Written by ச.நாகராஜன்
Post No.2250
Date: 17 October 2015
Time uploaded in London: 8-49 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
பாக்யா வார இதழில் வெளியாகும் அறிவியல் துளிகள் தொடரில் 243வது அத்தியாயமாக 16-10-2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!
ச.நாகராஜன்
“நான் ஹிந்து இல்லை. ஆனால் அவர்களின் கொள்கையான மறுபிறப்பை நான் ஆதரிக்கிறேன். அது ஈடு இணையற்றது. பகுத்தறிவுக்கு ஒத்தது. சமயப் பற்றுள்ளது. மனிதர்களைத் தீய காரியம் செய்ய விடாமல் தடுப்பது.
– வில்லியம் ஜோன்ஸ்
உலகிலுள்ள கோடிக்கணக்கான புத்த மதத்தினரின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா. இன்று உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரான இவரது ஒரு பெரும் சிறப்பு, விஞ்ஞானிகளுடன் இவர் அடிக்கடி அளவளாவுவது தான்! விஞ்ஞானிகளுக்கு இவரைக் கண்டால் மிகவும் பிடிக்கும்.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் சொல்வதுடன் அவர்களைக் கேள்விகள் கேட்டு திகைக்கவும் வைப்பார். 1999ஆம் ஆண்டில் இந்தியாவில் இவர் தங்கி இருக்கும் தர்மஸ்தலாவில் 30க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை அழைத்து ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒருங்கிணைப்பதற்கான கலந்துரையாடல் கூடிய ஒரு கருத்தரங்கத்தை இவர் ஏற்பாடு செய்தார்.
ஒரு விஞ்ஞானி இவரது தாராளமான அணுகுமுறையைப் பயன்படுத்த நினைத்தாரோ என்னவோ, திடீரென்று வெடிகுண்டு போல ஒரு கேள்வியை அவர் மீது தூக்கிப் போட்டார்.
“தலாய் லாமா அவர்களே! புத்தமதத்தை நீங்களே விட்டு விடும் வகையில் ஏதேனும் அறிவியல் கொள்கை இருக்கிறதா? அப்படி ஒன்று ஏற்படுமா?”
அனைவரும் திகைத்து விட்டனர். உலகின் புத்தமதத்தினரின் குருவைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி! கேட்கலாமா? கேட்பது முறை தானா?
தலாய் லாமா கோபப்படவில்லை.
மெல்லிய குரலில் இனிமையாகப் பதில் கூறினார்:-“இதுவரை அப்படி ஒரு கொள்கையும் இல்லை. ஒருவேளை விஞ்ஞானிகள் மறுபிறப்பு என்பதே இல்லை என்று நிரூபித்தால் நான் புத்த மதத்தைத் துறப்பது பற்றி மறு சிந்தனை செய்யக் கூடும்!”
எப்படிப்பட்ட அருமையான பதில்! விஞ்ஞானிகள் வாயடைத்துத் திகைத்து நின்றனர்.
இன்றைய விஞ்ஞானத்தால் பதில் கூற முடியாத ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன? பல கோடி அண்ட பிரபஞ்சங்கள் உள்ள படைப்பின் நோக்கம் என்ன? படைத்தவர் யார்? உயிர் எப்படி கருவை எந்த சமயத்தில் அடைகிறது? எப்படி மனிதனை விட்டு உயிர் பிரிகிறது? உணர்வு எப்படி உருவாகிறது? மனத்தின் மாண்புகள் என்னென்ன? மனிதன் இறந்த பின் மீண்டும் பிறக்கிறானா? மூளையின் சிக்கலான அமைப்பையும் மனத்தையும் பகுத்தறிவையும் கொண்ட ஒரு ரொபாட்டை அமைக்க முடியுமா? இப்படி ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன.
ஆனால் தலாய் லாமா சிக்கலான பெரிய விஷயங்களில் விஞ்ஞானிகளைத் ஒரு தட்டு தட்டுவது போல மறு பிறப்பு பற்றி மட்டும் சுட்டிக் காட்டினார். அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தைத் தந்தார்.
இன்றைய விஞ்ஞான உலகில் மறு பிறப்பு பற்றிய ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. கிடைக்கும் தகவல்கள் விஞ்ஞானிகளையே பிரமிக்க வைக்கின்றன.
லிடியா ஜான்ஸன் என்ற அமெரிக்கப் பெண்மணியின் கேஸ் வியப்பூட்டும் ஒன்று. பிலடெல்பியாவில் வாழ்ந்து வந்த முப்பத்தேழே வயதான அந்தப் பெண்மணிக்கு ஜென்ஸன் ஜாகோபி என்ற மனிதனைப் பற்றிய அனைத்து நினைவுகளும் வந்தன. இதில் திகைப்பூட்டும் ஒரு விஷயம் ஜாகோபி என்பவர் ஸ்வீடனில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபர். அந்தக் கால ஸ்வீடிஷ் பாஷையில் அந்தப் பெயரை யென்ஸன் எக்கோபி என்று அவர் உச்சரித்தார். அவரைப் பற்றி கேள்விகள் கேட்ட போது பழைய கால ஸ்வீடிஷ் மொழியில் சரளமாகப் பேசலானார்.
அமெரிக்கப் பெண்மணிக்கு 17ஆம் நூற்றாண்டு ஸ்வீடன் மொழி எப்படித் தெரியும்? சரளமாக அதில் ஒரு நொடி நேரத்திற்குள் எப்படி உரையாட ஆரம்பிக்க முடியும்? 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல ஸ்வீடன் தேசத்துப் பொருள்களை மட்டும் தனியே அவரால் பிரித்தெடுக்க முடிந்தது.
மகாத்மா காந்திஜியின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த சாந்தி தேவி பற்றிய சம்பவம் உலகில் மறுபிறப்பு ஆய்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. 1926ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் பிறந்த சாந்தி தேவி திடீரென்று தன் முந்தைய பிறப்பைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள். தனது ஊரான மதுராவைப் பற்றி விவரித்த அவள் தனது (முந்தைய ஜென்ம) கணவரான கேதார் நாத் சௌபே பற்றி விவரிக்கலானாள். ஆர்வம் தாளாத ஒரு தலைமை ஆசிரியர் அந்த கிராமத்தில் சாந்தி தேவி குறிப்பிட்ட முகவரிக்கு கேதார் நாத் பெயரில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். பதில் வந்தது – கேதார்நாத்திடமிருந்தே!
ஒன்பது வயதுச் சிறுமி தன்னைத் தனது கிராமத்திற்கே அழைத்துச் செல்ல வற்புறுத்தினாள். அங்கு அவள் அழைத்துச் செல்லப்பட்ட போது தனது முன் ஜென்ம உறவினர்களை மறக்காமல் அடையாளம் கண்டு அளவளாவினாள். தனது முந்தைய வீட்டிற்குச் சென்ற அவள் க்ளைமாக்ஸான ஒரு காரியத்தை அனைவரும் வியக்கும்படி செய்தாள்.
தான் ஒரு டின் பெட்டியில் காசை வைத்து ஒரு மூலையில் புதைத்து வைத்திருப்பதாகவும் அதை எடுக்க வேண்டும் என்றும் அவள் கூறிய போது அனைவரும் வியந்தனர். அவள் சொன்ன மூலையைத் தோண்டிய போது டின் பெட்டியில் பணம் இருந்தது.
உலகளாவிய விதத்தில் பரபரப்பூட்டிய சிறுமி சாந்தி தேவி மறு ஜென்ம ஆய்வாளர்களுக்கு ஒரு முக்கிய கேஸ் ஆனாள். மகாத்மாவோ ஒரு குழுவை அனுப்பி அனைத்து விவரங்களையும் சரி பார்க்கச் செய்து திருப்தி அடைந்தார்.
காந்திஜி மறுபிறப்பு கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் ஒரு நூலின் பகுதியை வெளியிட அவர் அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அவருக்கு எழுதிய காந்திஜி அதில் மறுஜென்மம் இல்லை என்று டால்ஸ்டாய் கூறி இருக்கும் பகுதியை மட்டும் தான் எடுத்து விட விரும்புவதாகவும் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே தனது நாட்டு மக்களை எழுப்பி உத்வேகம் ஊட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார். டால்ஸ்டாயும் காந்திஜியின் விருப்பப்படியே அப்பகுதியை நீக்க ஒப்புதலும் அளித்தார்!
இனி மறு பிறப்பைத் தீவிரமாக ஆராய்ந்த ஒரு விஞ்ஞானியைப் பார்ப்போம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில்
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஷெல்லிக்கு இரசாயன பாடத்தின் மீது அளவற்ற ஆவல். அவர் முதலில் படித்த பள்ளியான ஸயான் ஹவுஸில் (Sion House) இருந்த ஒரு ஆசிரியர் அவரிடம் இந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டார். ஆனால் அவர் ஈட்டனில் உள்ள பள்ளியில் படிக்க வந்த போது இரசாயனம் படிக்கக் கூடாதென்று அவருக்கு தடை போடப்பட்டது. இதனால் எல்லா சோதனைகளையும் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் செய்து மகிழ்ந்தார்.
ஒரு நாள் அவருக்குப் பாடம் கற்பிக்க வரும் ஆசிரியரான பெத்தல் (Mr Bethel) ஷெல்லியின் அறையிலிருந்து விசித்திரமான ஒலிகள் வருவதைக் கேட்டுத் திகைத்தார்.
“என்ன செய்கிறாய், ஷெல்லி?” என்று கேட்டவாறே அவர் ஷெல்லியின் அறைக்குள் நுழைந்தார். அங்கு அவர் பார்த்த காட்சி அவரைத் திகைக்க வைத்தது. நீல நிற ஜுவாலை எரிய புகை நடுவே ஷெல்லி இருந்தார்.
“என்ன செய்கிறாய், நீ” என்று அலறினார் ஆசிரியர்.
“நான் பிசாசை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஷெல்லி.
ஷெல்லியின் முன்னால் ஒரு கண்ணாடி ஜாடி இருந்தது. அதன் பெயர் லெய்டன் ஜார் (Leyden Jar) இரண்டு எலக்ட்ரோடுகளை வைத்து எளிய வழி மூலம் மின்சாரம் செய்வதற்கான ஜாடி அது.
அது என்ன என்று பார்க்க ஜாடியின் மீது கை வைத்தார் ஆசிரியர் பெத்தல். ஜாடியைத் தொட்டதால் ஷாக் அடிக்கவே ஐயோ என்று கத்தியவாறே அங்கிருந்து வெளியில் ஓடினார் அவர்.
சோதனை ஜாடியின் மூலம் மின்சக்தியை வெளிப்படுத்திய கவிஞர் ஷெல்லி, பின்னால் கவிதை மூலமாகவும் துடிக்க வைக்கும் மின் ஆற்றலை வெளிப்படுத்தியது பொருத்தம் தானே!
*******************
You must be logged in to post a comment.