Written by S Nagarajan
Date: 21 February 2016
Post No. 2560
Time uploaded in London :– 6-28 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நெப்போலியனின் வயது!
ச.நாகராஜன்
இத்தாலியில் உள்ள மிலான் நகரைப் பிடிக்க மாபெரும் போரில் நெப்போலியன் ஈடுபட்டிருந்த காலம் அது.
மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போர் நடக்க இருக்கிறது.
கமாண்டர் இன் சீஃப் ஆக இருந்த நெப்போலியனை கௌரவிக்கும் வண்ணம் இரவு நேர விருந்தை ஒரு பெரிய மாளிகையில் பணக்காரப் பெண்மணி ஒருவர் அளித்தார்.
அதில் கலந்து கொள்ள வந்திருந்த நெப்போலியனை கூரிய கேள்விகளால் தொளைத்து எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
மறு நாள் போரைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாவீரனோ கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக ஆனால் ஆழ்ந்த அர்த்தமுடைய வார்த்தைகளால் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.
இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்தப் பெண்மணி குத்தலாக நெப்போலியனை நோக்கி, “அது சரி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு புகழ் பட்டங்களா உங்களுக்கு? உங்கள் வயது தான் என்ன?” என்று கேட்டாள்.
உடனே பளீரென்று சுருக்கமாக பதிலளித்தான் நெப்போலியன்: ”அதுவா, உண்மையில் என் வயது இன்று இருபத்தைந்து தான். ஆனால் நாளைக்கோ மி-லான்!” என்று பதிலளித்தான்.
மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றி விடுவேன் என்பதைக் தன்னம்பிக்கையுடன் குறிப்பிடுகையில் மி-லான் என்ற வார்த்தையை சிலேடையாக அவன் பயன்படுத்தினான் பிரெஞ்சு மொழியில். மில் என்றால் ஆயிரம் என்று பொருள். ஆன் என்றால் வருடங்கள் என்று பொருள். மிலான் என்ற வார்த்தைக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள். மிலான் நகரை வென்று விட்டால் ஆயிரம் ஆண்டு புகழைப் பெறுவேன் என்று கூறிய மாவீரன் மறு நாள் மிலான் நகரைக் கைப்பற்றி பெரும் புகழை அடைந்தான்.
இத்தாலி போரில் படைவீரர்களை அணிவகுக்க வைத்த போது தனது தந்திரமான போர் முறையால் ஒவ்வொருவரும் எங்கிருந்து எப்படி தாக்குதலை நடத்த வேண்டும் என்று அவன் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குதிரைப்படை வீரன் ஒருவன், “மன்னரே! உங்களிடம் ஒரு நிமிடம் தனியாகப் பேச் அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினான்.
அவனை அருகில் அழைத்த மாவீரன் “என்ன விஷயம்?” என்று கேட்டான்.
அந்த வீரன் நெப்போலியனின் ஒவ்வொரு உத்தரவையும் சொல்லி அது எப்படி எதிரிகளை வீழ்த்தி வெற்றியைத் தரப் போகிறது என்பதை புத்திசாலித்தனத்துடன் விளக்கினான்.
“அடப் போக்கிரி! மேலே ஒரு வார்த்தையும் பேசாதே! என் இரகசியம் எல்லாவற்றையும் சொல்லி விடுவாய் போல இருக்கிறதே!” என்று கூறி விட்டு அன்புடன் அவன் உதடுகளில் தன் விரல்களை வைத்து அவனை பேசாமலிருக்கச் செய்தான்.
.
குதிரை வீரன் விடை பெற்றுக் கொண்டு போர்க்களம் சென்றான்.
போர் முடிந்தது, மாபெரும் வெற்றியைப் பெற்ற நெப்போலியன் தன் உதவி தளகர்த்தரிடம் அந்த குதிரை வீரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான்.
எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. போரிலே குண்டடி பட்டு அவன் மாண்டிருக்கக் கூடும்!
நெப்போலியன் பெரிதும் வருந்தினான் – மாபெரும் புத்திசாலி வீரனை இழந்து விட்டோமே என்று. அவன் கௌரவிக்கப்பட்டு பதவி உயர்வு பெறுவதற்கு பதில் இந்த பூமியிலிருந்து மேல் உலகத்திற்கு உயர்வு பெற்று விட்டான்!
இத்தாலிய சேனையின் கமாண்டராக இருந்த நெப்போலியன் ஆஸ்திரிய படைகளுக்கு எதிராகக் கடும் போரைத் தொடுத்தான்.
கோரமான போர்! இரண்டு நாட்கள் இடைவிடாமல் கடுமையாகப் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களைப் பார்த்த அவன் சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரத்தில் தன் வீரர்களை நோக்கி, “இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு. நன்கு இளைப்பாறுங்கள்” என்று கட்டளையிடவே அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.
ஆனால் தனது படை பாசறையின் எல்லையில் மட்டும் கூடாரங்களை அமைத்துக் காவல் காக்க உத்தரவிட்டான் அவன்.
இரவு நேரத்தில் எல்லையோரத்தில் இருந்த கூடாரக் காவல் வீரன் இடைவிடாத போரினால் ஏற்பட்ட களைப்பில் தன்னை மறந்து உறங்கி விட்டான்.
இரவு நேரச் சோதனைக்காக அங்கு வந்த நெப்போலியன் அந்தக் காவல் வீரன் தூங்குவதைப் பார்த்தான்.
பேசாமல் அவன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துத் தானே நின்றவாறு காவல் காக்க ஆரம்பித்தான்.
ஒரு மணி நேரம் கழிந்தது. மெதுவாகக் கண் முழித்த அந்த வீரன் அங்கு தன் துப்பாக்கியைக் கையில் ஏந்தி இருப்பது யார் என்று பார்த்தான்.
மாமன்னன் நெப்போலியன் காவல் வீரனாக அங்கு இருந்தான்.
“ஐயோ!” என்று அலறிய அவன், “நான் தொலைந்தேன்!” என்று புலம்பினான்.
“இல்லை, நண்பனே! உன் களைப்பால் நீ தூங்கி விட்டாய்; ஆனால் முக்கியமான வேலையில் நீ இருக்கிறாய். ஒரு கணம் அசந்தாலும் நாம் தோற்க நேரிடும். பிடி உன் துப்பாக்கியை. கவனமாகக் காவல் வேலையைப் பார்!” என்று சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்தான் நெப்போலியன்.

Napoleon Bonaparte
அந்தக் காவல் வீரனின் கண்கள் கசிந்தன.
ஒரு உண்மையான தலைவனாக இருந்ததாலேயே உலக்ப் புகழ் பெற்ற வீரனாக அவன் மிளிர்ந்தான் என்பதற்கு இதைப் போன்ற ஏராள்மான சம்பவங்கள் அவன் வாழ்வில் உள்ளன!
********
You must be logged in to post a comment.