Article Written S NAGARAJAN
Date: 4th August 2016
Post No. 3034
Time uploaded in London :– 8-25AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா 5-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
டர்பாவின் அதிசய ஆய்வுகள்!
ச.நாகராஜன்
“ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் மருத்துவ துணை சாதனம் தேவையாக இருக்கிறது. உங்கள் கண்களுக்கான கண்ணாடிகள், அல்லது இடுப்பு அல்லது முழங்கால் மூட்டை பொருத்துதல் என இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. செயற்கை அங்கங்கள் பொருத்தப்பட்ட தலைமுறை நம்மைச் சுற்றிலும் உள்ளது” – எய்மி மல்லின்ஸ்
அமெரிக்காவின் இராணுவத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆராய்ச்சி செய்து வழங்கும் ஒரு அமைப்பின் பெயர் தான் டர்பா! டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜக்ட்ஸ் ஏஜன்ஸி (Defense Advanced Research Projects Agency) என்பதின் சுருக்கமே டர்பா!
1957 ஆம் ஆண்டு ரஷியா ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவியதும் பதறிப் போன அமெரிக்கா தொழில்நுட்பத்தில் தான் மேம்பட வேண்டும் என்று எண்ணியது. ஜனாதிபதி ஐஸன்ஹோவர் உடனடியாக 1958இல் உயரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். பல முறை பெயர் மாற்றப்பட்டு இப்போது டர்பா என அழைக்கப்படும் ஆய்வு நிறுவனம் முதலில் விண்வெளி சம்பந்தமான ஆய்வைத் தொடங்கினாலும் நாஸா அமைக்கப்பட்டவுடன் விண்வெளி சம்பந்தமான அனைத்துத் திட்டங்களையும் அதன் செயல்பாட்டிற்கு விட்டு விட்டது. இதர துறைகளில் கவனம் செலுத்திய அது பல்வேறு அதிசயக் கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துள்ளது.
சுமார் 240 ஆய்வாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். இதன் பட்ஜெட்டோ கற்பனைக்கு அப்பாற்பட்ட பல கோடி ரூபாய்கள்!
ஆரம்ப காலத்தில் எதிரிகளின் ஆயுதங்களைக் கண்டுபிடித்து இலக்கை நிர்ணயித்து அழிக்கும் தானியங்கி இலக்கு நோக்கிகளை அது கண்டு பிடித்தது.
பின்னர் மனத்தைக் கட்டுப்படுத்தும் ஏராளமான அதிசயக் கண்டுபிடிப்புகளை அது கண்டு பிடித்து வருகிறது.
தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தெரிவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது டர்பா ஏற்பாடு செய்து வருகிறது. செப்டம்பர் 2015 மற்றும் மே 2016இல் டர்பாவின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்த பத்திரிகையாளர்கள் அசந்து பிரமித்து நின்றனர்!
பத்திரிகையாளர்கள் பார்த்தது ஒரு செயற்கை கையை! 45 பவுண்டு எடையுள்ள ஒரு கர்லாக் கட்டையை நாள் முழுவதும் அது சுழற்றிக் கொண்டே இருந்தது – அதன் பாட்டரியின் சார்ஜ் போகும் வரை! எந்த வலுவுள்ள மனிதனாலும் இப்படித் தொடர்ந்து கர்லாக் கட்டையை 24 மணி நேரம் தொடர்ந்து சுழற்ற முடியாது!
இந்த கையின் செயல்பாட்டை விளக்கினார் ஜானி மாத்னி என்ற விஞ்ஞானி. அந்தச் செயற்கை கையை ஒரு பெண் நிருபரின் கையைப் பிடித்து குலுக்க வைத்ததோடு டர்பாவின் கண்டுபிடிப்பைப் பற்றி எழுதவும் வேண்டுகோள் விடுத்தார்!
வலிமையிலும் நெளிவு சுளிவுகளுடன் லாகவமாக செயல்படுவதிலும் உலகிலேயே திறமை வாய்ந்த ஒரே கை இது தான் என்றார் ஜானி மாத்னி!
உலகின் பல இடங்களிலிருந்தும் போர்களில் ஈடுபட்டுத் திரும்பிய கை இழந்த அமெரிக்க வீரர்களுக்கு கரம் கொடுப்பது இனி சுலபம் என்றார் டர்பாவின் உயிரியல் தொழில்நுட்ப டைரக்டரான ஜஸ்டின் சி. சான்செஸ் (Justin C. Sanchez).
Metallic Cheetah by Darpa
மூளையின் இயக்கங்களையும் அதன் நுட்பமான செயல்பாட்டையும் அறிந்த பின்னரே இந்த செயற்கைக் கையை உருவாக்க முடிந்தது என்று கூறிய ஜஸ்டின் இயற்கையான கையைப் போலவே இது செயல்படும் என்றார்.
விபத்துக்களில் கைகள் துண்டிக்கப்பட்டோருக்கு இனி இந்தத் தொழில்நுட்ப மேம்பாடு உடலில் பதிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் தசைகள் செயல்பட வேண்டிய விதத்தை அது பதிக்கப்பட்டவரின் எண்ணத்திற்கு ஏற்ப அவரது மூளைக்கு அறிவிக்கும்.
கைகள், கால்கள் இழந்தவருக்கு இந்த செயற்கை அங்கங்கள் இனி கிடைக்க இருப்பது அறிவியலின் ஒரு மாபெரும் வெற்றியாகும்.
எதிர்பாராத விபத்துக்களில் கைகளையும் கால்களையும் இழந்தவர்கள் வாழ்க்கையையே இழந்ததாக இனி கருத வேண்டாம் என்பதை எடுத்துக்காட்ட வீரர்கள் பலர் உள்ளனர்!
இரண்டு கால்களையும் சர்ஜரி மூலம் அகற்ற நேர்ந்த ஹ்யூ ஹெர் செயற்கைக் கால்களைப் பொருத்தி உயரமான மலைகளில் ஏறி சாகஸம் செய்கிறார்! செயற்கை கால்களைச் செய்யும் ஒரு லாபரட்டரியையும் அவர் இயக்கி வருகிறார்.
இறுதிச் சுற்றுக்கான தகுதியை இழந்தாலும் கூட 400 மீட்டர் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கால்களை இழந்து நொந்து கொண்டிருப்பவர்களுக்கான ஒரு ரோல் மாடல்! இவரைப் பார்த்து உத்வேகம் பெறாத ஆட்களே உலகில் இல்லை!
ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சாலையில் குண்டுத் தாக்குதலில் தனது இரு கால்களையும் கைகளையும் இழந்தார் ஸ்காட் ஷ்ரோடெர். மனம் கலங்காத அவர் செயற்கை அங்கங்களைப் பொருத்திக் கொண்டார். இப்போது ஸ்கூபா டைவிங் அடிக்கிறார்!
நம்ப முடியாத இவரின் சாகஸ செயல்கள் கை, கால்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமூம் ஊட்டும் செயல்பாடுகள்!
எய்மி மல்லின்ஸ் ஒரு அழகான வலிமையான உத்வேகமூட்டும் பெண்மணி. பிறக்கும் போதே அவருக்கு கால்களில் குறைபாடு. அதனால் மனம் தளரவில்லை அவர். முழங்காலுக்கு கீழே ஆம்புடேட் செய்யப்பட்டது. இரண்டு வயதாகும் போதே செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு நடக்க ஆர்மபித்தார். பின்னர் வயதானவுடன் நீந்த அரம்பித்தார். சைக்கிள் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்றார். மாடலாகக் கூட மாறினார். அவரைப் பார்த்து உத்வேகம் பெறாதவர்களே இல்லை என்ற நிலையில் அவரது செயல்பாடுகள் இப்போது உள்ளன! பிரபலமான பீப்பிள் பத்திரிகை உலகின் 50 அழகிகளில் அவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.
இந்த வீரர்களையும் வீராங்கனைகளையும் பார்த்து விட்டு அமெரிக்க டர்பாவின் கண்டுபிடிப்பையும் நினைத்துப் பார்த்தால் மனித குலத்தில் அங்கங்களை இழந்தவர்கள் இனி வருத்தப்பட வேண்டியதில்லை என்ற நிலை தோன்றி விட்டதை அறிந்து மகிழலாம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,
இன்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஒரு காலத்தில் வெள்ளியை விட விலை அதிகமாக விற்கப்பட்ட உலோகமாகும். பிரான்ஸ் மன்னனான நெப்போலியன் ராஜாங்க விருந்துகளில் சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களில் தான் உணவுப் பொருள்களைப் பரிமாறச் செய்வானாம். அதுமட்டுமல்ல, விழாக்காலங்களில் அவன் அணியும் கிரீடமும் அலுமினியத்தால் செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.
அப்படி அலுமினியம் விலை உயர்ந்த பொருளாக இருந்ததன் காரணம் அதைத் தாதுப் பொருளிலிருந்து பிரித்தெடுக்கும் முறை எளிதாக இல்லை என்பது தான்.
Charles Martin and Paul, who made Aluminium cheaper.
ஆனால் அலுமினியத்தை எப்படி எளிதாகப் பிரித்தெடுப்பது என்பதை இரு வேறு விஞ்ஞானிகள் தனித்தனியே ஒருவர் செய்வதை இன்னொருவர் அறியாமல் ஆராய்ந்து வந்தனர். ஒருவர் சார்லஸ் மார்டின் ஹால் (Charles Martin Hall) என்ற அமெரிக்கர். இன்னொருவர் பால் ஹெரால்ட் (Paul Heroult) என்ற பிரான்ஸ் தேசத்து விஞ்ஞானி. எலக்ட்ராலிஸிஸ் முறை மூலமாக அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது எளிதாக ஆகவே அதன் விலை வீழ்ந்து, இன்று மிகவும் மலிவாகக் கிடைக்கும் உலோகமாக ஆகியுள்ளது..
அட்லாண்டிக்கின் வெவ்வேறு பக்கங்களில் இருந்து ஆராய்ந்த இந்த இருவரும் 1886ஆம் ஆண்டு – அதாவது ஒரே ஆண்டில் – தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றனர். ஒரே ஆண்டில் இருவரும் வெற்றி பெற்றது மட்டுமல்ல, இவர்கள் இருவரும் 1863 ஆம் ஆண்டு – ஒரே ஆண்டில் பிறந்தனர். அது மட்டுமல்ல, இருவரும் 1914ஆம் ஆண்டில் – ஒரே ஆண்டில் மரணமடைந்தனர்.
என்ன அதிசய ஒற்றுமை!
Tags: டர்பா, செயற்கைக் கை, கால்கள், கர்லாக் கட்டை, அலுமினியம்
-Subham-
You must be logged in to post a comment.