Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.
Wriiten by London swaminathan
Date : 9 September 2015
Post No. 2140
Time uploaded in London: – காலை 9-01
மஹாபாவங்களைச் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் போய் நீராடியவுடன் அந்தப் பாபங்கள் நீங்கி புண்ணிய ஆத்மாக்களாக வெளியே வருகின்றனர். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக கங்கையில் சேர்ந்த பாபங்களை எல்லாம் கங்கா தேவி என்ன செய்வாள்? அவளிடம் சேர்ந்த பாபம் எப்படிப் போகும்? இதற்கு கம்பன் விடை சொல்கிறான். ராமபிரான் போன்ற புண்யாத்மாக்கள், கங்கையில் நீராடினால், அந்தப் பாபங்கள் கங்கா தேவியிடமிருந்து அகன்றுவிடும்.
கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா
பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்தை
உன்னின் நீகினென் உய்ந்தனென் யான் என்றாள்
–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:–என்றும் அழியாத ஜீவநதியான கங்காதேவி ராமனை வணங்கி, “ இவ்வுலகத்தில் உள்ளவர்கள், தாம் செய்த – சொல்ல இயலாத பெரும் பாவங்களை என்னில் மூழ்கி நீக்கிக் கொள்வார்கள். என்னிடம் சேர்ந்த அந்தப் பாபங்களை எல்லாம், இன்று நீ நீராடியதன் மூலம் நான் போக்கிக் கொண்டேன்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல!
கங்கை என்னும் கடவுள் திருநதி
தங்கி வைகும் தபோதர் யாவரும்
எங்கள் செல்கதி வந்தது என்று ஏமுறா
அம் கண் நாயகற் காண வந்து அண்மினார்
–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:–கங்கை என்னும் தெய்வத் திருநதிக் கரையில் வாழும் தவ சீலர்கள் அனைவரும், தவத்தின் மூலம் நாங்கள் சென்று அடைய வேண்டிய புகலிடமான தெய்வம் இங்கேயே வந்துவிட்டது என்று அழகிய விழிகளை உடைய ராமனைக் காண்பதற்காக அவனிருக்கும் இடத்திற்கு சென்றனர்.
‘கங்கை என்னும் கடவுள் திருநதி’, ‘கன்னி நீக்க அருங் கங்கை’, ‘தள்ளும் நீர்ப் பெருங் கங்கை’, ‘வெண் நிறக் கங்கை’, ‘கங்கை அரும் புனல்’, ‘விரி திரைப் புனல் கங்கை’, ‘நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி’ – என்றெல்லாம் கங்கையை வருணிக்கிறான் கவி சக்ரவர்த்தி கம்பன்!
நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி
–என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா?
கங்கையோ கன்னி இளம் பெண். அவளுக்கு நரைத்த கூந்தல் எப்படி வரும்? அலைகள் வீசி, நுரை பொங்குவதால், அது நரைத்த கூந்தலுடைய ஒரு பெண் போலத் தோன்றுகிறதாம்! இது கம்பனின் கற்பனை! பொதுவாக நதிகளைக் கன்னி இளம் பெண்ணாகவும், கட்டழகிகளாகவும் வருணிப்பது இந்திய மரபு. காவிரியையும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியையும் இளங்கோ அடிகள், சிலப்பதிகாரத்தில் வருணிப்பதைப் படித்தோருக்கு இது நன்கு விளங்கும்.
கம்பன் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது!!!
–சுபம்–
You must be logged in to post a comment.