வீடியோ விளையாட்டுகள் ஆபத்தானதா? (Post No.2967)

Girl playing video games

Article Written S NAGARAJAN

Date: 13 July 2016

Post No. 2967

Time uploaded in London :– 5-42 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

15-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
குழந்தைகள் விளையாடும் வீடியோ மூளை விளையாட்டு ஆபத்தானதா?
ச.நாகராஜன்

“வீடியோ விளையாட்டுக்களின் முக்கிய குறிக்கோள், மக்களுக்கு புதிய அனுபவங்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி அவர்களுக்கு மன மகிழ்ச்சியை ஊட்டுவது தான்! – ஷிகெரு மியாமோடோ

உலகில் தற்போதுள்ள குழந்தைகளில் ‘வீடியோ கேம்ஸ்’ விளையாடாத குழந்தைகளே இல்லை. கணினியிலும் ஐ-பாடிலும் ‘மைன் க்ராஃப்ட்’ உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடும் குழந்தைகளை அதிலிருந்து மீட்டு சாப்பிடவோ, படிக்கவோ வைக்க எந்தத் தாய்மர்களாலும் லேசில் முடிவதில்லை.
இப்படி விளையாடினால் குழந்தைகள் கதி என்ன ஆகுமோ என்ற கவலை அவர்களுக்கு உண்டு.
அவர்களுக்கு ஒரு நற்செய்தி!
குழந்தைகள் விளையாடும் மூளை விளையாட்டுக்கள் ஆபத்தை விளைவிக்காது என்கிறது அறிவியல் சோதனை. ஜூலை 2016 ஸயிண்டிபிக் அமெரிகன் இதழில் உளவியல் விஞ்ஞானிகளான டப்னி பவேலியர் மற்றும் சி, ஷான் க்ரீன் (Daphne Bavelier & C.Shawn Green) ஆகியோர் இந்த வீடியோ கேம்கள் பற்றித் தரும் ஆய்வறிக்கைத் தகவல்கள் சுவையானவை.
துரித விளையாட்டுக்கள் என்று சொல்ல்ப்படும் ஷீட்டிங் விளையாட்டுக்களில் சிறுவர்கள் அபாரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றனர். இந்த விளையாட்டு மூளையில் சில பகுதிகளை நன்கு செயல்படச் செய்கின்றன என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.
இந்த விளையாட்டுக்களினால் கவனம் சிதறாமல் குவிக்கப்படும் தன்மை வளர்கிறது. ஒரு விளைவு ஏற்படும் போது அதற்கான எதிர் விளைவுக்குத் தயார் செய்து கொள்வதை இது வளர்க்கிறது. அத்தோடு ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு உடனே மாறும் அபாரமான திறமையை வளர்க்கிறது.

 
இந்த விளையாட்டுக்களில் துப்பாக்கியை வைத்துச் சுடும் வன்முறைகள் உள்ளனவே, அவற்றால் குழந்தைகள் கெட்டுப் போக மாட்டார்களா என்ற கேள்வி எழுவதைச் சுட்டிக் காட்டும் அவர்கள், “அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம், அப்படிப்பட்ட துப்பாக்கி சுடுவது இல்லாத விளையாட்டுக்கள் ஏராளமாக உள்ளன. இனிமேலும் அது போல வன்முறையற்ற அதி சுவாரசியமான விளையாட்டுக்கள் குழந்தைகளுக்காகத் தோன்றும் வகையில் இந்த விளையாட்டுக்கள் ஒரு மேம்பாட்டிற்கு வழி வகுத்து விட்டன” என்கின்றனர்.

2 Girls playing video game
ல்யூமாஸிடி, காக்மெட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற மூளை விளையாட்டுக்களை சுமார் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கின்றன. இந்த விளையாட்டுக்கள் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளாலேயே உருவாக்கப்பட்டதாக அவை கூறுகின்றன. இவற்றை விளையாடுவதால் நினைவாற்றல் கூடும், எதையும் வெகு சீக்கிரமாக கிரகித்து செயல்படலாம், பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி மேம்படுகிறது, ஏன், சில வயதானவர்க்ள் இந்த விளையாட்டை விளையாடினால் அவர்களது மறதி நோய் எனப்படும் அல்ஜெமிர் நோயே தீர்கிறது என்கின்றன அந்த நிறுவனங்கள்!.
இந்த விளையாட்டுக்களை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நியூரோ-ஸயிண்டிஸ்டுகளே உருவாக்கியுள்ளதாகவும் அவைக்ள் தெரிவிக்கின்றன.
வீடியோ விளையாட்டுக்களைப் பற்றி ஏராளமான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
‘ஸ்டார் க்ராஃப்ட்’ என்று ஒரு விளையாட்டு உள்ளது. இதை விளையாடினால் மூளையின் செயலாற்றல் கூடுகிறது என்பதை லண்டனில் உள்ள க்வீன் மேரீஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் சோதனைகளில், இந்த விளையாட்டை விளையாடுவோர் மிக சுலபமாக, மிகுந்த வேகத்துடன் துல்லியமாக அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதை ஆய்வாளர்கள் கண்டனர்.
வயதானவர்கள் இதை விளையாடும் போது என்ன நிகழ்கிறது?

 

50 வ்யதுக்கு மேற்பட்ட 681 பேரிடம் பத்து மணி நேரம் மூளை விளையாட்டை விளையாடுமாறு சொல்லப்பட்டது. அவர்களது மூப்படையும் தன்மை நிறுத்தப்பட்டதைக் கண்டு ஆய்வை நடத்தியவர்கள் அசந்து போனார்கள். அவர்களை இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவினர் குறுக்கெழுத்துப் போட்டியை மேற்கொள்ள இன்னொரு பிரிவினர், ‘ரோட் டூர்’ என்ற கணினி விளையாட்டை மேற்கொண்டனர். வாகனங்களின் பாகங்களின் வெட்டப்பட்ட படங்களை அவர்கள் செல்லுகின்ற வழிகளில் உள்ள சாலை குறியீட்டு அடையாளங்களுடன் இணைத்து மிக சிக்கலான பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை ஒழுங்குபடுத்துவதே விளையாட்டு. ஒரு டிரைவருக்கு நெடுஞ்சாலையில் ஏற்படும் பிரச்சினைகளை, இந்த விளையாட்டு சிக்கலுடன் எடுத்துக் காட்டுகிறது. இதை விளையாடுபவர்கள் மூளை ஆற்றலைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவர்களது ஆற்றல் கூடியது.
இத்தாலியில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று மூளை விளையாட்டை விளையாடிய படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் பின்னர் படிப்பதில் ஆர்வம் கொண்டதை எடுத்துக் காட்டியது.
2010ஆம் ஆண்டு அமெரிக்கன் பெய்ன் சொஸைடி ஒரு ஆய்வை நடத்தியது. அதில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவோருக்கு வலி குறைவதைக் கண்டறிந்தது. மிக அதிக வலியைத் தரும் கீமோதெராபி, தீக்காயங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் இந்த விளையாட்டால் வலி குறைந்து நிவாரணம் அடைந்தனர்.
ரோசெஸ்டர் பல்கலைக் கழகம் விசித்திரமான ஒரு ஆய்வை மேற்கொண்டது. ‘கால் ஆஃப் டியூடி’ என்று ஒரு விளையாட்டு. இதில் எதிரிகள் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதோடு திடீர் திடீரென்று தோன்றுவர். அவர்களைக் கண்டு பிடித்து வெல்ல வேண்டும். இதை விளையாடிவர்களின் கண் பார்வை மேம்பட்டதை ஆய்வு எடுத்துக் காட்டியது!
டெல் அவி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று பக்கவாதத்தால் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டோர் மூளை விளையாட்டை மேற்கொண்டவுடன் பேச முடிந்ததை எடுத்துக் காட்டியது.
ஆக சிறுவர்கள் முதல் முதியோர் வரை இந்த மூளை விளையாட்டுக்களால் நல்ல பயன்களையே பெறுகின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்து வருகின்றன.
என்றாலும் அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்தே என்ற பழைய மொழியுடன் புதிய அறிவியல் முடிவுகளையும் இணைத்துக் கொண்டு இவற்றை விளையாடி ‘புத்திசாலிகள்’ ஆகலாம் என்பதே உண்மை!.

 

stanley_wendell

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
வைரஸ் என்றாலே அனைவரும் பயந்து ஓடுவார்கள். வாழ்நாள் முழுவதும் வைரஸ்களுடனேயே இருந்து அவற்றை ஆராய வேண்டும் என்றால் எவ்வளவு தைரியம் வேண்டும்! அந்த தைரியத்தைக் கொண்டு வைரஸ் பற்றி ஆராய்ந்து இரசாயனத்திற்கான நோபல் பரிசை 1946 ஆம் ஆண்டு பெற்ற மேதை தான் வெண்டெல் ஸ்டான்லி. (Wendell Stanley) (தோற்றம்: 16-8-1904 மறைவு :15-6-1971)
வைரஸ் பற்றிய எந்த சந்தேக்ம் என்றாலும், நிபுணர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நாடும் ஒரே அமெரிக்கர் இவர் தான்! வைரஸ்கள் பற்றி 150க்கும் மேலான அற்புதமான ஆய்வேடுகளை இவர் எழுதியுள்ளார். இவரது கெமிஸ்ட்ரி : ஏ ஃபியூடிஃபுல் திங்” என்ற நூல் பிரபலமானது.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த சமயம். ஒரு நாள் கலிபோர்னியா பல்கலை கழகத் தலைவர் ராபர்ட் ஸ்ப்ரௌல் (Robert Sproul) விமானம் ஒன்றில் அமெரிக்காவில் பயணித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ஸ்டான்லியும் இன்னொரு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஏற்பட்ட பனிப்புயல் ஒன்றினால் இரு விமானங்களும் ஓரிடத்தில் தரை இறங்கின. தற்செயலாக இருவரும் அங்கே சந்திக்க நேர்ந்தது. பயோகெமிஸ்ட்ரிக்கென தனியாக ஒரு பிரிவு வேண்டும் என்பது ஸ்டான்லியின் ஆசை. இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அதை ஸ்டான்லி சொல்ல, ‘அதெற்கென்ன, உடனே வாருங்கள், ஆரம்பித்து விடலாம்” என்றார் ராபர்ட்.
உடனே பெர்க்லி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவரானார் ஸ்டான்லி.
அங்கு படிக்க வரும் அனைவருக்கும் தவறாமல் இந்த சம்பவம் சொல்லப்படுமாம். இதைக் கேட்டு மகிழாத ஆராய்ச்சியாளரே பெர்க்லியில் இல்லையாம்!
ஒரு பனிப்புயல் சந்திப்பு பெரிய ஒரு பிரிவை ஆரம்பிக்கக் காரணமானது. பெர்க்லியில் இரசாயன அறிஞர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடுவது வழக்கமானது!
சிறிய நிகழ்வுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது உண்மையே!
**********
 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: