Written by S Nagarajan
Date: 22 February 2016
Post No. 2563
Time uploaded in London :– 8-59 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
19-2-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை.
பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!
ச.நாகராஜன்
“சந்தேகப் பேர்வழிகள் ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கவில்லையே அதனால் தான்!”
– ஜேஸன் ஹாஸ்
சாதாரணமாக இயற்பியல், இரசாயனம்,உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்திய விஞ்ஞானிகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஆனால் பேய்கள், ஆவிகள் உலகம் போன்றவற்றை ஆராயும் விஞ்ஞானிகளுக்கு விளம்ப்ரமும் கிடைக்காது, பரிசுகளும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை. என்றாலும் பல விஞ்ஞானிகள் தங்கள் ஆர்வம் காரண்மாக இப்படிப்பட்டவற்றை ஆராய்வது உண்டு.
அப்படிப்பட்டவர்களுள் பேயை முறைப்படி ஆராய்ந்து ஏராளமான ஆவணங்களை உருவாக்கிய ஒரே விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுபவர் ஹான்ஸ் பெண்டர் (Hans Bender) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 5-2-1907 மறைவு 7-5-1991). ஜோதிடத்திலும் இவருக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. அவரது நண்பரான தாமஸ் ரிங்குடன் ஜோதிடம் கேட்காமல் இவர் எந்த விஞ்ஞான மற்றும் சொந்தக் காரியங்களில் ஈடுபடுவதில்லை.
இவர் ஆராய்ந்த பேய் கேஸ்களில் உலகப் புகழ் பெற்ற ஒரு கேஸுக்கு ரோஸென்ஹெய்ம் கேஸ் என்று பெயர்.
பவேரியாவின் தெற்குப் பகுதியில் ரோஸென்ஹெய்ம் என்ற நகரில் சிக்மண்ட் ஆடம் என்ற ஒரு வக்கீல் வாழ்ந்து வந்தார். அவர் அலுவலகத்தில் 1967ஆம் ஆண்டு திடீரென்று அமானுஷ்யமான பல காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.
அரண்டு போன அவர் விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டரை நாடினார்.
அலுவலகம் வந்த பெண்டர் என்ன நடக்கிறது என்று கேட்டார். அந்த அலுவலகத்தில் நான்கு போன்கள் உண்டு. திடீர் திடீரென போன் அழைப்புகள் ஒலிக்கும். ஆனால் போனை எடுத்தால் மறுமுனையில் பதிலே வராது. போனில் ஏதோ பழுது இருக்கிறதென்று நினைத்து ஆடம் எல்லா போன்களையும் புதிதாக மாற்றினார். ஆனால் மர்மமான போன் அழைப்புகள் தொடர்ந்தன. உடனே டெலிபோன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்த எஞ்ஜினியர்கள் வந்து எல்லா வயர்களையும் ஆராய்ந்து அனைத்தும் சரியாகவே இருக்கின்றன என்று உறுதிபடத் தெரிவித்தனர்.
ஜெர்மனியில் 0119 என்ற நம்பர் அனைத்து அழைப்புகளையும் துல்லியமாகக் குறித்து எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும், இதை டாக்கிங் க்ளாக் (TALING CLOCK) என்று அழைப்பர்.
இந்த பேச்சைக் குறிக்கும் கடிகாரத்தின் படி ஆடம்ஸுக்கு பில் அனுப்பப்பட்டது. அவர் அரண்டு போனார். அதாவது ஒரு நிமிடத்திற்கு அவர் 6 ‘கால்’களைப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது! யாராலும் செய்ய முடியாத ஒரு அரிய காரியம் இது! ஒரு எண்ணை டயல் செய்து அடுத்தவர் மறுமுனையில் எடுக்கும் காலத்தைச் சற்று கவனித்தாலே நிமிடத்திற்கு ஆறு கால்களை யாராலும் பேச முடியாது.
1967 அக்டோபரில் கட்டிடத்தில் உள்ள பல்புகளும் பல்புகள் பொருத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகளும் ஆட ஆரம்பித்தன. திடீரென 90 டிகிரிகள் அவை திரும்பும்!
உடனே மீண்டும் மின் இணைப்பு சரி பார்க்கப்பட்டது. ஒரு வோல்டேஜ் மீட்டரும் புதிதாக பொருத்தப்பட்டது. பெரிய அளவிலான வோல்டேஜ் மாறுதல்கள் ப்யூஸை போக்கி விடும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை! அங்கிருந்த போட்டோகாப்பி மெஷினிலிருந்து மின்சாரம் கசிய ஆரம்பிக்கவே மின் இணைப்பையே துண்டித்து விட்டு ஜெனரேட்டர் மூலமாக மின் சக்தி பெறப்பட்டது. ஆனால் அப்போதும் இவை தொடர்ந்தன.
அனைத்தும் விசித்திரமாக இருந்தன. இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெண்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவை நிகழ்வதை அவரது குறிப்பேடுகள் சுட்டிக் காட்டின. தற்செயல் ஒற்றுமை போல ஆன்னி மேரி என்ற இளம் பெண் அங்கிருக்கும் போது மட்டுமே இவை நிகழ்ந்தன.
அவள் உள்ளே வந்தவுடன் இந்த அமானுஷ்ய செயல்கள் ஆரம்பிக்கும். அவள் சென்ற பின்னர் இவையும் நின்று விடும். ஆன்னியை விசாரிக்க ஆரம்பித்தார் பெண்டர். அவள் ஒரு உணர்ச்சிகரமான பெண் என்பதையும் தனது எஜமானனைக் கண்டால் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதையும் அறிந்தார் பெண்டர்.
1967 டிசம்பர் மற்றும் 1968 ஜனவரியில் இந்த அமானுஷ்ய செயல்கள் தீவிரமாக அதிகரித்தன. சுவரில் தொங்கும் காலண்டரின் பக்கங்கள் தாமாக டர்ரென்று கிழிந்து விழுந்தன! சுவரிலே தொங்கும் வண்ண ஓவியங்கள் தாமாகவே திரும்பிக் கொண்டன. 400 பவுண்டு எடையுள்ள ஓக் மரத்திலான ஒரு அலமாரி – சாதாரணமாக யாராலும் அசைக்கக் கூட முடியாதது – சில அடிகள் தானாகவே நகர்ந்தது. ஆனால் கீழே பொருத்தப்பட்டிருந்த லினோலியம் சேதமடையாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது. மேஜை டிராயர்கள் தாமாகவே திறந்து கொண்டன. பின்னர் டப்பென்று சத்தத்துடன் மூடிக் கொண்டன!
இதெயெல்லாம் படமாகவும் பிடித்தார் பெண்டர். அன்னி மேரி அந்த வேலையிலிருந்து நின்றவுடன் அனைத்து அமானுஷ்ய செயல்களும் நின்றன!
தான் சேகரித்த ஏராளமான ஆவணங்கள் மூலமாக இந்த அமானுஷ்ய செயல்கள் அனைத்தும் மர்மமான ஒரு ஆவியின் வேலை தான் என்று பெண்டர் கூறினார். அன்னி மேரியின் வெறுப்பும் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் அவர் இருக்கும் போது அவர் மூலமாக இந்த சக்திகள் தூண்டப்பட்டன என்றும் அவர் கூறினார்.
இந்த கேஸைப் போல அறிவியல் ரீதியிலான ஆவணங்களுடன் கூடிய கேஸ் வேறொன்றும் இல்லை என்ற புகழுடன் படமாக பிடிக்கப்பட்ட கேஸும் இது தான் என்பதும் ஹான்ஸ் பெண்டருக்கு புகழை அள்ளித் தந்தது. 84 வயது வரை வாழ்ந்த பெண்டர் தன் வாழ்நாள் இறுதி வரை இந்த பேய் ஆராய்ச்சியை விடவில்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..
ஆங்கிலேய பிரபுக்கள் பலர் கூடியிருந்த கூட்டம் ஒன்றில் ஒரு விஷயத்தின் மீது அலர்ஜியாக கடும் வெறுப்பைக் கொண்டிருக்க முடியுமா என்பதைப் பற்றிய பேச்சு வந்தது. இயற்பில விஞ்ஞானியான ஜிம்மர்மேன் (Zimmermann) அப்படி இருப்பது ஒரு வகையான வியாதி என்று கூறினார். அங்கிருந்த பார்படோஸ் என்ற நகரின் கவர்னரின் மகனான வில்லியம் மாத்யூஸ் அப்படிப்பட்ட ஒரு வியாதி கொண்டிருப்பவர். அவருக்கு சிலந்தி என்றாலே அலர்ஜி. ஜிம்மர்மேன் அதைச் சுட்டிக் காட்டிய போது அனைவரும் சிரித்தனர. அதெல்லாம் ஒரு வியாதியே கிடையாது என்றனர். உடனே அதை நிரூபித்துக் காட்ட விஞ்ஞானி விழைந்தார். மனதில் எழும் இந்த வெறுப்பை ஒரு இயந்திர விளைவால் நிரூபிக்க முடியும் என்பது அவர் முடிவு.
அங்கிருந்தவர்களில் ஒருவரான லார்ட் ஜான் மர்ரே என்பவரை கறுப்பு நிற மெழுகில் ஒரு சிலந்தியைச் செய்யச் செய்தார். அந்தச் சிலந்தியை அனைவரும் பார்க்கும் படி செய்து விட்டு அவர் வெளியே சென்றார்.
பின்னர் திரும்பி வருகையில் தன் கையில் மெழுகிலான சிலந்தியை வைத்துக் கொண்டு கையை மூடியவாறே உள்ளே நுழைந்தார்.
அவரது மூடிய கையைப் பார்த்தவுடன் வில்லியம் மாத்யூஸின் கண்கள் சிவந்தன. நரம்புகள் புடைத்தன. மிகுந்த கோபத்துடன் ஆவேசமாக தன் இடையிலிருந்த கத்தியை உருவினார். அந்த சிலந்தியை அவர் கொண்டு வருவதாக எண்ணிய மாத்யூஸ் மர்ரே மீது பாயப் போனார்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அனைவரும் அவர் மீது பாய்ந்து கத்தியைப் பிடுங்கினர்.
மாத்யூஸிடம் அவர் பார்த்தது மெழுகிலான ஒரு பொம்மை சிலந்தி தான் என்பதையும் மேஜை மீது வைக்கப்பட்ட சிலந்தியை அவரே தொட்டுப் பார்க்கலாம் என்றும் அனைவரும் கூறினர்.
வேகமாகத் துடித்த அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீரானது. சுயநிலைக்கு அவர் மெதுவாகத் திரும்பினார். ஆனால் சிலந்தியைத் தொட மறுத்து விட்டார்.சிலர் இன்னும் கொஞ்சம் மெழுகை எடுத்து அவர் முன்னாலேயே சிலந்தியைச் செய்து காட்டினர்.
இது போல அவரும் பொம்மையினால் சிலந்தியைச் சிறிது சிறிதாச் செய்து பார்த்து பின்னர் நிஜ சிலந்தியைப் பார்த்தால் அவரது அருவருப்பு போய் விடும் என்று ஜிம்மர்மேன் ஆலோசனை கூறினார்.
நமது ஊரில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அருவறுப்பு அடையாத பெண்கள் உண்டா என்ன?
******
You must be logged in to post a comment.