நவராத்திரியை ஒட்டி விசேஷ கட்டுரை
Compiled by ச.நாகராஜன்
Post No.2237
Date: 12 October 2015
Time uploaded in London: 9-02 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
By ச.நாகராஜன்
சித் ரூபிணி பைரவி
சிவே மனோஹரி
பக்த ஜனப்ரிய
பாலே தயாபரி
*
பார்வதி சங்கரி
காளி சுபகரி
பகவதி சாம்பவி
தேவி அருள் புரி
15-12-76 5 p.m.
தந்தையார் கைப்பட எழுதிய கீதம்
இது எனது தந்தையார் (V.Santanam) 15-12-1976 அன்று மாலை ஐந்து மணிக்கு இயற்றிய கீதம்.
தினமணியின் மதுரை இதழின் பொறுப்பாசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய அவர் பன்முகம் கொண்ட ஒரு உயர் மனிதர்.
ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளுக்குப் பாத்திரமானவர். சென்னை, ஆபட்ஸ்பரிக்கு அழைத்து ஒரே மேடையில் இருக்கும் போது பாபா அவரை பேசுமாறு அருளினார்.
1965 நவம்பர் மாதம் புட்டபர்த்திக்கு மதுரை அன்பர்கள் ஏராளமானோர் அவரவர் கார்களில் கிளம்பி புட்டபர்த்திக்குச் சென்றோம். நவம்பர் 23ஆம் தேதி பிறந்த நாளுக்கு முன்னர் அங்கே சென்று சேர்ந்தோம். அங்கே தான் இயற்றிய கீதங்களை பாபாவிடம் சமர்ப்பித்தார் என் தந்தை.
அந்தப் பாடல்கள் பல்வேறு சங்கீத விற்பன்னர்களால் பல மேடைகளில் நன்கு இசை அமைத்துப் பாடப்பட்டன. பாரத் ரத்னா திருமது எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் சகோதரரான திரு எம்.எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.
இவற்றில் 108 கீதங்கள் பின்னர் தொகுக்கப்பட்டு சத்ய சாயி சேவா சங்கம், மதுரையினால் 1966இல் ‘ஸாயி கீதங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.
*
அதில் எனது தந்தையார் எழுதியுள்ள முகவுரையைக் கீழே தருகிறேன்.
முகவுரை
இந்த கீதங்களைப் புனைந்தவர் ஶ்ரீ இதய சாயி. எழுதுகோல் போன்ற கருவி தான் நான். நூறு நாட்களில் நூற்று எட்டு பாட்டுகளும் நாமாவளிகளும் ஶ்ரீ இதய சாயி கூற நான் எழுதினேன். சில கீதங்கள் ராகம், மெட்டுகளுடன் வந்தன. சிலவற்றிற்கு சங்கீத வித்வான்கள் மெட்டுகள் அமைத்துக் கொடுத்தனர்
“அவருக்கு சங்கீத ஞானமே கிடையாது. சாஹித்ய ஞானம் கிடையாது. எழுதியதெல்லாம் அவரே மறந்து போய் விட்டார். அவரை வேண்டுமானால் கேளுங்கள்” என்று பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா இன்னொருவரிடம் இந்த கீதம் எழுதப்பட்ட விதம் பற்றி கூறினார். பகவானின் பாதகமலங்களில் இந்த கீதங்களை சமர்ப்பித்த போது மேற்சொன்ன மொழிகளைப் புகன்று, “பதங்கள் பரதநாட்டியம் போல நடை போட்டுச் செல்கின்றன” என்று அருளினார் பகவான்.
“இரண்டு இரண்டு பாட்டுக்களாக எழுதி பகவான் பாத கமலங்களில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்” என்று ஒரு நண்பர் பகவான் முன்னிலையில் எழுதியவரை நோக்கிக் கூறினார். உடனே பகவான் குறுக்கிட்டு “ஒவ்வொரு கீதமும் எழுதப்படும் போதே முன்னரேயே சமர்ப்பித்தாகி விட்டது” என்று ஆசீர்வதித்தார். அந்த பகவானின் பாத கமலங்களில் மீண்டும் இந்த கீதங்களை சமர்ப்பிக்கின்றேன்.
என்ன ராகம், என்ன மெட்டுகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். பதங்களை மட்டும் யாரும் மாற்றவே கூடாது. அது பகவத் அபசாரமாகி விடும்.
இந்த பாட்டுகள் யாவும், இது சம்பந்தப்பட்ட எல்ல உரிமைகளும் மதுரை சத்திய சாயி சேவா சங்கத்துக்கே சமர்ப்பணம்.
மதுரை வெ.சந்தானம்
1-3-’66
*
நூலில் முதல் கீதமாக இடம் பெறும் மகா கணபதி பற்றிய கீதத்தைக் கீழே காணலாம்.
மகாகணபதி
ஹம்ஸத்வனி –ஆதி
பல்லவி
மகா கணபதே நமஸ்தே கஜமுக
மகா சுகிர்த வர வல்லப கணபதி
அ.ப.
தேஹி ஸித்தி புத்தி மங்கள நாதா
ஓங்கார ரூபா விக்னஹர பாதா
சரணம்
கவிகள் நாயகா ஹரன் சிவை புத்ரா
கானம் கல்வி கலை வர அருள் நேத்ரா
நமோ விநாயகா தெய்வநாயகா
பாதகத்துயர் போக்கி சாதக வாழ்வருள்
*
ஒவ்வொரு நவராத்திரியும் ஒன்பது நாட்களிலும் சத்தியசாயி சேவா சங்கம், மதுரையில் சங்கீத கச்சேரி, பாபா பற்றிய சொற்பொழிவுகள், அஷ்டோத்திரம், பஜனை, பூஜை என்று அனைத்து ஆன்மீக நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடக்கும்.
அந்தக் கச்சேரிகளில் எனது தந்தையார் இயற்றிய கீதங்களை அபார கற்பனை வளத்துடன் பல வித்வான்கள் பாடி மகிழ்வர்; குழுமி இருப்போரை மகிழ்விப்பர்.
பொன்னான காலம் அது. அதை ஒட்டிய மலரும் நினைவுகளை இந்த நவராத்திரி கட்டுரை கொண்டுள்ளது.
*
Pictures are added now from different sources.Thanks.
You must be logged in to post a comment.