Written by S NAGARAJAN
Date: 17 September 2016
Time uploaded in London: 5-21 AM
Post No.3160
Pictures are taken from various sources; thanks.
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 12
ச.நாகராஜன்
இப்போது ஸு யுன்னுக்கு வயது 66.
இளவேனில் காலம்.
போதனைகளைக் கூறி அருளுமாறு ஸ்டோன் பெல் மடாலயம் ஸு யுன்னுக்கு அழைப்பு விடுத்தது. அங்கு அவரது அமிதாப சூத்ராவின் விளக்க உரையைக் கேட்க நூற்றுக் கணக்கில் மக்கள் திரண்டனர்.
பிறகு அவர் பர்மா சென்று மாந்தலேயை அடைந்தார். அங்கு அவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டார்.
லுடாங்கில் உள்ள அவலோகிடேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற அவர் அங்கிருந்த துறவியான டிங்-ரு என்பவரைச் சந்தித்தார்.
அவருடனேயே இருந்த ஸு யுன் மணியை ஒலித்தும் மத்தளம் அடித்தும் அவருக்கு உதவியாக இருந்தார்.
ஆலயத்தில் விமோசன உரையை முடித்த அந்தத் துறவி திடீரென்று, “கொல். கொல். கொல்” என்று மூன்று முறை உரக்கக் கூவினார்.
பிறகு மூன்று முறை நமஸ்கரித்தார்.
இது மறுநாளும் தொடர்ந்தது.
இதைப் பார்த்த ஸு யுன் அதிசயித்தார். காலை, நடுப்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் யாராவ்து இப்படி ‘கொல்’ என்று சொல்வார்களா?
மாலை உணவாக அந்தத் துறவி வெங்காயம் பூண்டு மற்றும் பாலை உண்டார். ஆனால் ஸு யுன் உணவை ஏற்கவில்லை.
மௌனமாக தண்ணீரை மட்டும் அருந்தினார்.
அந்தத் துறவி ஸு யுன் ஏன் உணவை ஏற்கவில்லை என்பதை அறிந்து கொண்டார். வெங்காயத்தையும் பூண்டையும் நீக்கி விட்டு சாதமும் கஞ்சியும் தர ஏற்பாடு செய்தார். ஸு யுன்னுக்கு இப்போது உணவை ஏற்க முடிந்தது.
ஏழு நாட்கள் கழிந்தன. அவர் தேநீர் அருந்த ஸு யுன்னுக்கு அழைப்பு விடுத்தார். அவரிடம் சென்ற ஸு யுன் ஏன் அவர் பிரார்த்தனை நேரத்தில் ‘கொல், கொல், கொல்’ என்று உச்சரிக்கிறார் ஏன்று கேட்டார்.
அதற்கு அவர், “நான் வெளி நாட்டினரைக் கொல் என்கிறேன். ஹுனான் மாகாணத்தில் பாவ் –கிங் என்ற இடத்தைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். அவர் மறைவிற்குப் பின்னர் பூ-டோ தீவில் தர்ம்ம் பற்றி அறிந்து கொண்டேன். மாஸ்டர் சூ சானின் போதனைகளை ஏற்று அவற்றைப் பின்பற்றினேன்.
பத்து வருடங்களுக்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து கப்பலில் ஏறி சிங்கப்பூருக்குச் சென்றேன். அங்கிருந்த அந்த வெளிநாட்டினர் என்னை மிகவும் கேவலமாகக் கொடுமைப்படுத்தினர். அதனால் தான் அவர்களை வெறுத்தேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை வெறுப்பேன். ஆகவே தான் வெளிநாட்டினரைக் ‘கொல்’ என்கிறேன்.
இங்கு நான் படங்களை விற்கிறேன். அவற்றை இங்குள்ள மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். என் வாழ்க்கை கவலையின்றிக் கழிகிறது. இங்கு வரும் துறவிகள் உணர்ச்சி வசப்படும் சாதாரண நிலையில் உள்ளவர்கள். உங்களைப் போன்ற லயத்துடன் இசைந்த ஒரு துறவியைக் காண்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். ஆகவே தான் உங்களிடம் மட்டும் என்னைப் பற்றிய உண்மையை உரைக்கிறேன்” என்று கூறி முடித்தார்.
அவரிடம் ஸு யுன் எதிரியையும் நண்பனையும் ஒன்றாகப் பாவிக்க வேண்டும் என்று கனிவுடன் கூறினார். ஆனால் வெளிநாட்டினரை வெறுக்கும் அவர் மனதை மாற்ற முடியவில்லை.
உடல் நிலை ஒருவாறாகத் தேறியது. ஸு யுன் அங்கிருந்து விடை பெற விழைந்தார். ஆனால் அநதத் துறவியோ அவரை அங்கேயே இருக்குமாறு வேண்டினார். ஆனால் ஸு யுன் தான் ஆலயத்திற்கு நிதி திரட்டி வந்த விஷயத்தை எடுத்துரைத்தார்.
உடனே அவர் பயணத்திற்குத் தேவையான பணம் மற்றும் இதர பொருள்களை அன்புடன் தந்து உதவினார். ஒரு ரயிலில் செல்ல் டிக்கட்டையும் வாங்கித் தந்தார்.
ரங்கூனில் இருந்த உபாசகர் காவ் வான் – பேங்கிற்கு ஒரு தந்தியையும் அடித்தார்.
ஸு யுன்னுக்கு ரங்கூனில் அபாரமான வரவேற்பு காத்திருந்தது.
காவ் வான் – பேங் பெருந்திரளான கூட்டத்துடன் வந்திருந்து அவரை வரவேற்றார்.
பூஜனைக்குரிய மாஸ்டர் மியாவ்- லியான் ஸு யுன்னைப் பற்றிக் கூறியதை அவர் விவரித்தார்.
சீனாவிற்கு உடனே திரும்பி வருமாறு மாஸ்டர் மியாவ்-லியான் கூறியதையும் அவர் ஸு யுன்னிடம் தெரிவித்தார்.
உபாசகர் காவ் படகுத் துறை வந்து வழியனுப்பினார். ஜி-லூவோ மடாலயத்திற்கு ஒரு தந்தி அடித்து பல துறவிகள் வந்து வரவேற்பு தந்து ஸு யுன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கப்பல் வந்தது.
ஆனால் அதிலிருந்த ஒரு பயணி தொற்றுநோய் ஒன்றால் இறந்திருந்தார். ஆகவே மஞ்சள் கொடி ஒன்று ஏற்றப்பட்டிருந்தது.
அனைத்துப் பயணிகளையும் மலையில் தொலைதூரத்தில் நோய் பரவாதிருக்கத் தனியாக அடைத்து வைக்கும் குவாரண்டைன் முறைப்படி அடைத்து வைத்தனர்.
-தொடரும்
You must be logged in to post a comment.