Article written by London swaminathan
Date: 24 May 2016
Post No. 2835
Time uploaded in London :– 9-08 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
மனோ ஹி த்விவிதம் ப்ரோக்தம் சுத்தம் சாசுத்தமேவ
அசுத்தம் காமசங்கல்பம் சுத்தம் காமவிவர்ஜிதம்
–அம்ருதபிந்து உபநிஷத்
மனது இரண்டு வகையானது; ஆசைகள் நிறைந்திருந்தால் அது அசுத்தமானது; அதாவது எபோதும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொண்டு அதையே நாடித் தேடி ஆடி ஓடி காலம் கழிப்பது. ஆசைகளை அறவே ஒழித்தால் அது சுத்தமானது; இதற்கு நம் நாட்டு சாது சந்யாசிகள், முனிவர்கள், மகான்கள் எடுத்துக் காட்டு. அவர்கள் ஆசையை அறவே ஒழித்து, பேரின்பத்தில் வாழ்ந்தார்கள்.
இதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதைப் படித்து இன்புறலாம்:–
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாய்மை வேண்ட வரும் (குறள் 364)
பொருள்: தூய்மை எனப்படுவது எந்தப் பொருளிடத்தும் ஆசை கொள்ளாதிருத்தல்; அந்த நிலை வாய்மையை நாடுவோருக்கு தானாக வந்து சேரும்.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் – என்பது புத்தர் பிரானின் முக்கியப் பொன்மொழி.
“ஆசை என்னும் காட்டை அழியுங்கள்; ஒரு மரத்தை மட்டுமல்ல.ஏனெனில் அந்தக் காட்டில்தான் அபாயமே உள்ளது. அந்தக் காட்டிலுள்ள மரங்களை வெட்டி, அதன் கீழ் வளர்ந்துள்ள புதர்களையும் அழியுங்கள். பிக்ஷுக்களே! அப்படிச் செய்வீர்களானால் நீங்கள் விடுதலை (நிர்வாண) பெறுவீர்கள்”.
–தம்மபதம் 283
ஆங்கிலத்திலும் ‘ஆசை உள்ளவனுக்கு அமைதி இல்லை’, ‘உயர்ந்த மனிதர்கள் உன்னத ஆசை கொள்வர்’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு
Desire has no rest
Humble hearts have humble desires
He that desires but little has no need of much.
இந்து மதத்தில் ரிஷிகள் அழகான ஒரு உவமை சொல்லுவர்:–
“ஆசைக்கு அணை போடமுடியாது. யாரேனும் ஒருவர் அப்படி நினைத்தால் நெய்யைக் கொண்டு தீயை அணைப்பதற்குச் சமம்; அதாவது ஆசையை நிறவேற்ற, நிறைவேற்ற, புதுப்புது ஆசைகள் எழும், தேவைகள் வரும்.
சம்ஸ்கிருதத்திலும் இதற்கிணையான பழமொழிகள் இருக்கின்றன:–
ஆசா துக்கஸ்ய காரணம் = ஆசையே துன்பத்திற்குக் காரணம்
ஆசாவதிம் கோ கத: = ஆசைக் கடலின் கரையைக் கண்டவர்கள் யார்?
கால: க்ரீடதி கச்சத்யாயுஸ்தபி ந முஞ்சத்யாசாவாயு: (மோகமுத்கரா) = காலமோ ஓடுகிறது, வயதோ ஆகிறது, ஆனால் ஆசையின் பிடி தளரவே இல்லை.
இதை தமிழிலும் அழகாகச் சொல்லுவர்—
“மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை”.
மேலே கண்ட, தூய்மையையும் ஆசையின்மையையும் முடிச்சுப் போடும் சம்ஸ்கிருத ஸ்லோகமும் வள்ளுவன் குறளும் பாரதீய சிந்தனையின் ஒற்றுமையைக் காட்டி நிற்கின்றது.
–சுபம்–
Ghatam Vaidyanathan Suresh
/ May 24, 2016Amazing…… What a work……