Picture from Nan Tien Temple, Australia
Written by S Nagarajan
Date: 1 February 2016
Post No. 2496
Time uploaded in London :– 9-12 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
29-1-2016 பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
புத்தர் வழி
அமேஸான் விளையாட்டு!
ச.நாகராஜன்
நல்ல புத்திசாலியான ஒருவன் எப்போழுதும் எதிலும் முதலாவதாக வந்து கொண்டிருந்தான். விளையாட்டுக்களிலும் அவன் தான் முதல். யாருடனும் சேராமல் இருந்த அவனை அவனது நண்பர்கள் ஊருக்கு வந்திருந்த ‘புத்த பிட்சு ஒருவரை பார்க்கப் போகலாம்,வா’ என்று கூறினர்.
புத்த பிட்சுவை தரிசித்த அவன், அவரிடம் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு கேள்வியைக் கேட்டான்.
அவர் புன்சிரிப்புடன், “உனக்கு அமேஸான் விளையாட்டு தெரியுமா?” என்று கேட்டார்.
“அமேஸான் விளையாட்டா? கிரிக்கட், ஃபுட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை கேள்விப் பட்டிருக்கிறேன். அதென்ன அமேஸான் விளையாட்டு?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.
பிட்சு புன்முறுவல் மாறாமல். “அது நிஜமாகவே நடக்கும் ஒரு விளையாட்டு. அமேஸான் காடுகளில், பாய்ந்து வரும் அழகிய அமேஸான் நதிக் கரையோரம் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆடும் விளையாட்டு அந்த அமேஸான் விளையாட்டு. அங்கு பணியாற்றச் சென்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டர் ஒருவர் அந்த விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆட்டமும் புரியவில்லை, ஆட்டத்தின் விதிகளும் புரியவில்லை.
முதலில் அங்குள்ளோர் எல்லோரும் ஆண், பெண் வித்தியாசம், வயது வித்தியாசம் பாராமல் முதலில் ஒன்று சேர்ந்தனர். பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். அந்தக் குழுக்களில் எண்ணிக்கை சரி பாதியாகவும் இல்லை. ஆண்கள், பெண்கள், மூத்தவர், இளையவர் என்ற வயது வித்தியாசம் பலசாலி, பலமில்லாதவர் என்று எந்த பேதமும் இல்லை.
இப்படி இரண்டு குழுக்களாகப் பிரிந்தவர்கள் திடீரென வரிசையாக நின்று ஒரு மரத்தைத் தோளில் தூக்கிக் கொண்டனர். இன்னொரு போட்டியாளர் வரிசையும் ஒரு மரத்தைத் தூக்கிக் கொண்டது. மரத்திலாவது எடை, நீளம் ஆகியவற்றில் ஒரு சமத்தன்மை நிலவியதா என்றால் அதுவும் இல்லை. அணிக்கு ஏதோ ஒரு மரம், அவ்வளவு தான்!
சற்று தூரத்தில் – சுமார் 100 மீட்டர் தூரம் – இருக்கும் எல்லையை நோக்கி ஆரவாரக் கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் ஓடினர்.
எல்லையை முதலில் அடைந்த கோஷ்டியிலிருந்து வெற்றி பெறாத கோஷ்டிக்கு ஒரு உறுப்பினர் மாறினார். மீண்டும் பந்தயம் தொடங்கியது. இப்படி வெற்றி பெறாத கோஷ்டிக்கு அவனோ அல்லது அவளோ மாறிக் கொண்டே இருந்தனர். போகப் போக விளையாட்டு சூடு பிடித்தது. இரு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் உடையவர்களாக ஆகிக் கொண்டு வந்தனர்.. இரு அணிகளுக்கும் தூரத்தில் உள்ள இடைவெளியும் குறுகிக் கொண்டே வந்தது. நேரம் ஆக ஆக ஒரே ஆரவாரம்.
கடைசியில் இரு அணிகளும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டைத் தொட்டது.
இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்”
புத்த பிட்சு பேச்சை நிறுத்தினார்.
sculptures of Nan Tien Temple, Australia
பின்னர் மெதுவாகத் தொடர்ந்தார். “விளையாட்டைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை என்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டருக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. பரவசத்தின் உச்சத்தில் இருந்த அவர் இது போன்ற ஒரு விளையாட்டைப் பார்த்ததே இல்லை என்று எண்ணி மகிழ்ந்தார்.”
பேச்சை நிறுத்திய பிட்சு கேள்வி கேட்ட புத்திசாலியை கூர்மையாக நோக்கினார்.
“என்ன கேள்வி கேட்டாய்? எப்படி வாழ்வது என்றா? அது சரி, இந்த அமேஸான் விளையாட்டிலிருந்து உனக்கு என்ன புரிகிறது, அதை முதலில் சொல்!” என்றார்.
புத்திசாலியாகத் திகழ்ந்த அவன் கண்களில் நீர் துளிர்த்தது.
புத்த பிட்சுவை நமஸ்கரித்து வணங்கினான்;”ஐயனே! எனக்கு வாழும் வழி புரிந்து விட்டது. சொன்னதற்கு என்றும் உங்களுக்கும் புத்தருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” என்றான்.
அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பிட்சு என்ன சொன்னார்? இவன் என்ன புரிந்து கொண்டான்?
அந்த புத்திசாலியே விளக்கினான்.
“புரியவில்லையா! உலகில் பல்வேறு வித்தியாசங்களுடன் மக்கள் இருக்கத் தான் செய்வர். பலமுள்ளவன் பலமில்லாதவனுக்கு, அறிவாளி படிப்பில்லாதவனுக்கு, செல்வமுள்ளவன் வறியவனுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது சமுதாயம் சமநிலை உள்ளதாக மாறும். அப்போது வென்றவன் தோற்றவன் என்று எவனும் இல்லை. எல்லோரும் வென்றவரே.
விட்டுக் கொடுத்து பரஸ்பரம் உதவி செய்து வாழ்க! என்பதே புத்தரின் அறிவுரை. அதை விளக்குகிறது இந்த அமேஸான் விளையாட்டு. அதைத் தான் எனக்கு அருளுரையாக இந்த மகான் கூறினார்!”
பிட்சு கால்நடையாக அடுத்த ஊரில் உள்ள இன்னொரு புத்திசாலியைப் பார்க்க மெதுவாக நடந்து போனார். அவரை நோக்கி அனைவரும் கைகூப்பித் தொழுத வண்ணம் பிரியாவிடை கொடுத்தனர்.
அவன் அன்று முதல் அனைவருக்கும் உதவி செய்பவனாக மாறினான். உயர்ந்தான்!
புத்தர் காட்டும் வழி : – ஒருவருக்கொருவர் கொள்ளும் ஆன்மீக நட்பு என்பது தயை, இரக்கம், சேவை, ஒழுக்கம் ஆகியவற்றை உயர்த்தும் ஒரு வழிமுறை.!
*************