Written by London swaminathan
Date: 20 April 2016
Post No. 2742
Time uploaded in London :– 15-25
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
புகழ்பெற்ற ஆங்கிலப் புலவரும் கதாசிரியருமான சர் வால்ட்டர் ஸ்காட் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்கள்:–
துரியோதணன் உயிர் தொடையில் இருந்தது. அதை கண்ணன் சுட்டிக் காட்டவே, பீமன் கதையால் அடித்து வீழ்த்தினான். சில மாணவர்களின் “உயிர்” எங்கே இருக்கிறது என்பது ஒரு சுவையான விஷயம். ஸ்காட் அப்படி ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை. இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கையில் வாத்தியார் கேட்கும் கேள்விக்கு யார் முதலில் பதில் சொல்கிறாரோ அவருக்குத்தான் முதல் வரிசையில், முதல் பெஞ்ச்சில் இடம்.
ஸ்காட்டை விட புத்திசலியான ஒரு மாணவன், எல்லா கேள்விகளுக்கும், முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு பதில் சொல்லி வந்தான். ஆனால் அவனை உற்று நோக்கி வந்த ஸ்காட், ஒரு ரஹசியத்தைக் கண்டு பிடித்தார். அவன் ஒவ்வொரு முறை பதில் சொல்லும்போதும், சட்டையிலுள்ள பட்டனை (பொத்தானை) தடவிக்கொண்டெ பதில் சொன்னான். ஸ்காட் நினைத்தார்- இவன் உயிர் இதில்தான் இருக்கிறது என்று எண்ணி, ஒரு நாள் பள்ளிக்கு வந்தவுடனே அவனது பட்டனை கூரான கத்தி கொண்டு கத்தரித்துவிட்டார். இது அந்த மாணவனுக்குத் தெரியாது.
வகுப்பறையில் கேள்வி நேரமும் வந்தது. ஆசிரியர் கேள்வி கேட்டார். அந்தப் பையனுக்கு விடை தெரியும். உடனே பொத்தானைத் தடவ முயற்சித்தான். அங்கே பட்டன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே ஸ்காட் எழுந்து பதில் தந்தார். ஸ்காட்டுக்கு பரம சந்தோஷம் – தனது சதித்திட்டம் வெற்றி பெற்றதில்-
ஸ்காட் மிகவும் இளகிய மனமுடையவர்.ஒரு முறை அவரது வீட்டில் திருடிய ஒருவனை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
ஸ்காட்: ஏய், நீ திருடினாயா?
பிடிபட்ட ஆள்: ஆமாங்க சாமி! நான் திருடியது உண்மைதான். என் குடும்பம் பட்டினியால் வாடுகிறது. நான் திருடிப் பணம் கொடுக்காவிடில், சோற்றுக்கு வழி இல்லாமல் நாங்கள் இறக்க நேரிடும்” என்றான். அவன் உண்மையைச் சொன்னதில் ஸ்காட்டுக்கு மகிழ்ச்சி. அவனுக்கு தனது ஆடு மாடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்தார். அவன் மிக விசுவாசமாக, ஸ்காட் வீட்டில் 20 ஆண்டுகளுக்கு வேலை செய்தான்! அவன் இறந்த அன்றைக்கு ஸ்காட் கண்ணீர் விட்டு அழுதார். நல்லவனாக மாறிய திருடன் மீது அவ்வளவு பாசம்!
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல, ஸ்காட் சிறு வயதிலேயே எதையும் ஊன்றிப் படிப்பார். படித்த விசயத்தில் ஆழ்ந்து ஐக்கியமாகி விடுவார். ஒரு முறை கப்பல் மூழ்குவது பற்றிப் படித்துக் கொண்டிருந்தார். அதிலுள்ளவர்கள் தப்பிக்க முயல்வது போல தாமும் தப்பிக்கும் கூச்சலை இட்டார். வீட்டிலுள்ள எல்லோரும் அதை வேடிக்கை பார்த்தனர்.
ஸ்காட் எழுதிய வேவர்லி கதை, “எழுதியவர் பெயரில்லாமல்” வெளியிடப்பட்டது. ஆசிரியர் பெயர் இல்லாத புத்தகம் என்றவுடன் அதற்கு நிறைய ஆதரவு கிடைத்தது. ஆயிரக் கணக்கில் விற்றது. ஆனால் எழுத்து நடையை வைத்தே, அது ஸ்காட்டினுடைய படைப்பே என்று ரசிகர்கள், கண்டு பிடித்துவிட்டனர்.
சிறு வயது முதல் ஸ்காட்டுக்குக் கவிதைகளும் பாடல்களும் பிடிக்கும். தனது ஸ்காட்லாந்து பற்றிய பாடல்களைப் படித்துக்கொண்டே இருப்பார்; பாடவும் செய்வார்; யார் குறுக்கிட்டாலும் நிறுத்த மாட்டார். பாடி முடித்த பின்னரே பதில் சொல்லுவார்.
ஸ்காட் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்:–
பிறந்த தேதி:-15-8-1771
இறந்த தேதி:- 21-9-1832
நிறைய கவிதைகளையும் கீழ்கண்ட புகழ்பெற்ற நாவல்களையும் எழுதினார்:–
Guy Mannering, Kenilworth, Ivanhoe, Waverly, Rob Roy, The Pirate, The Antiquary, The Black Dwarf, Woodstock, The Fortunes of Nigel, The Heart of Midloathian etc.
–சுபம்–
You must be logged in to post a comment.