Written by S Nagarajan
Date: 24 February 2016
Post No. 2569
Time uploaded in London :– 6-00 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ச.நாகராஜன்
“மனித குலம் விண்வெளியைப் பயன்படுத்தவில்லை எனில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட நீடித்திருப்பது சந்தேகமே!” – ஸ்டீபன் ஹாகிங்
பூமியில் ஆதார வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு வருகின்றன; இன்னொரு புறம் வெப்பமயமாதல் என்ற க்ளோபல் வார்மிங் காரணமாக பூமியின் வெப்பம் அதிகரித்து ஏராளமான இன்னல்களை மனித குலம் அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. பல உயிரினங்கள் அருகி வருகின்றன. என்ன செய்வது?
ஒரே வழி; விண்ணில் குடியேறுவது தான்! அங்கு குடியேறுவதன் மூலம் மனித குலமும், அரிய உயிரினங்களும் நீண்ட காலம் வாழ வழி ஏற்படுவதோடு அங்கிருக்கும் விலை மதிப்பற்ற தாது வளத்தையும் ஆற்றலையும் பூமிக்குக் கொண்டு வந்து பூமியையும் செழிப்பாக்கலாம்.
பூமிக்கு வரும் ஆபத்துக்கள் பல; விண்கற்கள் மோதி டைனோஸர் இனம் அழிந்தது போலவும் லெமூரியா கண்டம் ஒழிந்தது போலவும் பல உயிரினங்களும், பகுதிகளும் அழியலாம். எரிமலை வெடித்தல், சுனாமி உருவாதல் போன்றவற்றால் பெரும் சேதம் ஏற்படலாம்.
இந்த இயற்கைச் சீற்றங்கள் ஒரு புறமிருக்க அணு ஆயுதங்களை உபயோக்கிக்கும் போர் ஏற்பட்டால் ஒரு கணத்தில் பல கோடிப் பேர் அழியும் நிலை ஏற்படும். இப்படி போர் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமே இல்லை. ஒரு கிறுக்கு ஹிட்லர் தோன்றியதால் பல லட்சம் பேர் மாண்டதையும் ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டினால் பல லட்சம் பேர் சில விநாடிகளில் மாண்டதையும் சமீபத்திய சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது. இது தவிர ரோபாட்டுகள் ராணுவங்களில் ஒரு படையாக செயல்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது. இந்த் ரொபாட்டுகளின் போர் நம்மை எங்கு கொண்டு போய் விடுமோ, அதுவும் தெரியவில்லை!
ஆகவே தான் சூரிய மண்டலத்தில் ki அருகில் உள்ள வால் நட்சத்திரம், விண்கற்கள், சந்திரன் ஆகிய இடங்களில் சிறு சிறு மனிதக் குடியிருப்புகளை முதலில் அமைத்துப் பின்னர், சூரிய மண்டலம் முழுவதுமாக ஆங்காங்கே மனிதப் பிரிவுகள் குடியேற வேண்டும் என்று விண்வெளி பற்றி நன்கு அறிந்த மேதைகள் விரும்புகின்றனர்.
ஆனால் சஹாரா பாலைவனத்தையே குடியிருப்பாக மாற்ற வழியில்லை, அண்டார்டிகா பிரதேசத்திலேயே குடியிருக்க ஏற்பாடு செய்ய முடிய்வில்லை; எதற்கு விண்வெளிக் குடியிருப்பு என்ற வெட்டிப் பேச்சு என்று பலரும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக விண்வெளி ஆர்வலரும் கூகிள் எக்ஸ் லாப்ஸின் தலைவருமான அஸ்ட்ரோ டெல்லரும் அவரது மனைவியும் டாக்டருமான டேனியலும் இணைந்து க்வார்ட்ஸ் என்ற பத்திரிகையில் ஒரு கிண்டலான, பரபரப்புக் கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளனர். அஸ்ட்ரோ டெல்லர் பெரிய விஞ்ஞானி. நுண்ணறிவுத் தொழில் நுட்பம் என்னும் இன்டெலிஜெண்ட் டெக்னாலஜியில் வல்லுநர்.
தங்கள் கட்டுரையில் செவ்வாய்க்கு நாம் எல்லோரும் குடியேறி நம் அழகிய பூமியைப் பாலைவனம் ஆக்கப் போகிறோமா என்ற கேள்வியை அவர்கள் கேட்டுள்ளனர்.
பூமியில் உள்ள 750 கோடி பேரும் குடியேற வேண்டும் என்று யார் சொன்னது, இவ்வள்வு பேர்களும் செவ்வாயில் குடியேற முடியும் என்று சொல்ல நாங்கள் என்ன பைத்தியங்களா என்று சூடாக விஞ்ஞானிகள் பதில் சொல்ல விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!
முதலில் அண்டார்டிகாவில் சில பேரை அந்தக் கடுங் குளிரில் குடியிருக்க வைத்துக் காண்பியுங்கள் என்ற கட்டுரையின் சவாலுக்கு, எங்களிடம் புதிய தொழில் நுட்பம் உள்ளது என்ற பதிலை விஞ்ஞானிகள் தருவதோடு, முதலில் சந்திரக் குடியிருப்பை அமைப்பதே எங்களது பணியாக அமையும் என்கின்றனர்.
விண்வெளியில் உள்ள தாது வளங்கள், வைரம், டைட்டானியம் உள்ளிட்ட அரிய விலமதிப்பற்ற செல்வங்களை அள்ளிக் கொண்டு வருதல் என்பதே உடனடி பணி என்பதை அவர்கள் தெளிவாக்குகின்றனர்.
இதற்கு வழிவகை அமைக்கும் விதத்தில் 2015 நவம்பர் 23ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கமர்ஷியல் ஸ்பேஸ் லாஞ்ச் காம்பெடிடிவ்னெஸ் ஆக்ட் என்றபுதிய சட்டத்தைக் கொண்டுவர கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் விண்கற்களிலும் சந்திரனிலும் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அனைத்து வளங்களும் பூமிக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது.
இதில் கூகிளில் வேலை பார்க்கும் கட்டுரையாளரை கேலி செய்யும் ஒரு அம்சமும் இருக்கிறது. கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள லாரி பேஜ் மற்றும் எரிக் ஷ்மிட் ஆகியோரே விண்கல் சுரங்க நிறுவனமான ப்ளானிடரி ரிசோர்ஸஸில் முதலீடு செய்துள்ளனர்!
முக்கியமான ஒரு விஷயம் சூரிய ஒளியை அபரிமிதமாக பூமி பெறுவது தான். இந்த சூரிய ஆற்றலை மட்டும் முழுவதுமாக நாம் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் பல லட்சம் வருடங்களுக்கு மனித குலத்திற்கு பயமே இல்லை. சோலார் எனர்ஜி மீது உலக விஞ்ஞானிகளின் முழு கவனமும் இப்போது திரும்பியுள்ளது ஒரு நல்ல அறிகுறி!
முதலில் சந்திரனையும் பூமியையும் இணைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதை நீடித்து இருக்கச் செய்யும் நிதித் திட்டம் சந்திர-பூமி பொருளாதாரம் எனக் கூறப்படுகிறது.
ஒரு நிரந்தரமான விண்வெளிக் குடியிருப்பை நாம் முதலில் ஆரம்பித்து விட்டால் பின்னர் விண்வெளிச் சாலை மூலமாகப் பல கிரகங்களுக்கும் விண்கற்களுக்கும் பயணம் மேற்கொள்ளலாம்!
இந்த வழியில் கூகிள் நிறுவனம் முதலில் சந்திரனில் இறங்கும் விண்கலங்களை அமைக்க உதவும் தனியார் குழுக்களுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது. 900 மில்லியன் டாலர்கள் (54000 லட்சம் ரூபாய்கள்) இதற்கென கூகிள் நிறுவனம் ஒதுக்கி உள்ளது.
அடுத்த தலைமுறை விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்ற புதிய செய்தி விண்வெளி விஞ்ஞான சரித்திரத்தில் ஒரு புதிய மைல் கல்.
இனி வரும் புதிய தலைமுறையினரை நீ எங்கே அமெரிக்காவிலா அல்லது லண்டனில் இருக்கிறாயா என்று கேட்பது போய் நீ எங்கு இருக்கிறாய், சந்திரனிலா, அல்லது விண்கல்லிலா என்று கேள்வி கேட்கும் நாள் வரக் கூடும்.
புதிய விண்வெளிக் குடியிருப்புத் தலைமுறையினரை வாழ்த்தத் தயார் ஆவோம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் . . .
இங்கிலாந்து மன்னரான மூன்றாம் ஜார்ஜின் (1738-1820) அரசவையில் கணித மேதை ராம்ஸ்டென் (RAMSDEN) அங்கம் வகித்து வந்தார், கணிதக் கருவிகள் செய்வதில் அவர் பெரும் நிபுணர். ஆனால் குறித்த நேரத்தில் எதையும் தர மாட்டார். ஒரு முறை மன்னர் தனக்கு ஒரு கருவி வேண்டும் என்று அவரிடம் ஆணையிட்டார். ராம்ஸ்டென் குறித்த காலத்தில் எதையும் செய்ய மாட்டார் என்பதை அறிந்த மன்னர் ஒரு தேதியையும் குறிப்பிட்டு அந்த தேதிக்குள் கருவி வந்தாக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.ஆனால் வழக்கம் போல மிகுந்த கால தாமதம் ஆனது; மன்னர் சொன்ன தேதி வந்தது, கருவி வந்தபாடில்லை!
இதனால் பெரும்கோபம் அடைந்த மன்னர் அவரை உடனே அரசவைக்கு வருமாறு உத்தரவிட்டார். “அரசவைக்கு வருகிறேன், ஆனால் மன்னர் என் மீது கோபம் கொள்ளக் கூடாது” என்ற செய்தியை அனுப்பினார் ராம்ஸ்டென்.
“சரி! அவரை வரச் சொல்” என்றார் மன்னர். கடைசியாக ஒரு நாள் கருவியுடன் வந்து சேர்ந்த ராம்ஸ்டென் தன்னை மன்னிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
கருவியைப் பார்த்து மகிழ்ந்த மன்னர், “அடடா! ராம்ஸ்டென்! என்ன ஆச்சரியம் நான் குறித்த அதே மாதம் அதே தேதியில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்களே” என்று பாராட்டி நிறுத்தினார்.
தான் தாமதமாக அல்லவா கருவியைத் தந்திருக்கிறோம் என்று குழம்பிப் போன ராம்ஸ்டெனை நோக்கி மன்னர் தொடர்ந்தார்: “ஒரு சின்ன மாறுதல் தான் இருக்கிறது. வருஷம் தான் மாறி இருக்கிறது” என்று கூறிச் சிரித்தார்.
சரியாக ஒரு வருடம் கழித்து ராம்ஸ்டென் அந்தக் கருவியைக் கொடுத்திருக்கிறார்.
கணித மேதையையே ஆளுகின்ற புத்திசாலி மன்னர் தன் கூரிய அறிவை அவரிடம் காட்டி விட்டார் அன்று!
*******
பாக்யா 26-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை. பாக்யா வார இதழ் டைரக்டர் திரு கே.பாக்யாராஜை ஆசிரியராகக் கொண்டு வாரம் தோறும் வெளியிடப்படுகிறது. எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
You must be logged in to post a comment.