WRITTEN BY S NAGARAJAN
Date: 19 November 2016
Time uploaded in London:6-27 AM
Post No.3368
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 17
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 76.
வசந்த காலம் வந்தது. ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது.
முன்னாள் மஞ்சு வமிசத்தின் வழி வந்த ஒரு கல்வியாளர் டெஞ்சுகானில் வசித்து வந்தார். அவர் பெயர் டிங்.
அவருக்கு மண்மாகாத கன்னிப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு வயது 18.
ஒரு நாள் திடீரென்று அவள் மயங்கி விழுந்தாள். குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அவளுக்கு நினைவு திரும்பியபோது விசித்திரமான ஆண்குரலில் அவள் பேச ஆரம்பித்தாள்.
அவள் தனது தந்தையை நோக்கி, “ ஏ, டிங், உனது செல்வாக்கின் காரணமாக என்னை அநியாயமாகக் கொள்ளைக்காரன் என்று குற்றம் சுமத்திச் சாக அடித்தாய்! டாலியில் நான் வாழ்ந்து வந்தது உனக்கு நினைவிருக்கிறதா? நான் உன்னை மரண தேவனிடம் குற்றம் சுமத்தியுள்ளேன். எட்டு வருடங்களுக்கு முன்னால் நீ இழைத்த கொடுமைக்காகப் பழி வாங்க இப்போது இங்கு வந்துள்ளேன்!” என்றாள்.
பின்னர் ஒரு கோடாலியை எடுத்துக் கொண்டு தந்தையைத் துரத்த ஆரம்பித்தாள்.
பயந்து போன டிங் வெளியில் ஓடி ஒளிந்து கொண்டார். வீட்டிற்கே திரும்பி வரவில்லை.
ஒவ்வொரு நாளும் அந்த ஆவி அவள் மீது ஆவிர்பித்தவுடன் அவள் போக்கே மாற ஆரம்பித்தது.
வீட்டில் உள்ள எல்லோரும் பயந்தனர். அண்டை அயலாரும் கூட தொந்தரவுக்குள்ளாயினர்.
அப்போது காக்ஃபுட் மவுண்டனிலிருந்து சூ சி மற்றும் சூ கின் என்ற இரண்டு பிட்சுக்கள் டெங்சுவானுக்கு வந்திருந்தனர். அவர்கள் டிங்கின் வீட்டின் பக்கமாகச் சென்ற போது அங்கே ஒரே கூட்டமாகக் குழுமி இருந்ததைக் கண்டு என்ன விஷயம் என்று விசாரித்தனர்.
அந்தப் பெண் அப்போது ஆவியினால் பீடிக்கப்பட்டிருந்தாள்.
இரண்டு பிட்சுக்களும் ஆவியிடம் சென்று, “நீ இப்படி தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.
அந்த ஆவியோ, “ நீங்கள் துறவிகள். அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசிய்மாக நீங்கள் தலையிடக் கூடாது” என்றது.
ஒரு துறவி கூறினார்: “உண்மை தான்! இது எனக்குச் சற்றும் சம்பந்தமில்லாத விஷயம் தான். ஆனால் என் குரு எப்போதுமே சொல்லி இருக்கிறார்- பகைக்குப் பகை என்பது எப்போதுமே நல்லதில்லை என்று! அதை உட்னடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் இன்னும் எல்லாம் மோசமாகி விடும்!”
அந்த ஆவி சற்று யோசித்தது. பின்னர் கேட்டது: “உங்கள் குரு யார்?”
‘சூ செங் மடாலயத்தைச் சேர்ந்த ஸு யுன் தான் எங்கள் குரு”
“அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. அவர் என்னைக் கடைத்தேற்றுவாரா?”
“அவர் எல்லோர் மீதும் மிகுந்த தயை உள்ளவர். எல்லோரையும் க்டைத்தேற்றுவது என்ற சங்கல்பம் பூண்டவர். உனது வேண்டுகோளை அவர் எப்படி மறுப்பார்?”
அந்தத் துறவி டிங்கை சிறிது பணம் செலவழித்து அந்த ஆவிக்காக பிரார்த்தனை செய்து அதை விடுவிக்குமாறு அறிவுரை கூறினார்.
ஆனால் அந்தப் பெண்ணோ, “டிங்கின் பணம் எனக்குத் தேவை இல்லை. அவன் ஒரு கொலைகாரன்” என்றாள்.
“சரி! இந்த நகரத்து மக்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து உன்னை விடுவிக்க முயன்றால் அது தப்பாகாதே” என்றார் பிட்சு.
அந்தப் பெண் கோபமான குரலில் கூவினாள் :”இந்த எனது துக்கம் தீர்க்கப்படவில்லையானால் நான் திருப்தி அடையவே மாட்டேன். ஆனால் பகைக்கு பகை என்பது தொடர்ந்து நீண்டு கொண்டே தான் இருக்கும். ஆகவே நான் மரண தேவனிடம் என்ன செய்வது என்று கேட்டு வருகிறேன். சில நிமிடங்கள் பொறுமையாக இருங்கள்”
அந்தப் பெண் குழுமியிருந்த கூட்டத்தினரைக் கண்டு சற்று வெட்கம் அடைந்தாள்.
மறு நாள் மீண்டும் வந்த அந்த ஆவி பிட்சுக்கள் காத்திருக்காமல் சென்று விட்டதைச் சொல்லி வருத்தப்பட்டது
பிட்சுக்கள் வருத்தம் தெரிவித்து தாங்கள் நகர அலுவலகத்திற்குச் சென்று தங்கள் வேலையை முடிக்க வேண்டியிருந்தது என்று விளக்கினர்.
ஆவி கூறியது: “நான் மரணதேவனிடம் ஆலோசனை கேட்டேன். சூ ஷெங் மடாலயம் புனிதமான் இடம் என்றும் அங்கு நான் செல்லலாம் என்று மரண தேவதை கூறியது. ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் என் கூட வரவேண்டும்”
அந்தப் பெண்ணுடன் துறவிகள் இருவரும் காக்ஃபுட் மவுண்டனுக்குத் திரும்பினர்.
கூடவே பத்துப் பேர்களும் வந்தனர். அவர்கள் நடந்தது அனைத்தையும் ஸு யுன்னுக்கு விளக்கினர்.
மறு நாள் ஒரு பெரிய பீடம் ஒன்று எழுப்பப்பட்டது. விசேஷமாக சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.
அந்த ஆவி கடைத்தேற பிரார்த்தனை செய்யப்பட்டது.
அந்த ஆவியும் திருப்தியுற்று அகன்றது.
அன்று முதல் டிங்கின் வீட்டில் அமைதி திரும்பியது.
இதைத் தொடர்ந்து அந்த நகரத்து மக்களுக்கு இந்தச் செய்தி பரவ அவர்கள் அனைவரும் அடிக்கடி ம்டாலயத்திற்கு வர ஆர்மபித்தனர். ஸு யுன்னைத் தரிசிக்க ஆரம்பித்தனர்.
***************