Written by S Nagarajan
Date: 14 February 2016
Post No. 2538
Time uploaded in London :– 6-57 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
பாக்யா 12-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
மூலிகைப் போர்!
ச.நாகராஜன்
“ஆயுர்வேதத்தில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. பக்க ஆதாயங்களைத் தான் ஏற்படுத்தும்” – சுப்ரா கிஷன்
கடைசி கடைசியாக, அதிசயமாக நாம் விழித்துக் கொண்டோம். எதில்? மூலிகைப் போரில்!
பிரம்மாண்டமான இமயமலை வடக்கில் இருக்க விந்தியாசலம், கொல்லி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என்று நம் தேசத்தில் உள்ள மலைகளைச் சார்ந்துள்ள விஸ்தாரமான காடுகள் அபூர்வ மூலிகைகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகைகளின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டு அவற்றை இன்றும் ப்ழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக உப்யோகிக்கின்றனர். பெரிய வியாதிகள் கூட உடனடியாகத் தீருகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்களையும் தனி நபருக்கே உரித்தான பிரக்ருதியையும் அடிப்படையாகக் கொண்டது நமது ஆயுர் வேதம்.
இதை நமது விஞ்ஞானிகள் முதல் முறையாக ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளைக் கண்டுபிடித்து உரைத்துள்ளனர்.
ஆனால் நமக்கு முன்பாகவே விழித்துக் கொண்ட சீனா கன்ஃப்யூசியஸ் கூறிய நெறிகளின் படி மூலிகை ஆராய்ச்சியில் இறங்கி திபெத்தில் உள்ள அரிய பெரிய மூலிகைகளை இனம் கண்டு அதிலிருந்து பல்வேறு மருந்துகளைத் தயார் செய்து வருகிறது. உலகின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த மூலிகைப் போரை சீனா ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவோ வெளியில் அல்லோபதி என்று சொன்னாலும் மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்தே உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறது.
1820ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ஆய்வாளர்கள் மூலிகையிலிருந்து மலேரியாவைப் போக்கும் கொய்னா மாத்திரையைக் கண்டுபிடித்ததிலிருந்து இந்த மூலிகை வேட்டை ஆரம்பித்தது. சரக சம்ஹிதாவில் சரக முனிவர் கூறிய அற்புதமான சர்ப்பகந்தியை நாம் விட்டு விட அமெரிக்கா அதை எடுத்துக் கொண்டது. அதை உபயோகித்து, பன்னாட்டு மருந்து நிறுவனமான சிபா-கெய்கி ரெஸர்பைன் (Reserpine) மாத்திரையைக் கண்டுபிடித்து பெரும்புகழைப் பெற்றது. மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுத்த கதையையும் நாம் அறிவோம்.
2009ஆம் ஆண்டு சீனா ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து மூலிகைகளிலிருந்து மருந்துகளைத் தயாரிக்கும் உயர்தர உத்திகளை வகுத்துக் கொண்டது.
இமயமலைப் பகுதியை முற்றிலுமாக ஆராய்ந்து அங்கிருக்கும் அபூர்வ மூலிககைகளை இனம் கண்டு உயர்தர மருந்துகளை சீனா தயாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் மூலிகைப் போரில் அது வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக நமது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இமயமலைப் பகுதியில் கங்கோத்ரி யமுனோத்ரி என கங்கையும் யமுனையும் உருவாகும் பகுதிகளில் அற்புதமான மூலிகை வளம் உள்ளது.
இங்குள்ள துரோணகிரியின் அருகிலே தான் சஞசீவனி மூலிகை உள்ள் சஞ்சீவனி பர்வதம் உள்ளது.
லக்ஷ்மணனைக் காப்பாற்ற ஹநுமார் சஞ்சீவனி மூலிகையை எடுக்க வந்த பந்தர் பூஞ்ச் பகுதியில் பங்குனி மாதத்தில் ஒரே ஒரு குரங்கு மட்டும் வருகிறது. ஹரித்வார் வழியாக வரும் அந்தக் குரங்கை தரிசிக்க யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பர். பலரும் தரிசிக்கின்றனர். ஒரு வருடம் மலை உச்சியில் வசிக்கும் அந்தக் குரங்கு அடுத்த குரங்கு வந்தவுடன் மலையை விட்டு இறங்கி விடும். இமயமலை தரும் நூற்றுக் கணக்கான அபூர்வங்களில் இதுவும் ஒன்று!
உயிரை மீட்டுத் தரும் சஞ்சீவனி மூலிகை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளின் பெயரை சரகர் குறிப்பிடுகிறார். உயிரைக் கொல்லும் வியாதியான கான்ஸருக்கு வின்ப்ளாஸ்டைன் (Vinblastiine), மற்றும் வின்கிறிஸ்டைன்(Vincristine) ஆகிய மருந்துகள் மூலிகையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.
இந்திய அரசின் நிறுவனமான சென்ட்ரல் ட்ரக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குக்குள் மூலிகையிலிருந்து குக்குளிபிட் மருந்தை 1986இல் தயாரித்தது குறிப்பிடத் தகுந்தது.
இந்த வகையில் நமது ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜியைச் (Centre for Cellular and Molecular Biology) சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் மனித அமைப்பு சரிதானா என்ற சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக 20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 3416 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனம் ஆய்வை ஆரம்பித்தது. இறுதியில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ள 262 பேர்களை தேர்ந்தெடுத்தது.
இவர்களின் மீது மரபணு, புள்ளியியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2கோடி ரூபாய் செலவில் ஆறு ஆண்டுகள் செய்யப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் 2015 வருட முடிவில் முடிந்து விட்டது.
இதன் முடிவுகள் ஆச்சரியமூட்டும் விதமாக நமது ஆயுர்வேத கொள்கைகளை உறுதி செய்கிறது!
இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தனது குழுவினர் மரபணுவில் 52 மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்றால் மூன்று தோஷங்களின் உட்பிரிவுகளையும் கண்டு பிடிக்க முடியும். அப்போது ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனித் தனி சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்திய அறிவியல் இதழ்களில் இடம் பெற்று விட்ட இந்த ஆராய்ச்சி மூலிகைப் போரில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.
தொன்மமும் நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அவை உறுதிப்படுத்தப் படும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாதல்லவா!
ருத்ரமூலிகா, சஞ்சீவனி, சர்ப்பகந்தி உள்ளிட்ட அபூர்வ மூலிகைகளை இந்திய விஞ்ஞானிகள் இனம் கண்டு ஆய்வு நடத்தினால் புதியதோர் வியாதியில்லா உலகைப் படைக்க இந்திய விஞ்ஞானிகள் காரணமாகி விடுவார்கள். புராதனமான அறிவும் நவீன அறிவியலும் ஒன்றிணைந்தால் இந்தியா, ‘மூலிகை நாடு’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்று விடும்!
அந்த நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரான்ஸை சேர்ந்த பிரபல் விலங்கியல் அறிஞரும் இயற்கையியலருமான (Zoologist and Naturalist) ஜார்ஜ் குவியே ( Georges Cuvier 1769-1832) ஒரு விநாடி கூட நேரத்தை வீணாக்க மாட்டார். உலகில் உள்ள சகல விதமான மிருகங்கள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களைப் பற்றி அவருக்கு அத்துபடி. அந்த விவரங்களை எல்லாம் தனது அறையில் அவர் சேகரித்து வைத்திருந்தார்.
தன் வீட்டிற்குள் வந்து அநாவசியமாக யாரேனும் நேரத்தை வீணடிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிரபலமான ஒரு கனவான் அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க வருவார். ஒருமுறை அதைப் பற்றிக் கூறுகையில், “ அவர் வருவது ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள; அவ்வளவு தான்! யாராவது வந்து இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று என்னிடம் தெரிவிக்கத் தேவையே இல்லை. அவர்கள் கூறுவதை விட எனது தெர்மாமீட்டரும் பாரோமீட்டரும் இன்னும் துல்லியமாக அனைத்தையும் தெரிவிக்கும்.” என்று கூறியவர் தன் அறையைச் சுட்டிக் காட்டி. “இதோ இங்கு இருக்கும் மிருக உலகத்தில் எந்த வகையிலும் சரி, எந்த இனத்திலும் சரி, எப்படி ஆனாலும் சரி என்னை பயமுறுத்தக் கூடிய ஒரு உயிரினமே கிடையாது. ஆனால் வெட்டியாய் நேரத்தைப் போக்கும் சோம்பேறிக்கும் நேரத்தை வீணடிக்கும் வீணரையும் கண்டால் நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றார். ஆகவே அவரைச் சந்திப்பவர்கள் ஒரு வினாடி நேரத்தையும் கவனமுடன் கணித்துக் கொள்வார்கள்.
மேதைகள் அனைவருக்கும் நேரம் என்பது பொன்னைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டின் சட்ட மேதையும் பிரதான அமைச்சராகவும் விளங்கிய ஹென்றி ப்ராங்கோய்ஸ் டி அகுஸா (Henry Francois de aguesseau 1688-1751)) என்பவர் ஒரு வினாடி நேரத்தையும் வீணாக்க மாட்டார்.
தின்சரி உணவு நேரத்தில் மேஜைக்கு சரியான நேரத்தில் அவர் வந்து அமர்வார். ஆனால் அவரது மனைவியோ தினமும் 15 நிமிடம் கழித்தே வருவார். எவ்வளவோ சொல்லியும் அவரது வழக்கம் மாறவில்லை.
பார்த்தார் அகுஸா. டைனிங் டேபிளுக்கு ஒரு நோட்டுடன் வந்து அமர ஆரம்பித்தார். 15 வருடங்கள் கழித்து பெரிய நான்கு தொகுதிகளை அவர் வெளியிட்டார். எல்லாம் டைனிங் டேபிள் நோட்புக்கில் எழுதிய நூல் தான்! அது பல பதிப்புகளைக் கண்டு பெரும் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.
எல்லா மேதைகளும் முதலில் மற்றவருக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்: நேரத்தை வீணாக்காதே என்பது தான்!
*******
You must be logged in to post a comment.