Written by S Nagarajan
Date: 6 February 2016
Post No. 2513
Time uploaded in London :– 5-45 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
ச.நாகராஜன்
அந்த மாங்காயும் இந்த மாங்காயும்
கர்ம பலன் என்பது ஒரு மர்மமான விஷயம். பெரிய முனிவர்களும் கூட அறிய முடியாத இரகசியம். 750 கோடி பேர் இன்று உலகில் இருக்கிறார்கள். அதைத் தவிர கோடானு கோடி எண்ணிக்கையே தெரியாத உயிரினங்கள் இன்றைய உலகில் உள்ளன. எந்த கர்மத்தால் யாருக்கு என்ன நல்லது அல்லது கெட்டது நடக்கிறது. அது எப்போது நடக்கிறது?
யாருக்கும் தெரியாது. ஆனால் நல்லவை செய்தவர்க்கு நல்லதும் கெட்டவை செய்தவர்க்க்கு கெடு பலனும் வந்து சேரும்.
நாகசேனரின் விளக்கம்
புத்தர் மறுபிறப்பு பற்றியும் கர்மபலன் பற்றியும் போதுமான அளவு விளக்கியுள்ளார்.
ஒரு சின்ன கதை கர்ம பலனின் ஒரு அம்சத்தைப் பற்றி விளக்குகிறது.
நாகசேனர் மஹாராஜா மிலிந்தனுக்கு இதைப் பற்றி விளக்கும் கதை இது.
நாகசேனர்: அரசே! ஒரு மாங்காய் தோப்பு ஒருவனுக்கு சொந்தமாக இருந்தது. அதில் இருந்த மரத்தில் ஒன்றின் மாங்காய்களை ஒருவன் பறித்து விட்டான். மாந்தோப்பிற்குச் சொந்தக்காரன் அரசனிடம் சென்று முறையிட்டான். அரசன் மாங்காய்களைப் பறித்தவனைக் கூப்பிட்டு ஏன் பறித்தாய் என்று கேட்டான். அதற்குப் பறித்தவன், “இந்த மனிதர் எநத மாங்காய்களை விதைத்தாரோ அது வேறு மாங்காய்கள். அதை நான் பறிக்கவில்லை. நான் பறித்த மாங்காய் அது அல்லவே!” என்று பதில் அளித்தான். அரசே! இப்படி பதில் கூறியவன் குற்றமிழைத்தவனா, இல்லையா?”
மிலிந்தன்: ஐயனே! நிச்சயமாக அவன் குற்றமிழைத்தவனே! அவனுக்கு தண்டனை உண்டு.
நாகசேனர்: என்ன காரணத்திற்காக?
மிலிந்தந்: எவ்வளவு புத்திசாலித்தனமாக அவன் பதில் கூறினாலும் அது செல்லாது. பறிக்கப்பட்ட கடைசி மாங்காய் முதலில் நட்ட முதல் மாங்காயிலிருந்தே உருவானது. அதனால் தான்!
நாகசேனர்: ஓ! மன்னா! அதே போலத்தான் இந்த உடல் மற்றும் ,மனத்தினால் செய்யப்பட்ட ஒரு நல்லதோ அல்லது கெட்டதோ இன்னொரு உடல், மனம் எடுத்த போது அதன் விளைவை அனுபவிக்கிறது.
இன்னொரு பிறவி எடுத்த போது முந்தைய ஜன்மம் பற்றிய நினைவும் இல்லை; அதில் செய்த நல்லது கெட்டதும் தெரிவதில்லை.
ஆனால் இதனால் விளைவு நம்மைச் சேராமல் இருக்காது. நினைவுக்கும் விளைவுக்கும் துளியும் சம்பந்தமில்லை.
எடுத்துக்காட்டாக குற்றம் இழைத்த ஒருவன், அது பற்றிய ஞாபகமே தனக்கு இல்லை என்றால் நீதிபதி ஒத்துக் கொள்வாரா அல்லது குற்றமிழைத்தவன் வயதான காரணத்தினாலோ அல்லது ஆரோக்கியக் கேட்டினாலோ மறதியை அடைந்து அதை செய்ததே தெரியவில்லை என்றால் நீதிபதி ஒப்புக் கொள்வாரா?
நான் அவன் இல்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது!
நாகசேனரின் விளக்கத்தை மன்னன் புரிந்து கொண்டான்.
புத்தகோஸரின் விளக்கம்
இந்த ஜன்மத்தில் எடுத்த ஒரு உருவத்தில் செய்த பிழைக்கு அடுத்த ஜன்மத்தில் விளைவா என்று புத்தரிடம் சீடன் குடதந்தன் வியக்கிறான்.
இந்த உடல் பிரக்ஞையில் செய்த செயலுக்கு -விதைத்த விதைக்கு – அடுத்த ஜன்ம உடலில் உள்ள பிரக்ஞையுடன் இருக்கும் போது விளைவு ஏற்படுவது சரிதானா?
இதற்கு புத்தகோஸர் அருமையாக விடையளிக்கிறார்.
அடுத்தாற்போல விளைவை அநுபவிப்பவன் முந்தைய நபரும் இல்லை; முந்தைய நபர் இல்லாமலும் இல்லை!!
இதற்கு புத்த மதத்தில் இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலமாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஒன்று பட்டாம்பூச்சி உவமை.
இன்னொன்று தீ ஜுவாலை உவமை.
ஒரு பட்டாம்பூச்சி எப்படி உருவாகிறது? முதலில் முட்டை, பின்னர் புழுவாகிறது. பின்னர் கிறிஸ்லிஸ் (Chrysalis) என்ற பொற்புழு நிலையை அடைகிறது.பின்னர் முழு
வண்ணத்துப்பூச்சியாக உரு மாறுகிறது. அதனுடைய ஒரே வாழ்க்கையில் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. புழுவாக இருந்த அதே வண்ணாத்திப்பூச்சி இப்போது இல்லை, ஆனால் அதே சமயம் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றும் இல்லை! தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு முறையில் ஒன்று இன்னொன்றாகப் பரிமளிக்கிறது.
தீபம் ஒன்றை இரவு எட்டு மணிக்கு ஏற்றுவதாக வைத்துக் கொள்வோம்.அதன் ஒளி எங்கும் பரவுகிறது. தீப ஜுவாலையைப் பார்க்கிறோம். அதே தீபத்தை காலை ஆறு மணிக்கு மீண்டும் பார்க்கிறோம். இரவு எட்டு மணிக்குப் பார்த்த தீப ஜுவாலை இப்போது இல்லை என்றாலும் தொடர்ந்து எரிவதால் இப்போதுள்ள தீப ஜுவாலை மாறுபட்ட ஒன்றும் இல்லை என்றாகிறது.
வினையின் விளைவு தொடரும்
அதே போல ஒரு உயிர் தனது தொடர் கர்மத்தினால் அதன் விளைவை இன்னொரு உடலில் அநுபவித்தே ஆக வேண்டும்.
சரி, தன்னை உணர்ந்த ஞானி ஒருவர் கர்மம் செய்து கொண்டே இருக்கிறாரே என்று கேட்டால் ரமண மஹரிஷி வேதாந்தம் மூலம் விடையளிக்கிறார்.
ஞானியின் கர்மம் வறுத்த விதை போல. அது கர்மம் தான் என்றாலும் அதற்கு விளைவு இருக்காது!
இப்படி கர்ம பலனில் ஏராள ரகசியம் இருக்கிறது. முற்றிலும் உணர்ந்தவர் யாரும் இல்லை.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது தான் கர்ம நியதி. தர்ம நியதி!
**********
You must be logged in to post a comment.