Written by London Swaminathan
Date: 17 November 2016
Time uploaded in London: 16-21
Post No.3363
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சதாம் பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாமென்று சிறு வயதில் பாடக் கேட்டிருப்போம்.
கம்பன் சொல்கிறான் அனுமனுக்கு இரண்டு இறக்கைகள் என்று; அதை வைத்துதான் அவன் பறந்தானாம்.
அதுவும் அனுமன் வாயிலாகவே அதைச் சொல்லுகிறான். படிக்கச் சுவையாக இருக்கிறது.
இதோ அந்தப் பாடல்
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும்
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு பாலும்
கற்றை வார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டீர்
பொருள்:-
கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் முழுகச் செய்து அழிக்கும் பொருட்டு கடல் பொங்கி வந்தாலும் (சுனாமி ஏற்பட்டாலும்), இந்த உலக உருண்டையே உடைந்து போய் உயர்ந்து வானத்தில் சென்றாலும், சற்றும் கலங்காமல் கருடன் (கலுழன்) போல இக்கடலைக் கடந்து செல்வேன். எப்படியெனில் எனக்கு இரண்டு இறக்கைகள் முளைத்துள்ளன. ஒரு இறக்கை நீங்கள் எல்லோரும் என் மீது வைத்துள்ள கருணை; மற்றொரு இறக்கை இராமபிரான் போட்ட கட்டளை! நான் கடலைக் கடப்பதைக் காணத்தான் போகிறீர்கள்!
என்ன அருமையான கற்பனை. கருணை/அன்பு என்ற ஒன்றும் தலைவனின் கட்டளை என்ற ஒன்றும் அனுமனை கடலையே கடக்க வைத்துவிட்டது. இவைதான் இரண்டு இறக்கைகள் (சிறைகள்).
இந்தப் பாடலில் உள்ள சில விஞ்ஞானச் செய்திகளையும் அலசி ஆராய்வோம். வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் எல்லாம் ஏதோ பூமி உருண்டை என்பதை அவந்தான் கண்டு பிடித்தான் என்று எழுதியிருப்பார்கள். ஆனால் நாமோ பூமியைக் குறிப்பிடத் தொடங்கிய நாளிலிருந்தே அண்டம் (முட்டை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே பயன்படுத்துவோம். பூமி முட்டை வடிவமானது என்பதோடு கடலால் சூழப்பட்டது என்பதையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லுவோம்.
அது மட்டுமல்ல; சுனாமி போன்ற பெரிய தாக்குதலில்– இயற்கைச் சீற்றத்தில் உலகமே முழுகி பெரும் பிரளயம் வரும் என்பதும் நமக்குத் தெரியும். இந்த சுனாமியை அணுகுண்டுகள் வீசுவதால் மனிதனே உருவாக்குவானா அல்லது இயற்கையின் சீற்றத்தால் உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அண்ட சராசரங்கள் என்ற சம்ஸ்கிருதச் சொற்றொடர் மூலம் இந்தப் பிரபஞ்சமே வட்டவடிவமனது என்பதையும் நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டோம்.
–Subham—