மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11 (Post No. 2380)

bharati drawing

Written by S NAGARAJAN

Date: 11 December 2015

Post No. 2380

 

Time uploaded in London :– 5-36 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி இயல்

டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். உலக மகாகவியைப் போற்றுவோம்.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

 

 

பாரதி பிறந்தார்

 

பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும்.

மிக பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.

ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.

 

 

இந்த அஸ்திவார விழாவுக்கு அஸ்திவாரம் போட்டது ஒரு கட்டுரை. அதை கல்கி எழுதியிருந்தார். இதைப் படித்த சி.ரகுநாதன் ஐந்து ரூபாயை அனுப்பி இருந்தார். ஐந்து ரூபாயிலிருந்து ஆரம்பித்த நிதி சுமார் நாற்பதினாயிரம் ரூபாயைத் தாண்டியது அந்தக் கால அதிசயம்.

இந்தக் கட்டுரையையும் பொழுது புலர்ந்தது என்ற அஸ்திவார விழ பற்றிய கட்டுரையையும் இணைத்து இன்னும் ஏழு கட்டுரைகளுடன் பாரதி பிறந்தார் என்ற நூலை சின்ன அண்ணாம்லை தனது தமிழ்ப்பண்ணை வாயிலாக ஆகஸ்ட், 1945இல் (முதல் பதிப்பாக) வெளியிட்டார்.

 

பாரதி ஆர்வலர்களால் நினைவு கூர வேண்டிய ஒரு விழா கவிஞன் பிறந்த எட்டயபுரத்தில் நடந்த இந்த பாரதிப் பெருவிழாவாகும்.

அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் புத்தகம்.

நூலில் ஏராளமான சுவையான சம்ப்வங்களைப் படிக்கலாம் – கல்கியின் சுவாரசியமான தமிழ் நடையில். இரட்டிப்புச் சந்தோஷம் உருவாகும்.

 

சின்ன அண்ணாமலை தன் முன்னுரையில் இறுதியில் கூறுவது:-

“ ஒரு காலத்தில் ஆங்கிலம் படித்தவர்களிடையே தமிழ்ப் புத்தகங்களையும் தமிழ்ப் பத்திரிகைகளையும் தொடுவதே கேவலமாகக் கருதப்பட்டது. அத்தகைய மனப்பான்மையைப் போக்கி இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமிழ் வெள்ளம் பரவும்படி செய்தவர் கல்கி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

பாரதியார் கவிதைக்கு எப்படிப் புது மலர்ச்சியை அளித்தாரோ, அப்படித் தமிழ் வசனத்திற்கு மறு மலர்ச்சி உண்டாக்கியவர் கல்கி. எட்டயபுரம் பாரதி ஞாபகார்த்த மண்டபத்தின் மூலம் அந்த இருவரின் பெயர்களும் ஒந்றாக இணைந்து விட்டன. ஸ்ரீ கல்கி அவர்களுக்குத் தமிழ் மக்களிந் சார்பாக நன்றி கூறுகிறோம்.”

 

ஆரம்ப காலத்தில் பாரதியாரை ஒரு கவிஞர் என்ற வகையில் கல்கி ஒப்புக் கொண்டதையும் உலக மகாகவி என்பதை ஏற்க மறுத்ததையும் இதற்கு முன் வெளி வந்த அத்தியாயத்தில் படித்தோம். ஆனால் பாரதியின் அற்புதமான கவிதைகளில் மனம் தோய்ந்து அவற்றை அனுபவித்த பின்னர் அவரை உலக மகாகவி என்று கூறுவது மிகவும் சரியே என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

 

அதன் வெளிப்பாடே அவர் முனைந்து நின்று திரட்டிய நிதியும் அதனால் உருவான மணி மண்டபமும் ஆகும். அத்துடன் அவரது கதைகள், நாவல்களில் பாரதி பாடல்களைத் தாராளமாக அவர் உலவ விட்டார்.

நூலில் சில சுவாரசியமான பகுதிகளைப் பார்ப்போம்.

 

பாரதி பிறந்தார் கட்டுரையிலிருந்து:

சந்து பொந்துகளின் வழியாகச் சென்று கடைசியில் பாரதியார் பிறந்த வீட்டை அடைந்தோம். வீட்டு வாசலில் ஒன்றுக்கு மேல் ஒன்று உயரமாக இரண்டு விசாலமான திண்ணைகள் இருக்கின்றன. மேல் திண்ணையின் ஓரத்தில் சுவரில் ஒரு குறுகலான வாசற்படி காண்கிறது. அதற்குள்ளே இருந்த அறையிலே தான் பாரதியார் பிறந்தார் என்று சொன்னார்கள். ஆகா! பிறந்த குழந்தை “குவா, குவா” என்று அழுத போது அந்தக் “குவா” சத்தத்தில், தேச வெறியும் தமிழ்ப் பண்பும் பொங்கித் ததும்பும் அழகிய தமிழ்ப் பாடல்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது.

 

அந்த வாசற்படிக்கு வெளியே, திண்ணையில் பாரதியார் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பது வழக்கம் என்றும் சொன்னார்கள். இப்போது இதே இடத்திலிருந்து தான் பாரதி திருநாளன்று அவருடைய திருவுருவப் பட ஊர்வலத்தை ஆரம்பித்து நடத்துகிறார்களாம் – இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.

 

பொழுது புலர்ந்தது கட்டுரையிலிருந்து:-

ராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியாரின் கவிதைச் சிறப்பு 3) பாரதியாரை தமிழ்நாடு போற்ற வேண்டிய முறை

பின் வருமாறு பேச்சு ஆரம்ப்மாயிற்று:-

 

இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லாரையும் விட எனக்கு வயது அதிகம் (சிரிப்பு) அவருடைய மாமாவைத் தவிரச் சொல்கிறேன். வயது எனக்கு அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்க வேணும்? 1906-ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும். அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள்  வீ  சி எறியப்பட்டன. செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்த போது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.எ. நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்களைப் போல் காரியங்களில் இறங்கி விட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.

 

அந்தக் காலத்தில் பாரதியாரைப் போற்றும் விஷயத்தில் சாதியை யாரும் கவனிக்கவில்லை. உண்மையில் அவர் என்ன சாதி என்பது கூட அநேகருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. நானும் என் நண்பரு ஒருவரும் ஒரு சமயம் புதுச்சேரிக்குப் போய்ப் பாரதியாரைப் பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பாரதியார் என்ன சாதி என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் மேல் பூணூல் இல்லையாதலால் விவாதத்தை எங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே பாரதியாரையே கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கேட்டோம். அவர் பிராம்மண சாதி என்று அறிந்ததும், ‘பூணூல் எங்கே?’ என்று கேட்டோம். ‘அது எங்கே போயிற்றோ? யார் கண்டது?’ என்றார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நமது நாட்டில் எப்போதுமே கவிகளைப் போற்றும் விஷயத்தில் சாதி குறுக்கிட்டது கிடையாது என்பதற்காகத் தான்.”

 

நூலில் உள்ள ஒன்பது கட்டுரைகளில் இரண்டு மட்டுமே பாரதியாரைப் பற்றியது என்றாலும் கூட அவை பாரதி இயல் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுபவை என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. (இதர ஏழு கட்டுரைகள் திரு.வி.க., தீரர் சத்தியமூர்த்தி, கம்பரும் நானும், தெய்வமானார், கிட்டப்பா ஞாபகம், வீ ழ்ந்த ஆலமரம், சாபம் நீக்கிய கவிஞர் ஆகிய தலைப்புகளில் உள்ளன.

 

நூலில் பாரதி விழாப் படங்களும் இடம் பெற்றுள்ளன.  நூலில் அந்தக் கால விலை நான்கு ரூபாய் எட்டணா!

******

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: