படம்– அமெரிக்க கள்ள நாணயம்
Compiled by London swaminathan
Post No.2278
Date: 27 October 2015
Time uploaded in London: 10-36 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் எனக்கு ஒரு வாத்தியார் (ஆசிரியர்) இருந்தார். அவர் பெயர் வி.ஜி.சீனிவாசன். அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது:
“நான் கள்ள நாணயம், போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டாலோ, அவை என் கைக்கு வந்தாலோ உடனே அவைகளை இரண்டு துண்டாக வெட்டி, யாரும் எடுக்க முடியாதபடி சாக்கடையில் தூக்கி எறிந்து விடுவேன். நீங்களும் அப்படிச் செய்ய வேண்டும்” என்று ஆசிரியர் வி.ஜி.எஸ் சொன்னார். அது முதல் நானும் அதைச் செய்துவருகிறேன். இதற்கு அவர் சொன்ன காரணங்கள்:
1.ஒருவர் நம்மை கள்ள நாணயத்தைக் கொடுத்து ஏமாற்றுகிறார். ஏமாந்ததால் நமக்குக் கோபமும் வெறுப்பும், மனக் கசப்பும் ஏற்படுகிறது.
2.கொஞ்ச நேரம் கழித்து கோபம் தணிந்தவுடன், அதே காசை நாமும் நைஸாக வேறு ஒருவருக்குக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறோம்.
3.அசந்து மறந்து அவர் அதை வாங்கிக் கொண்டால், அவரும் மற்றவரை ஏமாற்றத் தயாராகிறார்.
4.யாரோ ஒருவர் செய்த தப்பு, ஆயிரக்கணக்கான ஏமாளிகளையும், குற்றவாளிகளையும் உருவாக்குகிறது.
5.இதைத்தடுக்க ஒரே வழி—அந்த கள்ள நாணயத்தை அழிப்பதுதான்.
இது ஏன் என்னுடைய நினைவுக்கு வந்தது என்றால், சுவாமி ராமதாஸ் எழுதிய ஒரு கதையை ஆங்கிலப் புத்தகத்தில் படித்தேன். இதோ அந்தக் கதை:–
ஒரு ஊரில் ஒரு சாது (துறவி) இருந்தார். அவர் நன்கு தையல் கலையை அறிந்திருந்தார். ஆகையால் எல்லோர் கொண்டுவரும் துணிகளையும் தைத்துக் கொடுப்பார். அவர்கள் கொடுக்கும் பணத்தை அன்போடு வாங்கிக் கொள்வார்.
ஒரு பெரிய வணிகனும் அவரைப் பயன் படுத்திவந்தான். வண்டி வண்டியாக துணிகளைக் கொண்டுவந்து இறக்குவான். இந்தத் துறவி அவைகளைத் தைத்தவுடன் காசு (கூலி) கொடுத்துவிட்டு உடைகளை எடுத்துச் செல்வான். ஆனால் அவன் கொடுக்கும் காசு எல்லாம் கள்ள நாணயங்கள். துறவிக்கும் தெரியும் அவை எல்லாம் கள்ள நாணயங்கள் என்று. ஆனால் அமைதியாக அவைகளை வாங்கிக் கொள்வார்.
ஒருநாள் அந்தத் துறவி அடுத்த ஊருக்குப் போக வேண்டி இருந்தது. உடனே சீடனை அழைத்து தையல் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். வழக்கமான வாடிக்கையாளர்கள் வந்து தையல் கூலி கொடுத்துவிட்டுத் துணிகளை எடுத்துச் சென்றனர். வழக்கமாக துறவியை ஏமாற்றும் கள்ள வணிகனும் வந்தான். நிறைய துணிகளை வாங்கிக் கொண்டு, வழக்கம்போல கூலியாகக் கள்ள நாணயங்களைக் கொடுத்தான். துறவியின் சீடன் அதைக் கண்டு பிடித்துவிட்டான். துணிமணிகளைக் கொடுக்க முடியாது என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டான்.
படம்- பிரிட்டிஷ் கள்ள நாணயம்
ஊரிலிருந்து திரும்பி வந்த துறவி, யார் யார் வந்தனர், என்ன நடந்தது என்ற விஷயங்களை எல்லாம் கேட்டறிந்தார். அப்பொழுது சீடனும், ஏமாற்ற வந்த வணிகன் பற்றியும் அவன் கொடுத்த கள்ள நாணயங்கள் பற்றியும் அவனைத் திருப்பி அனுப்பியது பற்றியும் சொன்னான்.
உடனே துறவி, அவனைக் கடிந்துகொண்டார். ஏன் அவனைத் திருப்பி அனுப்பினாய்? அவன் மற்றவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் நான் அவன் தந்த கள்ள நாணயங்கள் எல்லாவற்றையும் வாங்கினேன். அவை அனைத்தையும் தோட்டத்தில் புதைத்துவிட்டேன் என்றார்.
இதுவே துறவிகளின் இயல்பு.அவர்கள் எல்லோருக்கும் உதவுவதோடு, மற்றவர்களைப் பாதுகாப்பதும் அவர்தம் பணி.
(தொடர்ந்து ஏமாற்றுபவர்களை இதுபோலப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்பதல்ல. தற்காலத்தில், சட்டபூர்வ வழிகளில் அவர்களைச் சமாளிக்கலாம்–சுவாமி.)
–சுபம்–
You must be logged in to post a comment.