Written by London Swaminathan
Date: 24 August 2016
Time uploaded in London: 19-50
Post No.3089
Pictures are taken from various sources; thanks for the pictures.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கார்த்திகை பௌர்ணமி அன்று நடைபெறும் கார்த்திகைத் திருநாள் கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களுக்கு ஜாதி, இன வேறு பாடின்றி அனைவர் வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்து சுத்தப் படுத்தி, கோலமிட்டு, அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே விளக்கொளிதான்!
கோவில்களிலும் இது போலவே ஆயிரக் கணக் கான விளக்குகள் ஒளிரும். இதற்காகவே அன்று இலுப்பை எண்ணை கொண்டு விளக்கு ஏற்றுவர்.
அதைப் பார்த்தவுடன் தீப மங்கள ஜோதி நமோ நம: — என்னும் அருணகிரியின் திருவாக்கு நினைவுக்கு வரும் ( நாதவிந்துகலாதீ நமோ நம: என்ற திருப்புகழ் ).
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபம், பரணி தீபம் என்பன மிகவும் பிரசித்தமானவை. லட்சக் கணக்காணோரைக் கவர்ந்திழுக்கும் திருவிழாவாகும்.
தமிழ்நாட்டின் எல்லாக் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்துல் நிகழ்ச்சியும் அன்று இரவில் நடைபெறும். ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி முதலிய பூச்சிகள் பெருகி இருக்கும் என்பதால் இப்படிச் சொக்கப்பனை கொளுத்துவர். அதில் பூச்சிகள் விழுந்து இறந்துவிடும். வீடுகளிலும் பழைய பொருட்களை வெளியே போட்டு சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.
கார்த்திகை பற்றி சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்ற குறிப்புகளைப் பலரும் அறிவர். ஆனால் தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு இருப்பது பலருக்கும் தெரிந்திராது.
தொல்காப்பியத்தில்
வேலி நோக்கிய விளக்கு நிலையும்–
தொல்.பொருள்.புறத்திணை இயல்-35
வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
தொல் காப்பியத்தில் வரும் இந்திரன், வருணன், அக்னி, துர்கை முதலிய குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் தொல்காப்பிய உரை சரியே என்று தெளிவுபெறலாம்.
அகநானூறு, நற்றிணை போன்ற அகத்துறை நூல்களில் கூட கார்த்திகை விழா பற்றிய குறிப்புகள் இருப்பது, இதன் புகழைக் காட்டும்.
தீபாவளிக்கு இப்பொழுது எப்படி எல்லோரும் குடும்பத்தினரைப் பார்க்கப் போய்விடுகிறார்களோ, அது போல அந்தக் காலத்தில் கார்த்திகை திருவிழாவுக்கு எல்லோரும் சொந்த ஊருக்குப் போய்விடுவர்.
தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்
அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)
இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.
சிலர் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் ஆறு கோடுகள் எல்லாம் முருகனை வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்கள் என்றும் நம்புவர்.
வேதத்திலும், குமார சம்பவம் முதலிய நூல்களிலும் கார்த்திகைப் பெண்களும், அவர்களைக் குறிக்கும் விண்மீன்களும் இடம் பெற்றிருகின்றன. ஆக வேத காலக் கார்த்திகை இன்று வரை வழிபடப் படுகிறது.
கார்த்திகை பௌர்ணமி அன்று இந்த ஆறு நட்சத்திரங்களும் நிலவுடன் நெருங்கி நிற்கும்.
வானவியல் கணக்குப்படி கார்த்திகை நட்சத்திரங்கள் ஏழு ஆகும். நாமும் அதை முருகன்+ ஆறு கார்த்திகைப் பெண்கள் என்று சொன்னாலும் தவறில்லை.
முத்தொள்ளாயிரம் என்னும் நூலில்.
குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்
ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்
நாடறி கௌவை தரும்
என்றும்
சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்
“குன்றிற் கார்த்திகை விளக்கீட்டென்ன”
என்றும்
பொய்கையார், கார் நாற்பதில்
“கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே”
என்றும் கார்த்திகை தீபத்தைப் போற்றுவர்.
தொல்காப்பியம் தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24-12-2014
தொல்காப்பிய அதிசயங்கள், 14-11-2014
தொல்காப்பியர் காலம் தவறு-1, 9 செப்டம்பர் 2012
தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 2, தேதி-10 செப்டம்பர் 2012
பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு, 13 செப்டம்பர் 2012
தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3, 12 செப்டம்பர் 2012
தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!, 31 மார்ச் 2014
தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!, 9 ஏப்ரல் 2015
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826), 20-5-2016
தீபாவளிக் கட்டுரை: தீப மங்கள ஜோதீ நமோ நம! , 10 நவம்பர், 2015
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did TOLKAPPIYAR copy from Sanskrit Books?, 10-9-2012
WHO WAS TOLKAPPIYAR?,9-9-2012
–Subham–
You must be logged in to post a comment.