Research Article written by london swaminathan
Post No. 2526
Date: 10th February 2016
Time uploaded in London பகல் 12-07
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றிய நாலாவது கட்டுரை இது. முதல் மூன்று கட்டுரைகள் கடந்த 3 நாட்களில் இங்கே வெளியிடப்பட்டன.
சுமார் 40,000 முதல் 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் இங்கே குடியேறியதாக இப்போதைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றொரு ஆய்வு, இந்தியர்கள் இங்கே 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறும். ஆனால் இத்தகைய ஆய்வுகளை அப்படியே நம்பிவிடக்கூடாது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இதை மறுத்து வேறு ஒரு தகவல் வரும்!
20, 30 ஆண்டுகளுக்கு முன் தினமணிச் சுடரில் பிலோ இருதயநாத் என்பவர் எழுதிய இந்தியப் பழங்குடி மக்கள் வரலாற்றையும், மஞ்சரியில் மாதம் தோறும் வெளியான பழங்குடி மக்களின் வரலாற்றையும் படித்து பேப்பர் கட்டிங் சேகரித்து வைத்துள்ள எனக்கு ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிகம் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு இன மக்களும் பிறப்பு, இறப்பு, ஆவிகள், திருமணம், தொடக்கூடாதவை, தீட்டு, இசை, நடனம் ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் பல விநோதக் கொள்கைகளையுடவர்களாய் இருப்பார்கள். இந்தியப் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் இந்துமதத்தின் தாக்கமும், சம்ஸ்கிருத மொழியின் தாக்கமும் ஆழமாகவே தெரிகிறது. இப்போது கோண்ட்வானா லாண்ட் என்று சொல்லப் பாடும் சொல்லே, காண்டவ வனம் என்பதன் மரூஉ என்பதையும் “கோண்டு”கள் என்போர் அர்ஜுனனும், கிருஷ்ணனும் எரித்த “காண்ட”வ வன மக்கள் என்பதையும் நான் முன்னரே என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி தமிழில் அதிக விஷயங்கள் கிடைக்காததால், சிட்னி நகர ஆஸ்திரேலிய மியூசியத்தில் நான் சேகரித்த விஷயங்களை மொழிபெயர்த்துத் தருகிறேன்.
250 மொழிகள், 250 குழுழுக்கள்
ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை. 250 மொழிகளையும், கிளை மொழிகளையும் பேசுகின்றனர். கடல் என்பதற்குக் கூட ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல்! ஏன் இவ்வளவு மொழிகள் வந்தன என்பது ஆச்சரியமான விஷயமே. அருகிலுள்ள நியூகினி தீவுகளில் 750 மொழிகள் உள்ளன. மொழியியலாரின் கொளகைகளை எல்லாம் பொய்மையாக்கிவிடும் நிலவரம் இது.
இதே போல ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் அனைவரும் ஒரே அணி அல்ல. அவர்களிடையே 250 பிரிவுகள் உண்டு.
ஒவ்வொருவரும் தனது இடத்தை நாடு என்றும், அதிலுள்ள குழு எல்லாம் ஒரே இனம் என்றும் கருதுவர். ஆயினும் ஒரு குழு, மற்றொரு குழுவில் தலையிடாது. மேலும் அத்தகையோர் போற்றும் புனிதமான மிருகத்தை மற்றொரு குழுவினர் புசிக்கமாட்டார்கள். அவர்களிடையே, பல பொதுவான அம்சங்களும் இருக்கின்றன.
முன்னொரு காலத்தில்
“இப்பொழுது ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிராணிகள் எல்லாம், மிகப் பழைய காலத்தில், கடலுக்கு அப்பாலுள்ள வேறு ஒரு பிரதேசத்தில் வசித்தன. அப்போது அவை எல்லாம் மனித உருவில் இருந்தன. அவை எல்லாம் ஒரு நாள் ஒன்று கூடி நமக்கு நல்ல வேட்டை நிலம் வேண்டும் என்று முடிவு செய்து ஒரு படகில் ஏறி இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வந்தன” என்பது பழங்குடியினர் கூறும் கதை.
முதல் குடியேறிகள்
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் தாழ்வாக இருந்தது. ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குப் படகுகள் மூலம் போவது எளிதாக இருந்தது. அவர்கள் அக்காலத்தில் குடியேறிய ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளை இப்பொழுது கடல் கொண்டுவிட்டது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் பூர்வ கதைகளும் இதையே சொல்லுகின்றன. தாங்கள் படகுகள் மூலம் வேறு ஒரு இடத்திலிருந்து வந்ததாகவும், மழை மேகங்களைப் பின்தொடர்ந்து உள்நாட்டிற்குள் சென்றதாகவும் அவர்கள் கதைகள் சொல்லுவர். உலகில் இந்திய இலக்கியங்கள் மட்டுமே தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறுவதில்லை. வேறு சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் தங்களை வந்தேறு குடிகள் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். உலகின் நாகரீக தோற்றத்துக்கு இந்தியாவே மூல முதல்வன் என்பதை நமது இதிஹாச புராணங்கள் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றன. நிற்க
சுமார் 40000 ஆண்டுகளில், இவர்கள் ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பரவிவிட்டனர். இந்தியர்கள் 56 தேசங்கள் வைத்து ஆண்டது போல இவர்கள் 250 “நாடு”களை உருவாக்கினர். 1700-ம் ஆண்டுகளில், இந்தோநேஷியத் தீவுகளிலிருந்து பலர் மீன் வியாபாரத்தின் பொருட்டு இங்கேவந்தனர். அதுதான், ஆஸ்திரேலியாவின் முதல் வெளி உலகத் தொடர்பு. பின்னர் கேப்டன் குக் முதலான வெள்ளையர்கள் வந்தனர்.
1788ல் முதல் காலனி
உலகில் வடபகுதியில் நிலப்பரப்பு இருப்பதுபோலவே தென் பகுதியிலும் நிலப்பரப்பு இருக்க வேண்டும், அப்படியில்லாவிடில் பூமியின் சமநிலை கெட்டு அது ஆட்டம் காணும் என்று கிரேக்க தத்துவ ஞானிகள் ஊகித்தனர். (இந்துக்கள், கீழ் ஏழு பாதாள லோகங்களில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்த்திருந்தது வெள்ளைக்காரர்களுக்கு தெரியாது. எனது மாயா- நாகர் தொடர்பு கட்டுரைகளைப் படிப்போருக்கு இது விளங்கும்). பின்னர் 1570 ஆம் ஆண்டில் ஆர்டீலியஸ் என்பவர் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று தனது வரைபடத்தில் ஆஸ்திரேலியாவை வரைந்தார். இதைத் தொடர்ந்து டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியார் அங்கு போய் நியூ ஹாலந்து எனப் பெயரிட்டு, அது ஒன்றுமில்லாத இடம் என்று திரும்பிப் போய்விட்டர்கள்.
விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஜோசப் பாங்க்ஸ் என்பவருடன் லெப்டினண்ட் கேப்டன் குக் 1770 ஆம் ஆண்டில் வந்தார். பாங்ஸ் நிறைய படங்களை வரைந்தார். பின்னர் நியூ சவுத் வேல்ஸில் குடியேறி வசிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். 1788ஆம் ஆண்டில் ஒரு கப்பல் நிறைய ஆட்கள் வந்து ஆஸ்திரேலியாவை ஆக்ரமிக்கத் தொடங்கினர். ஆனால் முதலில் இங்கு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள். வெள்ளைக்காரர்கள், நமது சுதந்திரப் போராட்டவீரர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பியதுபோல இங்கு பலரை அனுப்பினர்.
கேடயங்கள்
ஒவ்வொரு குழுவும் ஒருவகை பாணியில் கேடயங்களைத் தயாரித்தனர். இவை பாதுக்காப்புக்கு மட்டுமின்றி கலாசார சின்னங்களாகவும் விளங்கும். ஒவ்வொரு இளைஞரும் அந்தக் கேடயத்தில் ஒரு புது வடிவு செய்து தனது தனித்துவத்தையும் காட்டுவார். கேப்டன் குக் வந்த போது அவரது பீரங்கி, துப்பாக்கிகளுக்கு , பழங்குடி மக்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. தங்கள் கேடயங்களைப் போட்டுவிட்டு காட்டிற்குள் சென்று மறைந்தனர். கேப்டன் குக் எடுத்துவந்த இந்த கேடயங்களே முதல் நினைவுப் பொருட்களாகும். இப்பொழுது ஆஸ்திரேலிய மியூசியத்தில் நூற்றுக்கணக்கான கேடயங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.
வெள்ளையர்களுக்கு உதவிய இருவர்
ஆஸ்திரேலியாவை காலனியாக்க வந்த வெள்ளையர்களுக்கு இரண்டு பழங்குடி இன மக்கள் உதவினர். ஒருவர் பெயர் வைலி. 1840 ஆம் ஆண்டில் எட்வர்ட் ஜான் அய்ர் என்பவருக்கு உதவினார். பின்னர் இவருடன் வந்த வேறு இரு பழங்குடி இனத்தவர் (யார்ரி, ஜோயி) அவருடன் வந்த ஜான் பாக்ஸ்டர் என்பவரைக் கொன்றுவிட்டனர். வைலி மட்டும் இறுதிவரை அய்ருக்கு உதவி பின்னர் அரசு பென்ஷனும் பெற்றார். ஆஸ்திரேலிய கண்ட ஆராய்ச்சிகள் இப்படிப் பல படுகொலைகள் நடக்கக் காரணமாயின.
ஜாக்கி ஜாக்கி என்று புனைப்பெயருடைய கல்மாரா என்ற பழங்குடி இனத்தவர் எட்மண்ட் கென்னடி என்பவருக்கு உதவினார். ஆனால் ஒரு பழங்குடி இனக் குழு கென்னைடியை ஈட்டியால் துளைத்துக் கொன்றுவிட்டனர். கல்மாரா ஓடிச் சென்று, கப்பலில் இருந்த வெள்ளையரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு கென்னடியின் சடலத்தை மீட்க மீண்டும் புதர்களுக்குத் திரும்பிவந்தார். இதனிடையே அந்த ஆராய்ச்சிக் குழுவில் இருந்த பலர் காணாமற்போயினர். இரண்டுபேர் தவிர அனைவரும் மறைந்தனர். இப்படி ஐரோப்பியர்கள் சென்றவிடம் எல்லாம் இரத்தக் களரியுடந்தான் வரலாறு துவங்கும். பின்னர் அதைக் காரணம் காட்டி, குருவி சுடுவதுபோல, பழங்குடி இனமக்களைச் சுட்டுக்கொல்லுவர். வட அமெரிக்க, தென் அமெரிக்க வரலாற்றைப் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்.
படங்கள்: கேடயங்கள் (லண்டன் சுவாமிநாதன்)
—தொடரும்
You must be logged in to post a comment.