புனித கல்லறை, ஜெருசலம்
WRITTEN by S NAGARAJAN
Date: 12 November 2016
Time uploaded in London: 4-59 AM
Post No.3345
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட ஏசு
கிறிஸ்துவின் கல்லறை!
ச.நாகராஜன்
புனிதர் ஏசு கிறிஸ்துவின் கல்லறை கி.பி.1555ஆம் ஆண்டுக்கு முன்னரே அதன் மூடப்பட்ட ஒரிஜினல் கல்லின் மீது புதிதாகச் சலவைக் கற்கள் வைக்கப்பட்டு மூடப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி.
ஏசு கல்லறை,ஜெருசலம்
இந்தப் புனிதமான கல்லறையைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரீஸ் நாட்டில் ஏதன்ஸ் நகரில் உள்ள நேஷனல் டெக்னிகல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள் இந்தப் புனித ஸ்தலத்தின் உட்பகுதிகளை அணுக வேண்டியது அவசியம் எனத் தீர்மானித்தனர். நேஷனல் ஜியாகிராபிக் சொஸைடியைச் சேர்ந்த ஃப்ரெடெரிக் ஹைபெர்ட், “எங்களுக்குத் தெரிந்த வரையில் நாங்களே முதன்முறையாக இதைத் திறந்து பார்க்கப் போகிறோம்” என்று அறிவித்தார்.
பழைய புராணங்களை ஆய்கின்ற வரலாற்று ஆய்வாளர்கள், ஏசு உண்மையில் வாழ்ந்த ஒரு புனிதரே என்று சொல்வதோடு அவர் கி.பி. முதல் ஆண்டில் இப்போது பாலஸ்தீனம என்று அழைக்கப்படும் பெத்லஹேமில் பிறந்தார் என்றும் இஸ்ரேலில் உள்ள நாசரேத்திற்குப் பின்னர் சென்றதாகவும் கி.பி, 29ஆம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்ததாகவும் உறுதி படக் கூறுகின்றனர்.
ஹிப்ரூ பைபிளின் படி ஏசு ஒரு குகையில் கல் மேடை ஒன்றில் வைக்கப்பட்டு கற்களினால் மூடப்பட்டார்.
கான்ஸ்டண்டைன் என்ற முதல் கிறிஸ்தவ சக்கரவர்த்தி கி.பி, 326இல் தனது தாயான ஹெலினாவை தனது பிரதிநிதியாக ஜெருசலத்திற்கு அனுப்பினார். அங்குள்ளோர் ஒரு குகையைக் காண்பித்து இங்கு தான் ஏசுவின் கல்லறை உள்ளது என்று அவரிடம் குறிப்பிட்டனர். உடனே அந்தக் குகையில் ஒரு புனித
ஸ்தலத்தை கான்ஸ்டண்டைன் நிர்மாணித்தார். குகையின் மேல் மூடி அகற்றப்பட்டது. அங்கு வருகை புரிவோர் குனிந்து கீழே பார்க்கும் வண்ணம் அந்த புனித ஸ்தலம் அமைக்கப்பட்டது. அது ஹோலி எடிக்யூல் (Holy Edicule) என்று அழைக்கப்படலாயிற்று.
ஆயிரத்தி எண்ணூறுகளில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தால் அதை மீண்டும் புனருத்தாரணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதை மூன்று சர்ச்சுகளின் அமைப்புகள் கூட்டாக இப்போது நிர்வகித்து வருகின்றன..
Picture of Holy Edicule in Jerusalem
1958இல் இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரு மனதாக இதை உரிய முறையில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்று தீர்மானித்தன. என்றபோதும் ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னரே இதை எப்படிச் செய்வது என்றும் இதற்கு எப்படி நிதி திரட்டுவது என்றும் தீர்மானித்தன. இதற்கு ஆகும் செலவு சுமார் 40 லட்சம் டாலர்கள் ஆகும்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் இரும்புக் கம்பிகளால் ஒரு தடுப்பு இங்கு அமைக்கப்பட்டது.
இதை உரிய முறையில் சீரமைக்கத் தீர்மானித்த புனரமைப்புக் குழுவினர் முதலில் 19ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக் கற்களை அகற்றினர். பின்னர் 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக்கற்களையும் அகற்றினர். அப்போது அவர்கள் கண்டது 12ஆம் நூற்றாண்டில் மூடப்பட்ட சலவைக் கற்களை. அவற்றையும் அகற்றிய பின்னர் முதன் முதலில் நிறுவப்பட்டிருந்த கல்லைக் கண்டனர்.
“இங்கு உள்ளே இருப்பதை ஆய்வு செய்வது எங்கள் நோக்கமல்ல. ஒரு டி என் ஏ (DNA) சோதனையும் நடைபெறாது வேறு எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட மாட்டாது” என்று உறுதிபடக் கூறிய குழுவினர் இது ஆய்வுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றனர்.
‘கடந்த பல நூற்றாண்டுகளாகப் புனிதமாகக் கருதப்பட்ட இந்த ஸ்தலத்தில் எந்த ஒரு ஆய்வும் எந்த ஒரு புதிய விஷயத்தையும் தரப் போவதில்லை. இந்தத் திட்டதின் மூலமாக நீங்கள் குனிந்து பார்த்து, இது வரை பார்க்க முடியாம்ல இருந்த, முன்னர் அமைக்கப்பட்டிருந்த பழைய இடத்தை இப்போது நன்கு பார்க்க முடியும்’ என்கின்றனர் இதைப் பராமரிக்க இருக்கும் குழுவினர்.
ஏசுபிரானின் ஒரிஜினல் கல்லறை திறக்கப்பட்டதையொட்டி
உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த புனித ஸ்தலம் பற்றிய செய்தியே இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய செய்தி! ஆதாரம் : லைவ் ஸயின்ஸ்
***********