வால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)

eagle1

Written by S Nagarajan

 

Date: 20  February 2016

 

Post No. 2558

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

  19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மேதை உள்ளம்

வால்டேர் வளர்த்த கழுகு

 

.நாகராஜன்

 voltaire

உலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்

ஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.

“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.

தன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்!

அப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.

பறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.

கடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.

மாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.

“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”

இப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.

பறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.

 

eagle2

வைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.

அவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

மறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

வால்டேருக்கு புதிய வேலையாக இது  வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது?” என்பது தான்!
“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.

ஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே  இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா! எப்படிப்பட்ட நல்ல செய்தி! என் கழுகு நன்கு குணமாகி விட்டதா?” என்றார்

 

.”இல்லை ஐயா!  அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது  செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.

இதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.

“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு!” என்று ஒரு கூப்பாடு போட்டார்.

நடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா?’ என்று கேட்டாள்.

ரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.

“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம்! நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா? விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.

 

eagle-flying-on-sky

இரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்?” என்று கேட்டார்

“ஐயோ, பாவம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்றாள் டெனிஸ்.

“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள்? ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன? இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான்  உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.

மிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.

ஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.

“ஒரு வார்த்தையும் பேசாதே! ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா! ஓடிப் போ” என்றார் வால்டேர்.

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.

 

 

கருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.

கஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.

கருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து!

************

.

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: