Written BY S NAGARAJAN
Date: 15 May 2016
Post No. 2812
Time uploaded in London :– 6-25 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அறிவியல் துளிகள் தொடரில் 13-5-16 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
சந்திரனில் ஒரு கிராமம்!
ச.நாகராஜன்
“சந்திரனைக் குறி வையுங்கள். ஒருவேளை தவறி விட்டாலும் ஒரு நட்சத்திரத்தை அடையலாம்.”
டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன்
உல்கெங்கும் சந்திரனில் ஒரு கிராமம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2016 ஏப்ரல் மாத ஆரம்பத்தில் 32வது விண்வெளி கருத்தரங்கம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் எப்படி இந்த கிராம திட்டத்தை நிறைவேற்றுவது என்பதை ஆர்வலர்கள் தீவிரமாகப் பரிசீலித்தனர்.
நாஸாவோ செவ்வாய்ப் பயணத்தில் தீவிர ஈடுபாட்டைக் காண்பிப்பதால் சந்திரனில் கிராமம் அமைக்கும் திட்டத்திற்கு அவ்வளவாக ஆதர்வு காட்டவில்லை.
ஆனால் சந்திரனில் ஒரு தளத்தை முதலில் அமைத்து விட்டால் அங்கிருந்து செவ்வாய்க்குச் செல்லும் பயணம் சுலபமாகும் என்று அங்கு குழுமியிருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கருத்தை முன் வைத்தனர்.இரண்டாயிரத்து இருபதுகளில் இது முடிந்து விட்டால் இரண்டாயிரத்து முப்பதுகளில் செவ்வாய்ப் பயணம் உருவாகி விடும் என்பது அவர்களின் கணிப்பு.
இதற்கிடையில் இப்போது வெளியாகி உலகில் பரபரப்பூட்டை ஊட்டும் ஒரு புத்தகமாக பால் ஸ்புடிஸ் என்ப்வர் எழுதிய ‘தி வால்யூ ஆஃப் தி மூன்’ என்ற புத்தகம் அமைகிறது.
ஸ்புடிஸ் சந்திரனைப் பற்றிய ஒரு ஸ்பெஷலிஸ்ட். முதலில் சந்திரனில் மனித குலம் குடியேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் விஞ்ஞானி.
ரொபாட்டுகளையும் மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி அங்கிருக்கும் நீர் உள்ளிட்ட அனைத்து ஆதார வளங்களையும் பயன்படுத்தி அற்புதமான ஒரு குடியிருப்பை அமைத்து விடலாம் என்பது அவரது ஆலோசனை.
இந்தியாவின் சந்திராயன் – 1 திட்டத்தை அவர் வெகுவாக ஆதரிக்கிறார்.
நாஸாவின் செவ்வாய் மோகத்தில் அவருக்கு சந்தேகம்! சமீப காலத்தில் நிச்சயமாக செவ்வாய்க்குச் செல்ல முடியாது; அப்படியே போனாலும் அது மனிதனின் கால் பதிக்கும் பயணமாகவே அமையும். ஆனால் சந்திரன் அருகில் இருக்கும் கிரகம். அதில் காலனி ஏற்படுத்துவது என்பது சுலபம் என்கிறார் அவர்.
சந்திரனில் நீர் இருப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தப் பனிக்கட்டி நீரைப் பயன்படுத்துவதோடு சந்திரனில் எப்போதுமே வெளிச்சமாக இருக்கும் பகுதியைப் பயன்படுத்தினால் சூரிய ஒளி பிரதேசத்தில் சரியான தளம் ஒன்றை அமைக்க முடியும். அங்கிருந்து மனிதர்களின் சந்திரனுக்கும் பூமிக்குமான பயணம் சுலபமாகும், சாடலைட்டுகளை சர்வீஸ் செயவதும் சுலபம். இது இன்னும் தொலைதூரப் பயணங்களுக்கு வழி வகுத்து அப்பயணங்களை எளிதாக்கும் என்று விவரமாக அவர் விளக்குகிறார்.
இந்த திட்டத்திற்கு 2011இல் உத்தேசிக்கப்பட்ட செலவு சுமார் 88 பில்லியன் டாலராகும் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).
இப்போது கொஞ்சம் கூட செலவாகும்.
ஆனால் சந்திர தளத்தை அமைத்து விட்டால் டெலி ஆபரேடட் ரொபாட்டுகள் அனைத்து வேலைகளையும் அங்கு செய்து மனிதர்கள் வாழத் தக்க ஒரு கிராமத்தை உருவாக்கி விடும். சந்திரனில் தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
ஏராளமான காரணங்கள் உள்ளன.
முதலில் தளம் அமைக்கும் தேசத்தின் கௌரவம் உயரும். அறிவியல் புதிய பரிமாணத்தை எட்டும். வணிகம் உயரும். சந்திர பயணங்கள் ஏற்பட்டு கிரகங்களுக்கு இடையேயான பயணம் ஆரம்பிக்கும்.
1972இலிருந்து ஒருவரும் சந்திரனுக்குச் செல்லவில்லை. இரண்டாயிர்த்து இருபதுகளிலிருந்து இந்த நிலை மாறும். இப்படி ஒரு சந்திர கிராமம் அமைய வேண்டுமெனில் மேலும் பல கருத்தரங்கங்கள் தேவை. இதை ஜாம் செஷன் என்று அழைக்கின்றனர்.
ஆனால் இப்படிப்பட்ட தளம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட ப்ல நாடுகளும் விரும்புகின்றன. அனைத்து நாடுகளும் இந்த திட்டத்தில் இணைந்தால் திட்டம் வெற்றி பெறும்.
யூரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸியின் டைரக்டராக 2015இல் பொறுப்பெற்றவுடன் ஜோஹன் டயட்ரிச் வோர்னர் இதை வலியுறுத்தினார்.
சந்திர கான்க்ரீட்டைக் கொண்டு பாறைகள் உள்ள பகுதியில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு கிராமம் அமைக்கலாம். கிராமம் என்றால் ஒரு சர்ச், ஒரு டவுன் ஹால், வீடுகள் என்று அர்த்தமில்லை. ரொபாட்டுகள் மற்றும் மனிதர்களின் செய்ல்பாட்டிற்கு உதவும் ஒரு தளம், அவ்வளவு தான்,
ஆனால் இதிலும் அபாயங்கள் இல்லாமல் இல்லை. சந்திரனின் உஷ்ணநிலை மாறுபாடு அபாரமாக இருக்கும். சூரிய கதிரியக்கம் வேறு அதிகம். அத்துடன் விண்கற்கள் மோதாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் மீறி நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றார் அவர்.
விண்வெளி வீரர்கள் சிறிது சிறிதாக அங்கு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றனர். ஓடுபாதையில் விண்கலத்திலேயே உருவாக்கப்பட்ட உணவுவகைகளை அவர்கள் சாப்பிடுவது உள்ளிட்ட பல முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
விண்வெளி கருத்தரங்கமும் சந்திர தளம் அமைப்பதற்கு ஆதரவாக வெளியாகியுள்ள புதிய புத்தகமும் நல்ல முயற்சிக்கான ஆரம்பம் என்று சந்திரப் பிரியர்கள் கருதுகின்றனர்.
அறிவியல் அறிஞர்கள் வாழ்வில .. ..
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க சிறந்த ஒரு மனிதரும் கூட என்று அவரது வாழ்க்கைச் சமபவங்கள் பல நிரூபித்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இது:
1903ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார் மேரி க்யூரி. (தோற்றம் 7-11-1867 மறைவு 4-7-1934). அவரது கணவரான பியரியுடன் இணைந்து இப்பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.
1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் அவர் கணவர் அகால மரணம் அடைய அவர் விதவையானார். பெரும் துக்கம் அவரை ஆட்கொண்டது.
காலப்போக்கில் ஆறுதல் அடைந்த அவர் மனம், பால் லாங்வின் (Paul Langevin) என்ற இயற்பியல் பேராசிரியரின் மீது நாட்டம் கொண்டது. பால் தன் மனைவியிடமிருந்து ஒதுங்கித் தனித்து வாழ்ந்து வந்தார். ஏனெனில் அடிதடிக்குத் தயங்காதவர் அவர் மனைவி.
இருவரின் காதலும் வளர்ந்ததைப் பார்க்கச் சகிக்காத பாலின் மனைவி அவரது வீட்டின் கதவை உடைத்து காதல் கடிதங்களைக் கைப்பற்ற ஒரு ஆள் மூலமாக ஏற்பாடு செய்தார். அந்தக் கடிதங்களை பத்திரிகைகளுக்கு வேறு அனுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வளவு தான், பத்திரிகைகள் மேரி க்யூரியைக் கண்டபடி சித்தரிக்க ஆரம்பித்தன.
இதனால் மிகவும் மன வருத்தமுற்றார் அவர். இதற்கிடையே ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அங்கே ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். மாநாட்டிலிருந்து திரும்பி பாரிஸுக்கு வந்த அவர் தன் வீட்டின் முன்னால் திரண்டிருந்த கோபம் கொண்ட கும்ப்லைக் கண்டு திடுக்கிட்டார். வீட்டை விட்டு தனது மகள்களுடன் வெளியேறிய அவர் தன் நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புக நேர்ந்தது.
இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் மிகுந்த வருத்தம் அடைந்தார். மேரி க்யூரியை அபூர்வமான அறிவு கொண்ட பிழையில்லாத நேர்மையான பெண்மணி என்று அவர் கணித்து வைத்திருந்தார். ஆனால் பத்திரிகைகளும் மஞ்சள் பத்திரிகைகளும் பல்வேறு விதமாக அவரைச் சித்தரித்து அவருக்கு களங்கத்தை உண்டாக்கின. குறிப்பாக அவரது அறிவியல் சாதனையை மட்டம் தட்ட வேண்டும் என்பதே அவற்றின் குறிக்கோளாக இருந்தது.
ஆறுதல் கடிதங்கள் எழுதுவதில் புகழ் பெற்ற ஐன்ஸ்டீன் அற்புதமான ஒரு கடிதத்தை மேரி க்யூரிக்கு எழுதி அதில் தனது உறுதியான ஆதரவை அவருக்குத் தெரிவித்தார். களங்கமே இல்லாத நபர் என்று மேரியை ஐன்ஸ்டீன் புகழ்ந்தார்.
“இந்தக் கடிதத்தை எழுதுவதைப் பார்த்துச் சிரிக்க வேண்டாம், ஆனால் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் கோபமடைகிறேன், உங்களின் அறிவையும் உங்கள் ஆற்றலையும் நேர்மையையும் பார்த்து நான் வியக்கிறேன். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் உங்களைச் சந்தித்ததில் பெருமைப் படுகிறேன். கண்டதை எல்லாம் படித்து குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கும் லாங்வினுக்கும் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நீண்ட கடிதம் ஒன்றை ஐன்ஸ்டீன் எழுதினார்.
இதைப் பார்த்த மேரி பெரும் ஆறுதலை அடைந்தார். தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்த கடிதத்தை ‘ஐன்ஸ்டீன்: ஹிஸ் லைஃப் அண்ட் யுனிவர்ஸ்’ என்ற சமீபத்திய புத்தகத்தில் வால்டர் ஐஸக்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.
**********
You must be logged in to post a comment.