Don’t Reblog it for at least a week; don’t use pictures.
Article written by S NAGARAJAN
Date: 19th September 2015
Post No: 2171
Time uploaded in London :– 17-49
(Thanks for the pictures)
ச.நாகராஜன்
நம்பிக்கை தரும் ஹிந்து நூல்கள்
உலகினருக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவதற்கு ஹிந்து நூல்களைப் போல வேறெந்த நூல்களும் இல்லை.
உன்னை நீயே உயர்த்திக் கொள்ளலாம் என்பதே அவற்றின் சாரம்.
கர்மத்தால் கட்டுண்டவன் தான் நீ என்று சொல்லும் போதே நல்ல கர்மங்களைச் செய்து உன்னை உயர்த்திக் கொள் என்று அது ஓங்கிச் சொல்கிறது.
விதி உன்னை விடாது என்று சொல்லும் போதே அந்த விதியை உருவாக்குபவன் நீயே என்று அடித்துச் சொல்கிறது.
பல ஜன்மங்களில் முன்னேற வாய்ப்புண்டு; உடனடியாக முன்னேற்றத்தை நோக்கி முதல் அடியை நீ வை; நான் உன்னை நூறு அடிகள் முன்னேற்றுவேன் என்ற ஆறுதலான அவதாரங்களின் வாக்கியத்தை அது நம் முன் வைக்கிறது.
பிறப்பு ஒன்றே ஒன்று தான் என்றால் ஏன் மனிதனுக்கு மனிதன் வாய்ப்புகளில் ஏன் இந்த வேறுபாடு? அது போகட்டும் பிறந்து ஒரு நாளில் இறக்கும் ஒரு குழந்தைக்கும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல நல்ல, கெட்ட காரியங்களைச் செய்பவனுக்கும் எப்படி சமமான தீர்ப்பு வழங்கப்பட முடியும்? ஒரே ஒரு நாள் வாழ்ந்த குழந்தை தீர்ப்பு வழங்கும் நாளுக்காக எல்லையற்ற காலம் வரை ஏன் காத்திருக்க வேண்டும்!
இறைவனின் நீதி இது என்பதை ஏற்பதில் மனம் சலிப்படைகிறது.
‘சே, போ’, மனம் போன படி நடப்பேன்; நடப்பது நடக்கட்டும் என்பது வாழ்க்கை முறையாகிறது.
மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இது தான்!
ராமரின் சந்தேகங்கள் (636 பாக்களில்)
ராமர் வசிஷ்டரிடம் வருகிறார். நியாயமாக ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் ஏற்பட முடியுமோ அந்த சந்தேகங்களை அறிவியல் யுகமான நமது இன்றைய நாளுக்கும் பொருந்தும்படி கேட்கிறார்.
அவரது கேள்விகள் 19 அத்தியாயங்களில் 636 ஸ்லோகங்களில் இடம் பெறுகிறது – யோக வாசிஷ்டம் நூலில்.
அற்புதமான இந்த நூல் மனிதனுக்குக் காலத்தை வென்ற இரகசியத்தைக் கூறும் நூல். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைச் சரியானபடி கூறும் அருமையான நூல் இது. 32000 ஸ்லோகங்கள் உள்ள யோக வாசிஷ்டம் இப்போது நாம் படிக்கும்படியான அளவுக்குச் சுருக்கமாக எந்தக் கருத்தையும் விடாமல் சுருக்கப்பட்டுள்ளது.
நூலின் நடை எளிமையானது. சம்ஸ்கிருதம் படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் எளிய நடை; காம்பீர்யமான வார்த்தைகள்.
முயற்சியா, விதியா எது வெற்றியைத் தரும்?
உதாரணத்திற்கு மனித முயற்சி, விதி பற்றிய சில ஸ்லோகங்களின் அர்த்தத்தைத் தமிழில் இங்கு பார்ப்போம்.
பௌருஷ மஹிமா (மனித முயற்சியின் மஹிமை)
பௌருஷேன சர்வமாஸாத்யதே (முயற்சியினால் அனைத்தும் கிடைக்கும்).
எதையும் எப்போது வேண்டுமானாலும் அடைய மனித முயற்சியே தேவை. போதுமான முயற்சி செய்த பின்னர் ஒருவன் அடைய விரும்புவதை அடைகிறான்.
கர்மா, தைவம் (விதி) என்று இரண்டைச் சொல்கிறார்களே!
கர்மம் என்பது ஒருவனின் முந்தைய செயல்களைக் குறிப்பதே ஆகும்! ஆனால் ஒருவனின் தற்போதைய முயற்சி முன்னால் செய்ததை மீறிச் செயல்படும்.
தைவம் அதாவது விதி என்பது, அறியாதவர்களுடைய மனக் கற்பனையே. பார்க்க முடியாத ஒன்று அது. விதி என்பதே இல்லை!
தைவம் ந வித்யதே I (தைவம் – விதி என்று ஒன்று இல்லை)
தைவமஸத்ஸதா I (விதி என்பது இல்லாத ஒன்று)
தைவம் ந கிஞ்சித்குருதே கேவலம் கல்பனேத்ருஷி I (விதி ஒன்றையும் செய்வதில்லை. கற்பனையே அதைச் செய்கிறது)
ஒரு விவசாயி தனது நிலத்தில் கஷ்டப்பட்டு பல மாதங்கள் உழைக்கிறான். அறுவடைக் காலம் நெருங்குகிறது. ஆனால் அறுவடை நாளுக்கு முதல் நாள் அடைமழை பெய்கிறது. பயிர்கள் நாசமாகின்றன.
இது விதியா? இதன் காரணம் விதி தானா?
இல்லை; உழைப்பு, மழை என்பதில் மழை உழைப்பை விட வலியதாக இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
நாம் செய்யும் அனைத்துமே ஏன் வெற்றி பெறுவதில்லை?
பதிலை ராமருக்கு வசிஷ்டர் கூறுகிறார்:” இது ஏன் என்றால் வெற்றி என்பது உழைப்பை மட்டும் கொண்டு வருவதில்லை. காலம், வெளி, செல்வம் (Time, Space and Wealth) போன்ற காரணங்களும் இணைந்தே வெற்றியைத் தருகின்றன.
பலன் எப்போதும் எது வலிமையானதோ அதைக் கொண்டு அமைகிறது!
காலம் வேறு இருக்கிறது. சில சமயம் உடனடி பலன் கிடைக்கிறது; சில சமயம் சில காலம் கழித்துக் கிடைக்கிறது. ஆனால் பலன் விளையும் என்பதில் சந்தேகமில்லை.
உடனடியாக நடந்ததற்கும் தாமதமாக ஆனதற்கும், முட்டாள்களே விதியே காரணம் என்கின்றனர்.
கர்மத்தின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வோம். (ஓ, ராமா!)
கர்மம் இரு வகைப்படும்; ஒன்று ப்ரக்தனா (பழையது); மற்றொன்று இஹிகா (தற்போது நடப்பில் உள்ளது)
தற்போதைய கர்மம் பழையதை வெல்லும் ஆற்றல் கொண்டது. இரண்டும் இரண்டு செம்மறி ஆடுகளைப் போலச் சண்டையிடும்; வலியது வெல்லும்! ஆகவே தற்போது வலுவுள்ளவனாக ஆவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
கடந்த காலம் நிச்சயமாக தற்போதுள்ள நிகழ்காலத்தை விட வலுவுள்ளதாக இருக்க முடியாது. நேற்று சாப்பிட்டதால் வயிற்றில் ஏற்பட்ட அஜீர்ணத்தை இன்று மருந்து சாப்பிட்டுக் குணப்படுத்துவதில்லையா?
ஏழ்மையாக இருந்தாலும் சரி, பல இன்னல்கள், தடைகள் இருந்தாலும் சரி, எவன் ஒருவன் அவற்றையும் மீறித் தன் முயற்சி மூலம் அவற்றை வெல்கிறானோ அவனே பாராட்டத் தகுந்தவன்!
வசிஷ்டரின் இந்த உபதேசம் நலிந்தோர்க்கு நம்பிக்கை ஊட்டும் ஒன்றல்லவா!
மூன்றாம் உலக நாடுகள் என்று அங்குள்ளோர் தாழ்ந்து இருக்க வேண்டுமென்பதில்லையே! உலகம் முழுவதற்குமான ஒரு நூல்; ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு நூல் – யோக வாசிஷ்டம்!
கடந்த காலத்தை மீறி நிகழ்காலத்தில் வலிமையுடன் பாடுபடு என்பதே வசிஷ்டரின் உபதேசம்.
எளிய சம்ஸ்கிருத பதங்கள்; படிப்பதற்கே ஆனந்தம்! முயற்சி, தெய்வம் ஆகிய இவை, இதர பல விஷயங்களுடன் எப்படிப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் சேர்ந்து அறிய வேண்டும்.
ஆகவே, யோக வாசிஷ்டம் முழுவதுமாகப் பயில்வோம்; காலத்தை வென்ற உயர் இரகசியத்தை அறிவோம்!
குறிப்பு: யோக வாசிஷ்டம் பயில விரும்புவோ அருமையான கீழே குறிப்பிடப்படுள்ள இந்த இரு நூல்களை வாங்கலாம்:
- Quintessence of Yogavasishtha by C.S. Gupta, Satsanga Seva Samithi Gandhi Bazar, Bangalore -4 (174 பக்கங்கள்)
- The Vision and the way of Vasistha by Samvid (2461 ஸ்லோகங்களை சம்ஸ்கிருத மூலத்திலும் ஆங்கிலத்திலும் தரும் இந்த நூலைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை; 583 பக்கங்கள்; வாழ்நாள் முழுவதும் பக்கத்திலேயே வைத்திருந்து படிக்க வேண்டிய நூல்)
*********
You must be logged in to post a comment.