உபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை

India-Bhudda-Stamp

Post No.2269

Date: 24 October 2015

Time uploaded in London: 13-12

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

பழங்கால பௌத்த மத நூலில் காணப்படும் ஒரு சுவையான உண்மைக் கதை:–

முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் மதுரா நகரத்தில் உபகுப்தர் என்பவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார். அந்த ஊரில் வாசவதத்தை என்னும் ஒரு விலைமாது (வேசி) இருந்தாள். அவளுடைய வேலைக்காரி ஒரு நாள் உபகுப்தர் கடைக்கு வந்து வாசனைத் திரவியங்களை வாங்கிச் சென்றாள். உபகுப்தரின் கட்டழகைக் கண்டு வியந்து தன்னுடைய எஜமானியான வாசவதத்தையிடம் அவருடைய ரூப லாவண்யத்தை வருணித்துச் சொன்னாள். அதைக் கேட்டது முதல் வாசவதத்தையின் மனம் சஞ்சலம் அடைந்தது. நாளாக ஆக வாசவத்தையின் ஆவலும் ஆசையும் அதிகரித்தது.

ஒருநாள், ‘உங்களுடைய முக தரிசனத்துக்காக நான் ஏங்குகிறேன்’ என்று ஒரு காதல் கடிதம் எழுதி அதை வேலைக்காரி மூலம் உபகுப்தருக்கு அனுப்பி வைத்தாள். ‘நானோ ஒரு ஏழை; என் முக தரிசனத்தினால் உனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் நானே ஒரு நாள் உன்னைப் பார்க்கவரும் நிலை வரும்’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார். வாசவதத்தையின் மனம் அடங்கவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். ‘உங்களுடைய காசு, பணம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் முகத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்புமட்டும் கொடுத்தால் போதும் என்று பிரார்த்திக்கிறேன். வேறு எதுவுமே எனக்கு வேண்டாமென்று எழுதி அனுப்பினாள். அவர் அதை வாசித்துவிட்டு பழைய பதிலையே சொல்லிவிட்டார்.

காலம் உருண்டோடியது. மதுரா நகரத்தில் ஒரு பெரிய கொலை நடந்தது. வாசவதத்தையின் காதலன் அவளுடைய வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்தான். ஊர் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. அரசனுடைய சேவகர்கள் வந்து, கொஞ்சமும் விசாரிக்காமல், அவள் விலை மாது என்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டு காதலனைக் கொன்றுவிட்டதாக அரசனிடம் கூறிவிட்டனர்.

buddha bhutan

பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் பாரத நாட்டில் கிடையாது. ஆகையால் மன்னனும் இவளுடைய அங்கங்களை சிதைத்து அவலட்சணமாக்கி ஊரை விட்டு வெளியே விரட்டி விடுங்கள் என்று கட்டளையிட்டான். வாசவதத்தை என்னும் பேரழகி, அங்கம் சிதைந்த நிலயில் கோரமாக காட்சி தந்தாள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டதால் சுடுகாட்டில் வசித்தாள். என்றும் விசுவாசம் மாறாத வேலைக்காரி மட்டும் அவளுடனே சென்று, வாசவ தத்தைக்குத் துணையாக சுடுகாட்டில் வசித்தாள்.

இந்தச் செய்தி பலசரக்கு வியாபாரி உபகுப்தரின் காதையும் எட்டியது. உடனே அவர் கடையில் வேலை பார்க்கும் ஊழியரை அழைத்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வந்தார். வாசவதத்தையின் வேலைக்காரி, உபகுப்தரை அடயாளம் தெரிந்து கொண்டு, வாசவதத்தைக்கு இன்னாரென்று அறிமுகம் செய்துவைத்தாள். அங்கமெல்லாம் உருக்குலைந்த நிலையில் உபகுப்தரைச் சந்திக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதே என்று மனம் கலங்கி கண்ணீர் வடித்தாள். துக்கமும் வெட்கமூம் அவளை வாட்டி வதைத்தது.

உபகுப்தரோவெனில், கொஞ்சமும் தயக்கமின்றி வாசவதத்தையின் அருகில் போய் அமர்ந்தார். “ஸ்வாமி இந்த உடலானது அன்றலர்ந்த செந்தாமரை போன்று திவ்ய தேஜசுடன் இருந்தபோது உங்களைப் பார்க்க கெஞ்சினேனே; விலையுயர்ந்த வஸ்திரங்களை அணிந்துகொண்டு காண்போர் மனதை எல்லாம் வசீகரித்தேனே; இப்பொழுது துரதிருஷ்டமும், கஷ்டமும் என்னை வதைக்கின்றன. அப்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் இப்பொழுது வந்தீர்களே; வெறுக்கத்தக்க சரீரம்படைதவளாகி விட்டேனே” என்று வருந்திச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட உபகுப்தர் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. பிறகு அவர் நிதானமாக, “வாசவதத்தாய்! உன்னைப் பார்க்க இதுவே உரிய தருணம். மானிடர் அனுபவிக்கும் இம்மைச் சுகங்களெல்லாம் அழியக்கூடியது என்பதை உன்மூலம் அறிந்து கொண்டேன். இனி வருந்திப் பயனில்லை. தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கை நடத்து; மன நிம்மதி கிடைக்கும்” என்று உபதேசம் செய்தார். அவருடைய வாக்கு என்னும் அமிர்ததாரையில், வாசவதத்தையின் துக்காக்னி அணைந்தது. அவள் பெரும் ஆறுதல் அடைந்தாள். பின்னர் அவள் புத்த சங்கத்தை நாடிச் சென்று இறுதிவரை அங்கிருந்து சாந்தி பெற்று உயிர் நீத்தாள்.

Bud16

புத்தம் சரணம் கச்சாமி!

தம்மம் (தருமம்) சரணம் கச்சாமி!!

சங்கம் சரணம் கச்சாமி!!!

(உபகுப்தர், வாசவதத்தை என்ற பெயர்கள் பல கதைகளில் வரும். ரவீந்திர நாத் தாகூர் எழுதிய உபகுப்தர் கவிதையில் அவர் ஒரு புத்த மத துறவி போல காட்டப்படுகிறார். நான் எழுதிய கதை அசோகர் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டது)

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: