இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 3 (Post No.3308)

Written by S. NAGARAJAN

 

Date: 1 November 2016

 

Time uploaded in London: 6-29 AM

 

Post No.3308

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 3

 

பேச்சினால் பிரமிக்க வைக்கும் அமைதிப் புறாக்கள்

அமைதிக்கான இந்த ஆண்டின் இக்நோபல் பரிசு ஐந்து பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்த ஆராய்ச்சி? அர்த்தமற்ற பிரம்மாண்டமான சிக்கலான வார்த்தைகளைத் தொகுத்துப் பேசி கேட்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்துவதற்காக இந்தப் பரிசு தரப்பட்டுள்ளது. உண்மையில் ஆராயப் போனால் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தேமே இருக்காது. (என்னங்க, அப்ப நம்ம அரசியல்வாதிகள் அனைவருக்குமே இந்தப் பரிசைத் தந்துடலாமே என்று கமெண்ட் அடிக்காதீங்க, ப்ளீஸ்!)

“Wholeness quiets infinite phenomena” என்பது கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இதன் அர்த்தம் என்ன? யாருக்கும் புரியாது.

இந்தப் பரிசைப் பெற்றவர்கள் கார்டன் பென்னிகுக், ஜேம்ஸ் ஆலன் செய்ன், நதானியேல் பார், டெரக் கோஹ்லர் மற்றும் ஜொனாதன் ஃப்யூஜெட்சாங். ஆகியோர்!

அமைதிப் புறாக்களே வாழ்த்துக்கள்!

 

 

ஈக்களை ஆராய்ந்து மகிழ்ந்தவர்

இலக்கியத்திற்கான இந்த ஆண்டின் இக்நோபல் பரிசு ஃப்ரெடெரிக் ஜோபெர்க்கிற்கு அளிக்கப்படுகிறது. அவரது இலக்கிய சாதனை?

செத்துப் போன ஈக்களையும் உயிருடன் இருக்கும் ஈக்களையும் ஆராய்ந்து மூன்று தொகுதிகள் அடங்கிய ஒரு சுயசரிதத்தை அவர் வெளியிட்டுள்ளார்! ‘தி ஃப்ளை ட்ராப் என்ற முதல் தொகுதியுடன் அடுத்த இரு இரு தொகுதிகளும் ஆங்கிலத்தில் வரவுள்ளன.

 

மறக்காமல் படியுங்கள்!

2016க்கான பரிசு மேதைகளைப் பற்றி அறியும் போது அதில் இந்தியர் பெயர் ஒருவரையும் காணோமே என்று வருத்தப்பட வேண்டாம்.

இதோ ஏற்கனவே இக்நோபல் பெற்ற இந்திய மேதைகளில் சிலர்:

பொருளாதார அழிவிலிருந்து உலகத்தைக் காப்பது எப்படி? இதற்கான பரிசைப் பெற்றவர் ரவி  பத்ரா. அவரது ‘க்ரேட் டெப்ரஷன் ஆஃப் இந்தியா இன் 1990 என்ற புத்தகத்திற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது. பின்னால் தான் 1990இல் இந்தியாவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை என்பது தெரிந்தது!

 

கணிதத்திற்கான 2002ஆம் ஆண்டு பரிசைப் பெற்றவர்கள் கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  கேபி ஸ்ரீகுமார் மற்றும் ஜி.நிர்மலன். இவர்களது அரிய கணித சாதனை? ஒரு யானையின் மேல்பரப்பை துல்லியமாக எப்படி அளப்பது என்பது தான்!இதற்காக ஆய்வாளர்கள் யானைகளின் எல்லா சைஸ்களையும் தேடிக் கண்டுபிடித்து ஆராய்ந்தனர். காட்டில் ஆரம்பித்து ஜெமினி சர்க்கஸ் வரை பல்வேறு  இடங்களுக்கும் அவர்கள் சென்றனர். பின்னர் பிரமாதமான ஸ்ரீகுமார்  நிர்மலன் சூத்திரத்தை அவர்கள் கண்டு பிடித்தனர்.

ஃபார்முலா இது தான்: .8245+ 6.807H + 7.073FFC

 

மயிர்க்கூச்செறியும் ஆபத்திலிருந்து அவர்கள் பிழைத்த சம்பவமும் உண்டு. ஒரு யானைக்குக் கோபம் வந்து ஆய்வாளரின் காலை மிதிக்க தான் காலைத் தூக்கியது. தக்க சமயத்தில் ஆய்வாளர் காலை இழுத்துக் கொள்ளவே அவர் காலின்  முன்பக்கத்தில் மட்டும் யானையின் கால் பதிந்தது. ஷூவை அவிழ்த்துப் போட்டு ஓடிப் போனார் அவர். உயிர் பிழைத்தது பிள்ளையாரின் அருள்! எல்லாம் யானை சூத்திரத்தின் மஹிமையே!

 

கௌரி நந்தா எம் ஐ டியில் படிக்கும் மாணவர்.2005ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான இக்நோபல் பரிசை இவர் பெற்றார்.

காரணம் காலையில் நீங்கள் எழுந்திருக்க வேண்டிய நேரத்தில் அலாரத்தை செட் செய்து விட்டு நீங்கள் படுக்கப் போய் விடுவீர்கள். இவர் கண்டு பிடித்த கடிகாரம் சரியான நேரத்தில் உரக்க அலாரம் சப்தத்தை அலறச் செய்தவாறே ஓடி ஒளிந்து கொள்ளும். வேறு வழியே இல்லை, அலாரத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதை ஆஃப் செய்ய வேண்டும். அதற்குள் தூக்கம் கலைந்து விடும், இல்லையா! அடடா, எத்தனை ஆயிரம் மணித்துளிகள் இதனால் உலகில் சேமிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா! பெண்மணியின் மணியான  மணி காட்டும் கடிகாரத்திற்கு ஒரு டிர்ரிங்ங்ங்ங்…..

 

கால்களுக்கு இடையே பார்ப்பவர்

அட்சுகி ஹிகஷியாமா மற்றும் கோஹெல் அடாச்சி ஒரு பொருளை நீங்கள் வளைந்து நின்று உங்கள் கால்களுக்கு இடையே அதைப் பார்த்தால் அது வேறு விதமாகத் தோன்றுகிறதா என்பதை ஆராய்ந்தனர். விஷன் ரிஸர்ச் என்ற இதழில் 2006இல் இவர்களது ஆய்வு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

தலை வளைந்து பார்க்கும் போது பார்க்கும் காட்சிகள் அனைத்தும் தெளிவாகவும் பிரகாசமாகவும் தெரிகின்றன என்பது இவர்களின் ஆய்வு முடிவு! ஆகவே அடுத்த முறை யாரையாவது அல்லது எந்தக் காட்சியையாவது நீங்கள் பார்க்கும் போது….!!

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் படித்து உத்வேகம் பெறும் நேயர்களே, இனி நீங்கள் பெறப் போகும் உங்களது இக்நோபல் பரிசுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல இத்தாலிய மேதையான பிபனோசி தன் பெயரால் பிபனோசி எண் தொடர் என்ற மாபெரும் கண்டுபிடிப்பைச் செயதவர். கணிதத்தில் அவர் பெரிய மேதை என்பதை வாழ்நாள் முழுவதும் அவர் நிரூபித்துக் கொண்டே இருந்தார். அவர் போட்ட புதிர் கணிதம் இது.

மிகக் கஷ்டமான இந்தப் புதிரை விடுவிப்பது எளிதில்லை.

கணிதப் புதிர் இது தான்:

ஏழு வாசல் கதவுகள் கொண்ட ஒரு ஆப்பிள் தோட்டத்திற்குள் சென்ற ஒருவன் நிறைய ஆப்பிள்களைப் பறித்தான். அவன் தோட்டத்தை விட்டு வெளியே வரும் போது முதல் வாசலில் இருந்த காவலாளிக்கு ஆப்பிள்களில் பாதியையும் கூட கொசுறாக இன்னும் ஒரு ஆப்பிளையும் தந்தான். அடுத்த வாசலில் இருந்த காவலாளிக்கு தன் கையில் மீதமிருந்த ஆப்பிள்களில் பாதியையும் கொசுறாக கூட ஒரு ஆப்பிளையும் தந்தான். அடுத்த வாசலில் இருந்த காவலாளிக்கு மீதம் தன் கையிலிருந்த ஆப்பிள்களில் பாதியையும் கொசுறாக இன்னும் ஒரு ஆப்பிளையும் தந்தான். இதே போல மீதமிருந்த வாசல்களிலும் தன் கையில் இருந்தவற்றில் பாதியையும் கூட் ஒரு ஆப்பிளையும் தந்து  கொண்டே வந்தான். ஏழாவது வாசலிலிருந்து அவன் தோட்டத்தை விட்டு வெளியேறிய போது மீதமாக அவன் கையில் இருந்தது ஒரே ஒரு ஆப்பிள் தான்.

 

இப்போது கேள்வி இது தான்:- அவன் பறித்த மொத்த ஆப்பிள்கள் எவ்வளவு?

விடை : – 382 (அவன் ஒவ்வொரு வாசலிலும் கொடுத்த  ஆப்பிள்கள் முறையே 192,96,48,24,12,6,3. கையில் மீதம் இருந்தது ஒன்று. (இதில் உள்ள எண் விசித்திரங்களை கவனித்தால் ஒவ்வொன்றும் முன் கொடுத்ததில் பாதியாக் இருப்பது புலப்படும்!)

************

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: