடமிருந்து காக்க வேண்டும்.
தமிழினம் காப்போம், தமிழைக் காப்போம் என்ற கோஷத்தை முன் வைத்து ‘தம் இனத்தை மட்டும்’ – வாரிசுகளைக் காக்கும் இவர்களை இனம் கண்டு இவர்களிடமிருந்து தமிழர்கள் முதலில் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?!
பாரதியாரைத் தம் பக்கம் தவறாகத் துணைக்கு இழுப்பவர்கள் பாரதியாருக்கு மரியாதை செய்பவர்களா அல்லது துரோகிகளா?
சிந்திப்போம்! பாரதியாரைக் காப்போம்!!
**************
You must be logged in to post a comment.