தமிழுக்கு அரசர்! நாவுக்கரசர்!! ( Post No. 2404)

நால்வர் சிலைகள்

படம்: சம்பந்தர், அப்பர்(திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர்

Written by S NAGARAJAN

Date: 19 December 2015

 

Post No. 2404

 

Time uploaded in London :– காலை 6-38

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தேவார சுகம்

பிறவி வேண்டும் பேரருளாளர்!

ச.நாகராஜன்

 

 

புரட்சிக்கரசர்

 

நாவுக்கரசர் நாவுக்கு மட்டும் அரசர் அல்ல; தமிழுக்கும் அரசர் அவரே! அற்புதமான அருள் பாக்களைப் பாடியவர் புரட்சிகரமான ஏராளமான கருத்துக்களையும் தேவாரத்தில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம்.

 

 

எல்லோரும் மனிதப் பிறவியே வேண்டாம் என்று பாடி இருக்கும் போது அதற்கு மாறாக பூவுலகில்  மனிதப் பிறவியும் வேண்டுகின்ற ஒன்று தான் என்று அவர் புரட்சிகரமாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான நிபந்தனை ஒன்றையும் அவர் விதிப்பதை அறியும் போது எவ்வளவு பெரிய பேரருளாளர் அவர், எவ்வளவு பெரிய சிவ பக்தர் அவர் என்பதை அறிய முடிகிறது.

 

 

சிதம்பர தரிசனம்

 

கோயில் என்றாலே அது சிதம்பர ஸ்தலத்தைத் தான் குறிக்கிறது.

ஆடல் வல்லானின் அற்புத தரிசனத்தைக் கண்ணுற்ற அப்பர் பாடுகிறார்:-

 

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்

வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல்

மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்

பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே

 

என்ன ஒரு அற்புதமான தெய்வீகத் திரு உரு! வளைந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் முகிழ்கின்ற குமிண் சிரிப்பு, பவளம் போன்ற மேனி, அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகிய திருநீறு, இனித்தமுடைய அருள் தரும் பாதங்கள்!

 

ஆஹா! என்ன ஒரு அற்புதக் காட்சி!

இதைக் கண்டாலே முக்தி நிச்சயம்!

 

ஆக, இந்தக் காட்சியைக் கண்டு முக்தி பெற்று மீண்டும் மீண்டும் அவன் அருளால் பிறப்பு எடுப்போம். முக்தி பெறுவோம்.

அவன் ஆடல் விளையாட்டை நடத்தட்டும்; நாம் பிறந்து பிறந்து ஆடல் வல்லானின் தரிசனத்தைக் கண்டு கண்டு முக்தி அடைந்து அடைந்து மீண்டும் பிறந்து பிறந்து…..

என்ன ஒரு அற்புதமான கருத்து!

 

 நால்வர், கலர்

இன்னம் பாலிக்குமோ

 

இதையே இன்னொரு பாடலிலும் வற்புறுத்துகிறார்:-

 

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

 

தில்லைச் சிற்றம்பலத்தைக் கண்டு களிக்க இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!

 

 

உன்னை மறவாமை வேண்டும்

 

காரைக்கால் அம்மையாரை சிவ்பிரான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது அவர்

“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க”

என்று இப்படிக் கூறியதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

 

 

புழுவானாலும் உன்னடி நினைப்பேனாகுக

 

அப்பரும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி மறவாதிருக்க வரம் தா என வேண்டுகிறார்:-

 

 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

 

எல்லாப் பாடல்களிலும் அடிப்படைக் கருத்தாக இழை ஓடுவது ஒரு முறை அவனை நினைத்தாலே சிவ லோகம் நிச்சயம்; ஆக அந்த நினைப்பு இருந்தாலே போதும்; அதிலும் பிறந்து பிறந்து அவனை நினைந்து அவனைத் தரிசனம் செய்யும் சுகத்தை இன்னும் அதிகம் பெற வேண்டும் என்பது தான்!

 

தேவார சுகம்

 

உள்ளுவார் உள்ளத்தில் உளன் என்பது ஒரு புறம் இருக்க அவனைத் தில்லையிலே கண்ணாரக் காணும் சுகம் தனி தானே!

இந்த சுகத்தைத் தரும் அப்பரின் தேவார சுகமே சுகம்!

 

*********

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: