Free Red Ferry of Brisbane
Written by london swaminathan
Post No. 2529
Date: 11th February 2016
Time uploaded in London 14-27
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
பிரிஸ்பேன் (Brisbane) என்னும் நகரம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது சிட்னி நகரிலிருந்து 1000 கிலோமீட்டர் தூரத்தில் பிரிஸ்பேன் நதிக்கரையில் இருக்கிறது. நாங்கள், உலக மஹா இயற்கை அதிசயமான பெரும் பவளத்திட்டைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் பிரிஸ்பேன் வந்தோம்.
பிரிஸ்பேனில் என்னை அதிசயிக்க வைத்த முதல் விஷயம், இலவச படகு சவாரி! உலகில் பத்துப் பதினைந்து நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலையைப் பார்க்க படகு சவாரியானலும் சரி, அல்லது பாரீஸ் நகரில் செயின் நதியில் பவனி வருவதானாலும் சரி காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் படகில் ஏற்றுவர். அட! எங்கள் லண்டன் மாநகரில் எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் தேம்ஸ் நதியில் உலாவர அழைத்துச் சென்றபோதும் ஒவ்வொரு ஆளுக்கும், ஒரு இருபது பவுனாவது (ரூ2000) செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிஸ்பேனில் இலவச படகு சவாரி.
Beautiful Brisbane River
ஹோட்டலில் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், சில தகவல் விசாரித்தபோது ‘ரெட் Fபெர்ரி’யில் (Red Ferry) போங்கள்; டிக்கெட் எதுவும் வேண்டம் என்று ஒரு துப்பு கொடுத்தார். சிவப்பு நிற படகில் ஏறினால் பிரிஸ்பேன் முழுதும் சுற்றிப் பார்க்கலாம். ஊரின் வரைபடம் கையிலிருந்தால் எந்த ‘ஸ்டாப்’பில் இறங்கினால் என்ன சுற்றுலாக் கவர்ச்சி இருக்கிறது என்பது தெரியும். ஆங்காங்கே இறங்கி இலவசமாகப் பார்த்துவிடலாம்.
உலகில் சில இடங்களில் நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் இலவச சவாரி இருக்கும். ஆனால் நதியில் ஊர் முழுவதும் செல்ல இலவச சவாரி, எனக்குத் தெரிந்தவரை இது ஒன்றுதான். வாழ்க பிரிஸ்பேன்.
Himalayan Salt for Good Health
இன்னொரு அதிசயம்!
பிரிஸ்பேனில் கடை கண்ணிகளை வேடிக்கை பார்த்தவாறு நகர்ந்தோம். ஒரு கடையின் வாசலில் பெரிய பெரிய பாறைகளாக (சிவப்புக் கூழாங்கற்கள் போல இருக்கும்) 30 கிலோ, 35 கிலோ என்று வைத்திருந்தார்கள். ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் – (Himalayan Salt) இமய மலை உப்பு என்று எழுதிவைத்திருந்தனர். எனக்கு ஒரே வியப்பு. அட! இந்தியாவில் கூட நான் பார்த்திராத இமயமலை உப்பை ஆஸ்திரேலியாவில் விற்பதன் மர்மம் என்ன என்ற ஐயம் எழவே, கடைக்குள் சென்றேன். அங்குள்ள ஒரு இளம் பெண் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடமென் ஐயப்பாட்டைக் களைய வினாக்கள் தொடுத்தேன். அவர் சொன்னார்: “ இவை அனைத்தும் இமயமலையிலிருந்து வந்தவை. இது மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்குச் சுகமளிக்கும். காற்றைத் தூய்மையாக்கும்”. பல புத்தகங்களும் வைத்திருந்தனர். காசு கொடுத்து வாங்க மனமுமில்லை. ஓசியில் புரட்டிப் பார்க்கத் துணிவுமில்லை. மனைவி மக்கள் விரட்டவே மெதுவாக நகர்ந்தேன்.
Asia Pacific Art Gallery
எங்களுக்கு போனஸ்
ஒவ்வொரு இடத்திலும் ஒரே நாள் இரவு ஹோட்டல் ரிசர்வ் செய்திருந்ததால் அருகிலுள்ள கோல்ட்கோஸ்ட், (Koala) கோவாலா சரணாலயம் ஆகியவற்றுக்குப் போகமுடியவில்லையே என்று வருத்தம். கோவாலா என்னும் மரக் கரடியும். கங்காரு என்னும் மிருகமும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் பிராணிகள்.
ஆயினும் கலைக் கூடத்துக்குச் (Art Gallery) சென்று வண்ண ஓவியங்களைப் பார்ப்போம் என்று குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கலைக்கூடத்துக்குள் நுழைந்தோம். எங்களுக்கு போனஸ் காத்திருந்தது. நாலு மாதங்களுக்கு ஆசிய- பசிபிக் வண்ண ஓவியங்களின் விசேஷ காட்சி என்பதைக் கண்டு மகிழ்ந்தோம். உள்ளே சென்றவுடன் அருமையான ஓவியங்களைக் கண்டு இரண்டு காமிராக்களையும் முடுக்கினேன். ஒரு நூறு படங்கள் கிடைத்தன. நேபாள, இந்திய ஓவியர்கள் பல இந்துமத ஓவியங்களைத் தீட்டியிருந்தனர்.
எல்லா ஊர்களிலும் இருப்பது போல இராட்சத ராட்டினம் (பிரிஸ்பேன் வீல் Brisbane Wheel) இங்கும் இருந்தது. ஆனால் அதைவிட்டுவிட்டு வேறு ஒரு புதுமையைக் காண விரைந்தோம். செயற்கைக் கடற்கரை அங்கு இருப்பதாக சுற்றுலாக் கவர்ச்சிப் பட்டியலில் இருந்தது. ஒரு பெரிய பூங்காவில் நிறைய கடல் மணலை நிரப்பி வைத்துள்ளனர். அதில் ஏராளமான பெண்கள் அரைநிர்வாண உடையுடன் வெய்யில் காய்ந்து கொண்டிருந்தனர். அருகிலேயே குழந்தைகள் , அவர்களுடைய விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு அப்படி ஒன்றும் கவர்ச்சியாகத் தோன்றவில்லை. அட, சரியப்பா! ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூதானே சர்க்கரை என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தோம்.
Brisbane Wheel
இரவு நெருங்க நெருங்க பசி எடுத்தது. நாங்களோ சுத்த சைவம். எனது மகன் கஷ்டப் பட்டு, கூகிள் செய்து ஒரு ‘வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்டைக் கண்டுபிடித்திருந்தான். ‘கூகிள் மேப்’ பைப் பயன்படுத்தி அங்கே போவதற்குள் இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. அது ஒரு தாய்(லாந்து) ரெஸ்டாரண்ட். வழக்கம்போல எங்கள் பல்லவியைப் பாடினோம். “நாங்கள் அனைவரும் சுத்த வெஜிட்டேரியன்ஸ். அதன் பொருள் என்ன வென்றால், ‘நோ பிஷ்’, ‘நோ மீட்’, ‘நோ எக்’ No Fish, No Meat, No Egg (மச்சம், மாமிசம், முட்டை அற்ற) என்று விளக்கினோம். அந்தப் பெண்ணோ, ‘நோ பிராப்ளம்’, பிஷ் சாஸ் (No Problem; we will use fish sauce or oyster sauce) போடுகிறோம் அல்லது ஆய்ஸ்டர் சாஸ் போடுகிறோம், மாமிசம், முட்டை எதுவும் போட மாட்டோம்’ என்று உறுதி தந்தாள்!!!! அடக் கடவுளே! அது வெஜிட்டேரியன் அல்லவே என்றோம். அதற்கென்ன, அதையெல்லாம் போடாமல் செய்வோம் .ஆனால் அது ‘ஹாரிபிள்’ (Horrible அதி பயங்காச் சுவை) ஆக இருக்குமென்று அச்சுறுத்தினாள்; தாயே, உண்மையைச் சொன்னாயே; நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க என்று மனதிற்குள் வாழ்த்திக்கொண்டே ஒரு இதாலிய ரெஸ்டாரண்டில் நுழைந்து வழக்கம்போல பீட்ஸா (Pizza), பாஸ்தா (Pasta) சாப்பிட்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.
பிரிஸ்பேன் நகரில் வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே, நீல நதியில் படகு செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. நல்ல பூங்காக்கள், தாவரவியல் பூங்கா ஆகியனவும் அழகூட்டுகின்றன. சுமார் 24 மணி நேரமே இருந்தாலும் மலையளவு சாதித்த மகிழ்ச்சி.
Whale song
ஆர்ட் காலரிக்குச் செல்லும் வழியில் அந்த ஊர் அறிவியல் காட்சிசாலையும் உள்ளது. அந்தக் கூடத்தில் பெரிய திமிங்கில உருவங்களைத் தொங்கவிட்டுள்ளனர். திமிங்கிலங்கள் கடலில் எழுப்பும் பெரிய சங்கொலி போன்ற சப்தத்தை திமிங்கிலப் பாட்டு (Whale Song) என்பர். அதை அப்படியே ரிகார்ட் செய்து அந்தக் கூடத்தில் ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறார்கள். முதலில் இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று வியந்த எங்களுக்கு தலையை நிமிர்த்திப் பார்த்தபோதுதான் விளங்கியது.
எல்லா ஊர்களையும் போல, பல ஷாப்பிங் மால் (கூடங்கள்), தெருக்களும் இருக்கின்றன. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல. அதையும் பார்த்து பொழுதும் போக்கலாம்.!
Brisbane by Night
–subham–
You must be logged in to post a comment.