Written by S NAGARAJAN (வானொலி உரை)
Date: 8 April 2016
Post No. 2704
Time uploaded in London :– 8-57 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சுற்றுப்புறச் சூழல் பற்றிய சில சிந்தனைகள்
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் வீணாக்கும் பொருளின் அளவு எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் திகைத்து மலைக்க நேரிடும். ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் மட்டும் 28 கோடி டன்கள் கழிவுகளாக உருவாகிறது. இதை எடுத்துச் செல்ல ஏழு லட்சம் விமானயகள் வேண்டும்.
நம்மையும் அறியாமல் நாம் உணவு, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள், கண்ணாடி பாட்டில்கள், கேன்கள், புத்தக அட்டைகள், பேப்பர்கள் ஆகியவற்றை அவ்வப்பொழுது தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறோம்.
இவற்றில் பல இயற்கை ஆதார வளங்களினால் உருவாக்கப்படுகிறது என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறோம். நிலக்கரி, மரங்கள், எண்ணெய்கள், அலுமினியம் போன்றவற்றால் உருவாக்கப்படுவதை நாம் சர்வ சாதாரணமாகத் தூக்கி எறிந்து விடுகிறோம்.
இந்த நிலை மாற மறு சுழற்சிக்குள்ளாக்குதல் என்ற புதிய உத்தியை உலகினர் அனைவரும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர். நாம் தூக்கி எறிபவற்றில் பலவற்றை நல்ல உரமாக மாற்ற முடியும்.
ரீ சைக்கிள் வங்கி (Recycle Bank) என புதிய வங்கியை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இன்று உருவாக்கி வருகின்றனர். இதில் பிளாஸ்டிக், கார்ட் போர்டிலிருந்து அனைத்துப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களை இவை மறு சுழற்சிக்குள்ளாக்குகின்றன.
மரக் கன்றுகளை நடும் இயக்கம் உலகெங்கும் இன்று பரவலாக பரவி வருகிறது. மரங்களைக் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் பேப்பர்களும் கூட மறு சுழற்சிக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு பக்கம் மட்டும் எழுதப்பட்ட பேப்பர்களை வீணாக்காது குறிப்பு எழுத உதவும் சிறு நோட்டுகளாக அவை மாற்றப்படுகின்றன.
நாம் பயன்படுத்தாத ஆடைகள் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் புதிய வழி உலகெங்கும் பரவி வருகிறது. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளை கட்டாயம் எடுத்துச் செல்வது பழக்கமாகி வருவதால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அருகி குறைந்து வருகிறது.
நண்பர்கள் மற்றும் உறவினரிடம் கலந்துரையாடும் போது சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் புதிய உத்திகளைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பயன்களைப் பற்றியும் சொல்வதும் இன்றைய நடைமுறை வழக்கமாக ஆகி வருகிறது. இந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில் நாமும் இணையலாமே!
xxxxx
You must be logged in to post a comment.