Picture: Joyner is speaking.
Written by S. NAGARAJAN
Date: 27 October 2016
Time uploaded in London: 6-24 AM
Post No.3293
Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.
Contact :– swami_48@yahoo.com
திருநெல்வேலியிலிருந்து திரு ஆர்.சி. ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் வெளி வருகிறது ஹெல்த்கேர் பத்திரிகை. அதில் செப்டம்பர் 2016 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை
விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம், அதில் வரும் மர்மமான பெயர்களைக் கொண்ட ஊட்டச் சத்தால் பயனொன்றுமில்லை என்கின்றனர் நிபுணர்கள்!
கட்டுரையைப் படியுங்கள், உடற்பயிற்சியும் ஆரோக்கிய உணவும் இருந்தாலேயே போதும் என்னும் உண்மை புரியும்!
வளமான வாழ்விற்கு உதவுவது எது?
By ச.நாகராஜன்
ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி தேவை – தசைகளில் வலுவேற்ற, எடையைக் குறைக்க, பருமனைக் குறைக்க, மன நிலையைச் சீராக வைக்க – இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக உடற்பயிற்சியைச் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஆனால் நமது செயல்திறனை மிகப் பிரமாதமான அளவிற்கு உயர்த்த ஏதேனும் உணவுத்திட்டம் – அது தான் டயட் இருக்கிறதா?
பல விஞ்ஞானிகளிடம் இந்தக் கேள்வியை முன் வைத்த போது பல நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன.
உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவு வகையை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில்லை
உடற்பயிற்சியை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பேர்கள் தங்கள் உடற்பயிற்சியில் நல்ல விளைவைப் பெற ஒரு குறிப்பிட்ட உணவு வகை எதையும் சாப்பிடுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர் யாரேனும் ஒருவர் உங்களிடம் வந்து ஒரு மாஜிக் உணவுத் திட்டம் இருக்கிறது என்று கூறினால் அது மூட நம்பிக்கை என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் டாக்டர் மைக்கேல் ஜாய்னெர். இவர் மின்னஸோட்டாவில் ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கில் உடற்பயிற்சி உளவியலாளராகப் பணி புரியும் ஒரு நிபுணர். தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக உடற்பயிற்சியைச் செய்யும் ஒருவருக்கு உணவுத் திட்டம் என்பது எந்த வித மாறுபாட்டையும் தருவதில்லை என்கிறார் அவர்.
ஆனால் தினமும் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச் சத்து உணவு தேவை என்கிறது ஒரு ஆய்வு.
வாரத்திற்கு இரு முறை யோகா பயிற்சி செய்பவர்கள், வாரத்தில் சில மணி நேரங்கள் ஓடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள், அல்லது ஜிம்மில் ஒரு மணி நேரமாவது வெயிட் மெஷினில் பயிற்சியைச் செய்பவர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தான் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், கொழுப்புப் பதார்த்தங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டுமென்பதில்லை.
இந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதில் இழந்த கலோரிகளுக்கு ஈடுகட்டி சக்தியை ஈட்ட அதற்காகவென்றே உணவை உண்ண வேண்டுமென்பதில்லை, என்கிறார் ஜாய்னெர்.
இருந்தபோதிலும் சிறந்த விளையாட்டு வீரர்களும் மிக கடினமான ஏரோபிக் பயிற்சியை மேற்கொள்பவர்கள் தங்களின் தசை இழப்பைத் தடுத்து ஆற்றலை மேமபடுத்த கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஆகியவற்றை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
எவ்வளவு புரோட்டீன், கார்போஹைட்ரேட் என்று க்ணக்கிடுவதை விட, எது ஆரோக்கியமான உணவு என்பதில் கவனம் செலுத்தினாலே போதும் என்கிறார் விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச் சத்து நிபுணர் நான்சி க்ளார்க்.
இவர் எழுதிய நான்சி க்ளார்க்ஸ் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் கைட்புக் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வழிகாட்டும் நூல்.
உணவுத் திட்டத்தில் உணவானது 85 சதவிகிதம் ஊட்டச் சத்தைக் கொண்டிருந்து 15 சதவிகிதம் பதப்படுத்தப்பட்ட உணவைக் கொண்டிருந்தால் நீங்கள் பயப்படத் தேவையே இல்லை என்கிறார் நான்சி
உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் தாங்கள் உணவருந்தும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல் இன்றியமையாதது. இது அவர்களுக்கு உடற்பயிற்சியால் ஏற்படும் நல்ல விளைவுகளை அதிகரிக்கும்..
எவ்வளவு நேரம் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்து துணை உணவு தேவைதானா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. துணை உணவு என்று சொல்லி சந்தையில் விற்கப்படும் பொருள்களில் மர்மமான பெயர்களைக் கொண்ட பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதை ஆராய்ந்ததில் சொல்லிக் கொள்ளக் கூடிய விதத்தில் பயனொன்றும் இல்லை.
பெரும்பாலானோர் உடலின் எடையைக் குறைக்கவே உடற்பயிற்சியை விரும்பிச் செய்கின்றனர். இதில் உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது எச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய ஒரு விஷயம்.
ஆக மொத்தத்தில் சுருக்கமாக சொல்லப் போனால் உடற்பயிற்சியை மேற்கொள்வோர் சாதாரணமான் ஆரோக்கிய உணவை மேற்கொண்டாலேயே போதும்.
விளம்பரங்கள் சுட்டிக் காட்டும் இன்னதென்று சொல்ல முடியாத மர்மமான பொருள்கள் க்லந்து விற்கப்படும் எதையும் வாங்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் அதிக விவரங்களை வேண்டுவோர் நான்சியின் வழிகாட்டும் புத்தகத்தைப் படித்துப் பயன்பெறலாம்.
நன்றி: லைவ் ஸயின்ஸ் பத்திரிகை
–Subham-
You must be logged in to post a comment.