திருக்குறள் தெளிவு
மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by S NAGARAJAN
Date: 26 September 2015
Post No: 2189
Time uploaded in London :– 6-15 AM
(Thanks for the pictures)
ச.நாகராஜன்
அரசவையில் வள்ளுவர்
வள்ளுவர் வருகிறார் என்ற செய்தி கேட்டு மன்னம் ஓடோடி வந்து அவரை அரசவைக்குள் அழைத்துச் சென்றான். அப்பா! அரசவை சற்று நேரத்திற்குள் ததும்பி வழிந்தது. வள்ளுவர் மஹிமை!
மன்னர் வள்ளுவரை நோக்கிக் கரம் கூப்பினார். கேட்டார்:-“ஐயனே! நீண்ட நாளாக ஒரு சந்தேகம்! பெறுதற்கரிய மனிதப் பிறப்பை அடைந்தோர் ஏராளம். இந்த மனிதர்களில் எத்தனை வகை உண்டு?”
“மன்னா! மனிதர்களின் வகைகள் தானே தெரிய வேண்டும்! இதோ மக்களே பதில் சொல்வர்.“ என்ற வள்ளுவர், “ பல கிராமங்களின் வழியே வந்தேன் அல்லவா! பல கிராமங்களிலிருந்தும் மக்களில் பலர் என்னுடன் இங்கு வந்துள்ளனர்.” என்று அரசவையில் மக்களோடு குழுமி இருந்த அவர்களைச் சுட்டிக் காட்டினார்.
இறை என்று வைக்கப்படும்
அவர்களில் ஒருவரை அழைத்த வள்ளுவர், “நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது? சொல்லுங்கள்!” என்றார்.
மன்னர், ராணி உட்பட அனைவரும் அவரை நோக்கினர்
“மன்னருக்கு வணக்கம். தெய்வப் புலவருக்கு வணக்கம்” என்று வணக்கம் செலுத்திய அவர் சொல்லத் தொடங்கினார். “இதுவரை நடந்திராத ஒரு சம்பவம் நேற்று எங்கள் கிராமத்தில் நடைபெற்றது. ஊரை ஒட்டி ஓடும் நதியில் பெரு வெள்ளம்! வெள்ள நீர் கிராமத்தில் புகுந்து விட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர், பாதிப்புக்கு உள்ளாகாதோர் என்று இரு பிரிவுகளாக கிராமமே பிரிந்து மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. கொள்ளையர் சிலர் வேறு ஊருக்குள் புகுந்து அகப்பட்டதைக் கொள்ளையடிக்க நினைத்தனர்..”
மன்னர் பதைபதைத்தார். “அப்புறம்?” அவர் குரலில் வேகமும் அவசரமும் தொனிக்க மன்னரை இடைவெட்டி கிராமவாசி தொடர்ந்தார்.
“மன்னா! கவலைப்பட வேண்டாம். ஊரில் நீங்கள் அமைத்திருக்கும் கிராமத் தலைவர்கள் உடனடியாக இரு பிரிவுகளையும் இணைத்தனர்.. அவரவர்க்குத் தேவையானதை ஒரே நாழிகையில் கொடுத்து உதவவே கிராமமே ஒன்றானது. கிராமத்தில் இருந்த அரசு அதிகாரிகள் உடனடியாக வெள்ளம் உள் புகாமல் தடுப்புச் சுவரை எடுத்தனர். அதிகாரிகளில் இன்னொரு பிரிவினர் உணவுக்கு ஏற்பாடு செய்து அனைவருக்கும் வயிறார உணவைப் பரிமாறினர். கிராம காவல் படையினரோ கொள்ளையரை அடித்துப் பிடித்து இதோ உங்கள் முன்னிலையில் கொண்டு வந்துள்ளனர். அவர்களை தளபதி வசம் ஒப்புவித்து விட்டோம்.”
“இப்படி நிலைமை ஒரே நாளில் சீர் பட என்ன காரணம்?” வள்ளுவர் அந்த கிராமவாசியை நோக்கிக் கேட்டார்.
“ஐயனே! நம் மன்னரின் ஆட்சியில் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எதையும் கோராமலேயே நேரம் அறிந்து நிலை அறிந்து அரசு அதிகாரிகள் உதவினர். எங்களிடம் பொருள் பெறுவதில்லை அவர்கள்! தங்கள் கைப்பொருளையே செலவழித்தனர். அதுவே காரணம்”
வள்ளுவர் அனைவருக்கும் கேட்கும்படி கூறினார்:
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்” (குறள் 388)
மக்கள் ‘ஹாஹா’வென்று கூவினர். அரசன் இருக்கையிலிருந்து ராணி பின் தொடர எழுந்தோடி வந்து வள்ளுவரின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.
“ஐயனே! இறை என்பதைத் தலைவன் என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்” என்று அவன் முடிப்பதற்குள், “எங்கள் மன்னா! எமக்கு இறைவா! நீ வாழ்க” என்று மக்கள் எழுந்து நின்று ஒரே குரலாகப் பெரு முழக்கம் செய்தனர்.
வள்ளுவர் புன்சிரிப்பு பூக்க, “அவர்கள் இறை என்பதற்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ!” என்றார்.
தெய்வத்துள் வைக்கப்படும்
வள்ளுவர் அனைவரையும் அமரச் செய்தார். இன்னொரு கிராமத்திலிருந்து வந்தவரை அழைத்தார்.” நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது?”
“ஐயனே! எங்கள் கிராமத்தில் நூறு வேலி நிலம் கொண்ட பெரும் பணக்காரர், -சிற்றரசருக்கு நிகரானவர் -இருக்கிறார். ஆனால் அவர் எதையும் தனக்கெனக் கொள்ளாமல் மக்களாகிய எங்களுக்கே தருகிறார். காலை முதல் இரவு வரை எங்கள் வாழ்க்கையை நல்வழிப் படுத்துவதே அவரது ஒரே தொழில். அவர் நடப்பதைப் பார்த்து நாங்கள் நடக்கிறோம். நேற்று வெள்ளம் போக்க அவர் அனைத்தையும் செய்தார். ஒரு கேடும் நிகழவில்லை. உரிய நேரத்தில் மாலையில் கோவில் பூஜையையும் முடித்து வழக்கம் போல சாவடியில் இராமாயணம் கூறவும் வந்தார் ஐயா!
நேற்றைய தினத்தை எங்களால் மறக்கவே முடியாது. பிரளயம் வந்தது என நினைத்தோம். அது பாற்கடல் ஆனது” என்றார்.
வள்ளுவர் இப்போது கூறினார்:-
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்” (குறள் 50)
‘ஹா ஹா’ என்றனர் மக்கள். ஒருவரைத் தலைவனாக வைத்தார். இன்னொருவரை தெய்வமாக வைத்தார்.
உயிர்வாழ்வாருள் வைக்கப்படும்
அடுத்து..
இன்னொரு கிராமத்திலிருந்து வந்த ஒருவரை அழைத்தார். அவர் கேளாமலேயே தன் கிராம நிகழ்வைச் சொல்ல ஆரம்பித்தார்.
“இதோ, எங்கள் அருகில் நிற்கிறாரே, இவர் ஒரு சாது! எங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்து இவர் தேகம் பிறருக்காகவே இருக்கிறது. மருத்துவத் தொண்டு செய்வார். கோவில்களில் உழவாரப் பணி செய்வார். கூட்டு பிரார்த்தனைக்கு மக்களை அழைப்பார். ஏழைகளுக்கு உணவைத் தயார் செய்து தருவார். இவரிடம் பணம் ஏதுமில்லை என்றாலும் இதையெல்லாம் இவரால் செய்ய முடிகிறது, இவரது மூச்சு விடுவது ஏனையோருக்காகவே, ஐயனே!”
வள்ளுவர், ‘அந்த ‘உயிர் வாழ்வானை’ மன்னனுக்கு முன்னர் கூட்டி வா’ என்றார்.
‘உயிர் வாழ்வானா’? மன்னன் முகத்தில் சிறிது சந்தேகம் தோன்ற, “ஐயனே! அவர் தான் உயிர் வாழ்வானா? எல்லோரும் தானே உயிர் வாழ்பவர்கள்?!” என்றான்
வள்ளுவர் கூறினார்:
ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் (குறள் 214)
மக்கள் ‘ஹாஹா’ வென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறருக்கு சேவை செய்பவனே உயிர் வாழ்பவன். ஏனையோர் இருந்தும் இறந்தவரே! உயிருடன் இருந்தாலும் செத்த பிணமே!
அலகையா வைக்கப்படும்
இறுதியாக இன்னொரு கிராமவாசியை அழைத்தார் வள்ளுவர்.
அவர் தன் கிராமக் கதையைக் கூறலானார்:”ஐயனே! அவமானம்! சொல்லவே நாக்கு கூசுகிறது! எங்கள் கிராமத்தில் புல்லறிவு படைத்த ஒரு இளைஞன் இறைவனே இல்லை என்கிறான். தன்னுடன் அறியாப் பிள்ளைகளைத் திரட்டிக் கொண்டு தில்லை நடராசரையும் ஶ்ரீரங்கநாதரையுமே வன்முறையில் மிரட்டுகிறான்! கோவிலை இடி என்கிறான். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவனுக்கு எவ்வளவோ நல்லுபதேசம் செய்தோம். அவன் பெற்றோரும் உறவினரும் கூட அவனைத் துறந்து விட்டனர்.”
அவன் முடித்தவுடன் வள்ளுவர் கூறினார்:-
“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்” (குறள் 850)
ஆஹா! உலகோர் அனைவரும் உண்டு என்று சொல்லும் ஒன்றை இல்லை என்பான் வையத்தில் பேயாக வைக்கப்படுவான்.
மக்கள், ‘வள்ளுவர் வாழ்க’ என்று முழக்கம் செய்தனர்.
மன்னனோ, “ஐயனே ஒருவனை இறையாகவும் ஒருவனை தெய்வமாகவும் இன்னொருவனை உயிர் வாழ்பவனாகவும் ஏனோயோரை நடைப்பிணமாகவும், இன்னொருவனை பேயாகவும் வைத்தீர்களே!” ஆஹா! மனிதரில் இத்தனை வகையா!” என்று புளகாங்கிதத்துடன் கூறினான்.
மக்களில் பதரும் மிருகமும்
“ஐயனே! எனது அரசின் கீழ் உள்ள மக்களில் மோசமானவர் யாரேனும் உண்டோ, ஐயனே?”
வள்ளுவர் கூறினார்:
“பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்” (குறள் 196)
ஆஹா! பயனற்ற சொல் சொல்பவன் மக்களில் பதர் போன்றவனா? அவனை ஒதுக்கித் தள்ள வேண்டும். மனிதருள் பதரைச் சொல்லி விட்டாரே!
“ஐயனே! மக்களில் மக்களாக இல்லாதவர் யாரேனும் உண்டோ?”
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரோடு ஏனை யவர்” (குறள் 410
ஆஹா! எந்தக் கேள்விக்கும் வள்ளுவரிடம் இருக்கிறது பதில். இலங்கு நூல் கற்காதவன் மிருகமே!
முறையுடன் மக்களைக் காப்பவன் தலைவன். அவனே மக்களால் இறை எனப்படுவான்.
வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வம்.
பிறருக்காக வாழ்பவனே உயிருடன் இருப்பவன். தனக்காக மட்டும் வாழ்பவன் இருந்தும் இறந்தவனே!
உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன் பேய்!
பயனற்ற சொல் பேசுபவன் பதர்.
நல்ல நூல் கற்காதவன் மிருகம்!! மனிதருள் இத்தனை வகையா?!
இலங்கு நூல் என்கிறாரே! இலங்கு நூல் எது?
அவர் கையில் இருந்த ஒரு சிறிய சுவடிக் கட்டை மன்னன் நோக்க அனைவரும் அதை நோக்கினர்.
“ஐயனே! நாங்கள் அனைவருமே உயர் நிலைக்குச் செல்ல ஆவலுடன் உள்ளோம்! உங்கள் கையில் உள்ள நூலை எங்களுக்குத் தர முடியுமா? அதில் இன்னும் ஏராளமான வகைகளைப் பற்றியும் வாழ்வாங்கு வாழும் முறை பற்றியும் நாங்கள் அறிய முடியுமே!”
வள்ளுவர் புன்முறுவலுடன் திருக்குறளை மன்னனிடம் அளிக்க கூட்டம் ஆரவாரம் செய்தது.
“இதல்லவோ தெய்வச் சுவடி! நாம் அனைவரும் இதைக் கற்று அதன்படி வாழ்வோம். உயர்வோம்!” என்று சபத மொழி கூறினான் மன்னன்.
“நன்று, நன்று” என்றனர் நல்லோர்! வள்ளுவர் சிரித்தார். வான் சிரித்தது. இலேசான தூறல் வீச, பூமித் தாய் மனம் குளிர்ந்தாள்.
திருக்குறள் வாழ்க! தெய்வத் தமிழ்ப் புலவர் வாழ்க!!
**************
You must be logged in to post a comment.