கட்டுரை எண்–2925
எழுதியவர் – லண்டன் சுவாமிநாதன்
தேதி – 28 ஜுன் 2016
அருமையான திருக்குறள்!
யாருக்கு எந்த வேலையைக் கொடுத்தால், அவன் அதை நன்கு செய்வான் என்பதை அறிந்திருப்பவனே தலைவன்; கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான். யாருமே பயனற்றவர் இல்லை. சீதையைக் கட்டாயம் கண்டுபிடிப்பவன் அனுமன் என்பதை ராமன் அறிந்ததால் அன்றோ அவனிடம் தனது மோதிரத்தைக் கொடுத்தனுப்பினான்.
இதனை இதனால்இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் –குறள் 517
பொருள்:- இந்தச் செயலை அவன் இந்தவிதமாக முடிக்கக்கூடியவன் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து அதனை அவனிடம் விட்டுவிட வேண்டும்.
எல்லோருக்கும் ஒரு வித அரிய ஆற்றல் இருக்கிறது என்பதை ஒரு வடமொழி ஸ்லோகம் அழகாகக்கூறும்:–
அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்
அயோக்யப் புருஷோ நாஸ்தி யோஜகஸ் தத்ர துர்லப:
எல்லா எழுத்துக்களும் மந்திரங்களில் பயன்படும்; மந்திரத்துக்கு உதவாத எழுத்து என்று எதுவுமே இல்லை.
எல்லா செடிகளின் வேரும் ஏதோ ஒரு மருத்துவ குணம் உடையது; பயன்படாத தாவரம் எதுவும் இல்லை.
தகுதியற்ற மனிதர், உதவாக்கறை என்று உலகில் யாருமே இல்லை; ஒவ்வொருவரும் ஒருதுறையில் வல்லவன்.
ஆனால் அரிதான விஷயம், அவர்களைக் கண்டுபிடித்து, அவரவர் திறமைக்கேற்ற பணியைக் கொடுப்பவன் இருக்கிறானே– அவன் தான் அரிதானவன்.
வள்ளுவன் குறளையும் இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
இதையே இன்னும் ஒரு தமிழ்ப் புலவர் அழகாகச் சொன்னார்:–
வான்குருவிக்கூடரக்குவாலுலண்டு கோற்றருதல்
தேன்புரிந்தியார்க்குஞ்செயலகா – தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன வென்னாரொரோவொருவர்க்
கொல்காதோ ரொன்று படும்—சிறுபஞ்சமூலம்
பொருள்:-
வான்குருவிக் கூடு – தூக்கணங் குருவிக் கூடும்
அரக்கும் – அரக்கும்
வால் உலண்டு தருதல் – தூய உலண்டு என்னும் புழுவால் நூற்கப்பட்ட (பட்டு) நூலும்,
கோல் தருதல் – கோல் என்னும் புழுவால் கட்டப்படும் கூடும்
தேன் – தேனீக்களால் கட்டப்படும் கூடும்
(ஆகிய இந்த ஐந்தும்)
புரிந்து யார்க்கும் செயல் ஆகா- எல்லோரும் விரும்பினாலும் செய்ய முடியாது.
வல்லவர் தம் புரீ இ என்னார் – (ஆதலால்) தொழில் வல்லமை படைத்தோரும் இதைச் செய்யத் துணியார்.
ஒரோ ஒருவர்க்கு ஓரொன்று ஒல்காது படும் – ஒவ்வொருவருக்கும் ஒரு தொழிலை நன்றாகச் செய்யமுடியும்.
குருவி, அரக்குப்பூச்சி, பட்டுப்பூச்சி, கோற்புழு, தேனீ ஆகிய ஐந்து இயற்கைப் பொருட்களை வைத்து அழகான கருத்தைச் சொல்லிவிட்டார்.
அன்பர்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. அதை முதலில் கண்டுபிடியுங்கள்; உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், நண்பர்களின், பெரியோரின் உதவியை நாடுங்கள். அனுமனுக்கு தன் வலிமை தெரியாது. அதை ஒருவர் சுட்டிக்காட்டினால் மகத்தான காரியங்களைச் செய்வான் என்று ராமாயணம் சொல்கிறது. உங்கள் வலிமை உங்களுக்குத் தெரியவில்லையானால் அதற்கென்று உதவும் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றின் உதவியை நாடுங்கள்.
இதை ஒரு ஆங்கிலப் பழமொழி அழகாககச் சொல்லும்:-
Men are four:
He who knows not and knows not he knows not, he is a fool—shun him;
He who knows not and knows he knows not, he is simple—teach him;
He who knows and knows not he knows, he is asleep—wake him;
He who knows and knows he knows, he is wise—follow him!
–SUBAM–