Written by S. NAGARAJAN
Date: 10 October 2016
Time uploaded in London: 5-23 AM
Post No.3237
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
சரஸ்வதி பூஜை சிறப்புக் கட்டுரை
மௌனத்தில் எத்தனை வகை?!
ச.நாகராஜன்
“ஒருவனுக்கு துரோகமிழைக்காத உண்மை நண்பன் மௌனமே”
– கன்ஃப்யூஷியஸ்
வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்தால் அது தான் மௌனம்! இது சரியா? இந்த ஒரு நிலை தான் மௌனத்தின் ஒரே வகையா?
சீனாவில் மௌனத்தில் நூறு வகை உண்டு என்று வலியுறுத்தப்படுகிறது. ஜென் பிரிவு மௌனத்தின் அபாரமான வலிமையையும் அதன் ஆழத்தையும் பல விதமாக விளக்குகிறது.
உண்மையான மௌன நிலையில் ஒருவர் எவ்வளவு காலம் இருக்க முடியும்?
அறிவியல் ஆராயப் புகுந்தது. உண்மையான அறிவியல் ரீதியிலான மௌன நிலையில் ஒருவர் 15 நிமிடம் இருந்தாலே அதிகம் தான். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது!
ஒரு செல் போன் ஒலிக்கும் போதோ அல்லது ஒரு டிஷ் வாஷர் அல்லது வாஷிங் மெஷின் இயக்கப் படும் போதோ அது எவ்வளவு ஓசையை எழுப்புகிறது?
மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் மற்றும் அமெரிக்க ராணுவப் பிரிவு இது போன்ற ஓசைகளின் அளவைக் கண்டு பிடிக்க சத்தமே இல்லாத ஒரு சேம்பரை – மௌன அறையை அமைப்பது வழக்கம்.
இதை அனெகோயிக் அறை என்று அழைப்பர். (unechoic ; un-echoic –எதிரொலி இல்லாத என்று பொருள்)
மின்னஸோட்டாவில் உள்ள மின்னபோலிஸில் ஆரிஃபீல்ட் லாபரட்டரிஸிலும் (orifield laboratories) இப்படி ஒரு அறை உண்டு. இந்த அறை, தங்கள் தயாரிப்புகளைச் சோதனை செய்ய கட்டண அடிப்படையில் தேவைப்பட்டோருக்கு தரப்படுவதும் உண்டு.
உண்மையில் ஒரு அமைதியான அறை என்பதன் விளக்கம் தான் என்ன? மின்னஸோட்டா பப்ளிக் ரேடியோ 30 டெசிபல் உள்ள அறையே அமைதியான அறை என்ற இலக்கணத்தை வகுக்கிறது. அமைதியான இரவு நேரத்தில் ஏர்கண்டிஷனரின் ஓசை, தாள்களைப் புரட்டும் ஓசை போன்றவை மெலிதாகக் கேட்கும். அது பொதுவாக அமைதியான அறை எனப்படும்.
ஆனால் அனெகோயிக் அறை மைனஸ் ஒன்பது டெசிபல் என்ற அளவு அமைதியாக இருக்கும். ஆம், சாதாரண மௌன நிலைக்கும் கீழாக எதிர்மறையில் ஒன்பது டெசிபல்!
கின்னஸ் வோர்ல்ட் ரிகார்டின் படி உலகின் மிக மிக அமைதியான அறை இது ஒன்று தான்!
இந்த அறை விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த சத்தமும் இதனுள் புக முடியாது. சுவரிலிருந்து ஒரு மீட்டர் நீளம் ஊடுருவியிருக்கும் விசேஷ அமைப்புகள் எந்த எதிரொலியையும் சத்தத்தையும் உள் வாங்கி கிரகித்து விடும்.
இதன் சிறப்புத் தன்மையைப் பற்றி இந்த சோதனைச்சாலையின் தலைவர் ஸ்டீவ் ஆரிஃபீல்ட், “சாதாரணமாக ஒரு அமைதியான அறையில் உட்காரும் ஒருவர் ஒலியையும் அதன் பிரதிபலிப்புகளையும் கேட்கிறார். ஆனால் அனெகோயிக் அறையில் எந்த ஒரு சத்தமும் அதன் பிரதிபலிப்பும் இருக்காது.அங்கு ஜீரோ ரிஃபளக் ஷன் இருக்கும். நான் பேசும்போது நீங்கள் எனது குரலை உள்ளது உள்ளபடியே அப்படியே கேட்க முடியும். பேசும் போது நான் தலையைத் திருப்பினால் ஒலியும் தலை திருப்பிய திசையில் வளையும்.” என்கிறார்.
இப்படிப்பட்ட சைலன்ஸ் சேம்பரில் ஒருவர் உட்கார்ந்த போது அவர் இடி இடிப்பது போன்ற ஓசையையும் ஆறு பாய்வது அல்லது அருவி நீர் கொட்டுவது போன்ற ஒசையையும் கேட்டார். பத்து நிமிடங்களில் அவர் மண்டை வெடித்துச் சிதறி விடுவது போல இருந்தது. உடனே அறையை விட்டு வெளியே வந்து நடந்ததைச் சொன்னார்.
ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், “நீங்கள் கேட்டது இடைவிடாத இதயத் துடிப்பு தான். உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டமே உடலில் பாய்வது ஆறு பாய்வது போன்ற ஓசையை எழுப்புகிறது. அதைத் தான் நீங்கள் கேட்டீர்கள்” என்றனர். உடலின் அற்புதமான ஓசை விந்தை இது!
மைனஸ் டெசிபல் நிலையில் இப்படித் தான் உடல் நிகழ்வில் ஏற்படும் சத்தத்தையே நம்மால் தாங்க முடியாமல் போய் விடும் நிலை ஏற்படுகிறது.
மாஸன் அண்ட் ப்ராடி (Mason and Brady) ஆய்வு என்பது பிரபலமான ஆய்வாகும். இந்த ஆய்வில் மௌன சேம்பரில் சிலரை இருட்டாக இருந்த நிலையில் 15 நிமிடம் இருக்க வைத்த போது அவர்கள் மாயத் தோற்றங்களைக் கண்டு அலறினர். அதிலிருந்து தெரிய வருவது ஒருவர் 15 நிமிடம் ஆழ்ந்த மௌனத்தைத் தாக்குப் பிடித்தால அதுவே அதிகம் என்பது தான்!
இனி உலகாயத ரீதியாக, மௌனம் என்பது வெற்றிக்கான வழி என்பது நிலை நிறுத்தப்பட்ட சித்தாந்தம்.
பல்வேறு ஆராய்ச்சிகள் பல மௌன நிலைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
ஒரு விவாதத்தில் எதிராளியைக் கிறுக்குப் பிடிக்கும் நிலைக்குத் தள்ள வேண்டுமெனில் ஒரு சுலபமான வழி இருக்கிறது. சொல்லால் அவர் தாக்கும் போது எதிரிலிருப்பவர் ஒவ்வொரு முறையும் நான்கு விநாடிகள் பதிலளிக்கக் கூடாது. ஹாலந்தில் நடந்த ஒரு ஆய்வின் படி ஒரு மனித மூளை நான்கு விநாடிகள் ஒருவர் மௌனமாக இருந்தால் அவரது கூற்றை நிராகரிப்பதாகப் பதிவு செய்து கொள்கிறது. எரிச்சல் கொப்பளிக்கும் எதிராளிக்கு.
பிரபல சிந்தனையாளரான தோரோ, “நான் இரவின் மௌனத்தைக் ‘கேட்க’ விரும்புகிறேன். ஏனெனில் அந்த மௌனம் பாஸிடிவ் ஆனது. கேட்க வேண்டிய ஒன்று” என்கிறார்.
பகவான் ரமண மஹரிஷி மௌனமாக சும்மாவே இருக்கிறாரே என்று சிலர் கூறிய போது, “நான் மௌன நிலையில் சும்மா இருக்கிறேன் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கூறி நிறுத்தி விட்டார். மௌன நிலையில் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி ஏராளமான அரும் செயல்களைச் செய்ய முடியும். இதை அரவிந்தரும் வலியுறுத்தியுள்ளார்.
ரமண மஹரிஷியின் முன் ஏராளமான கேள்விகளைக் கேட்பதற்காக வந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் அவர் முன் அமர்ந்த போது கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் எழ, அதற்குப் பதிலும் தானாகவே வந்தது. நெடு நேரம் அமர்ந்திருந்த அவ்ரால் ஒரு கேள்வியையும் கேட்க முடியவில்லை. பதில் தான் உடனுக்குடன் வருகிறதே
ஆக மௌன நிலையில் பல ஆழ்நிலைகள் உண்டு.பால் குட்மேன் எழுதிய ‘நைன் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ (Nine kinds of silence) என்ற நூலில், அவர், ‘செழிப்பான மௌனம் ஆன்மாவிற்கான சிறந்த மேய்ச்சல் நிலம்” என்கிறார்.
மௌனத்தை நாம் ‘கேட்டால்’ அது நமது அனுபவங்களை ஆழமாக்கும் என்கிறார் கவிஞர் பில்லி காலின்ஸ். அவர் எழுதிய கவிதை நூலின் பெயர் ‘தி ஹண்ட்ரட் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ் (The hundred kinds of Silence : Billy Collins). தனது தாயின் கல்லறைக்குச் சென்று இறந்த தனது தாயுடன் பேசி தான் புதிதாக அணிந்திருக்கும் கண்ணாடி எப்படி இருக்கிறது என்பது பற்றி அவரிடம் கேட்க முடிகிறது என்கிறார் அவர், தனது கவிதை வாயிலாக!
ஆக மௌனங்கள் நூறு வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை!
எல்லையற்ற முடிவிலா மோனம் உரைக்க ஒண்ணா அற்புதம். அறிவியலும் ஆன்மீகமும் உளவியலும் ஒன்று சேரும் இடம் மௌனமே!
******
You must be logged in to post a comment.