Picture of Jimo
Written by S NAGARAJAN
Date: 2 December 2016
Time uploaded in London: 6-12 am
Post No.3408
Pictures are taken from various sources; thanks. They are representational.
contact; swami_48@yahoo.com
பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!
“நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மனத்திற்கு மரணம் என்பது அடுத்த ஒரு பெரிய சாகஸ செயல்!” – ஜே. கே. ரோலிங்
ஒரு மனிதனின் கடைசி விநாடிகளில் என்ன தான் நடக்கிறது? அறிய ஒவ்வொருவருக்கும் ஆசை தான்
இதைப் பற்றி மட்டும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஏராளம் பேர் உண்டு.
முதலில் இதயத் துடிப்பு நிற்கிறது. மூளை ஆக்ஸிஜனுக்காக ஏங்குகிறது. அப்போது என்ன நடக்கிறது. இறக்கும் தருணங்களில் 20 சதவிகிதம் பேருக்கு “உண்மையைக் காட்டிலும் உண்மையான” காட்சியாக உடலை விட்டு உயிர் நீங்குவதும் பிரகாசமான ஒளியைக் காண்பதும் ஏற்படுகிறது என்கிறது அறிவியல்!
இது மூளை தரும் காட்சி தானா, அல்லது உடலுக்குப் பின்னால் உள்ள இன்னொரு உலகின் விளிம்பைக் காண்பதன் ஆரம்பமா?
மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான ஜிமோ போர்ஜிகின் (Jimo Borjigin) என்ற பெண்மணி இதை ஆராய ஆரம்பித்தார்.
முதலில் எலிகள் உள்ளிட்ட மிருகங்களின் மீது சோதனைகளை அவர் நடத்தினார். அவரது லாபரட்டரியில் சில மிருகங்கள் திடீரென இறந்தன. இறக்கும் போது அவற்றின் மூளை சம்பந்தமான சில கெமிக்கல்களின் மின் இயக்கம அதிகமானது. இதனால் தான் நினைவகத்தில் இருந்த சில அனுபவங்கள் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்களுக்குத் தோன்ற அது இறக்கும் போது காணும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதை உறுதி செய்ய ஒன்பது எலிகளின் மூளைகளில் எலக்ட்ரோடைச் செருகி ஒரு மணி நேரம் மயக்க மருந்தைச் செலுத்தினர். இது சோதனையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறநெறிகளில் ஒன்று. பின்னர் பொடாசியம் க்ளோரைடை ஒவ்வொரு எலியின் இதயத்திலும் செலுத்தினர்.
அடுத்த 30 விநாடிகளில் எலியின் கடைசி இதயத்துடிப்பு ஏற்பட, மூளை இயக்கமின்றி நிற்கும் போது கடைசியாக மின் சிக்னலகளை வெளியிட அதை ஆய்வாளர்கள் துல்லியமாக ரிகார்ட் செய்தனர்.
இதை ஆராய்ந்த குழுவினர், தகவல்களை முறைப்படுத்துவது, விழிப்புணர்வுடன் இருப்பதை விட எட்டு மடங்கு அதிகமாக ஆகிறது என்பதைக் கண்டனர். அது உணர்வின் அதிக உச்ச நிலை என்று அவர்கள் தெரிவித்து, அது தான் இறக்கும் போது பல காட்சிகளைக் காண்பது போன்ற தோற்றத்தை மனிதர்களுக்கு அளிக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான் சாம் பார்னியா மிருகங்கள் கடைசி நிமிடங்களில் என்ன நினைக்கிறது என்பது யாருக்குத் தெரியும்? இது கடைசி நிமிடங்களில் இரத்த ஓட்டத்தின் நிலை என்ன என்பதையும் மூளையின் கெமிக்கல் வெளிப்பாடுகள் எப்படி உள்ளன எனபதையும் அறிய மட்டுமே உதவும் என்கிறார்.
சாம் பார்னியா தனது சக விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பெரிய ஆய்வை நான்கு ஆண்டுக் காலம் செய்தார். மாரடைப்பு ஏற்பட்ட 2060 நோயாளிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் உயிர் பிழைத்த 330 பேர்களில் நாற்பது சதவிகிதத்தினர் தாங்கள் இறந்ததாக மருத்துவ ரீதியாக அறிவிக்கப்பட்ட இறுதி விநாடியில் பெரிய விழிப்புணர்ச்சியைப் பெற்றதாக அறிவித்தனர்.
இவர்களின் ஐந்து பேரில் ஒருவர் எல்லையற்ற அமைதி கிடைத்ததாகத் தெரிவித்தனர். மூன்றில் ஒருவர் காலமே இல்லாத ஒரு உணர்வை அடைந்ததாக அறிவித்தனர்.
இவர்களில் 46 சதவிகிதம் பேர், நினவுகளில் பல மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்ததாகக் கூறினர். இரண்டே இரண்டு சதவிகிதம் பேர்கள் மட்டும் “திரும்பி வந்ததை” பார்த்தும் உணர்ந்தும் அனுபவித்ததாகக் கூறினர்.
பல லட்சம் பேர் இப்படி இறுதி விநாடி அனுபவத்தைப் பெற்று வருகின்றனர். இதை இன்னும் ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.
57 வயதான “இறந்த” ஒரு ராணுவ வீரரின் அனுபவம் சுவையானது. மருத்துவ ரீதியில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் “இறந்த” அறையில் நடந்ததை எல்லாம் அவர் பிட்டுப் பிட்டு வைத்தார். இதயம் நின்ற பின்னர் மூளை 20 முதல் 30 விநாடிகளில் செயல் இழக்கும். ஆனால் அவரோ இரண்டு ப்ளீப் ஒலிகளைக் கேட்டதாகச் சொன்னார். இது மருத்துவ ரீதியாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்று நிமிடங்கள் இடைவெளியில் ஒரு மெஷினிலிருந்து வெளிப்படும் ஒலியாகும்!
இது நம்ப முடியாத அதிசயம் என்பதைக் கூறிய பார்னியா, இத்னால் ஒருவர் இறந்து விட்ட பின்னர் கூட நாற்பது நிமிடங்கள் வரை மூளை சேதம் அடைவதில்லை என்ற முடிவுக்கு வரலாம் என்று கூறினார். மற்ற விஞ்ஞானிகள் அவரை ஆதரித்து குறைந்த பட்சம் 20 நிமிடம் மூளை சேதமின்றி அப்படியே இருக்கிறது என்கின்றனர்.
அதாவது இற்ந்த பின்னர் கூட ஒருவரின் பிரக்ஞை அல்லது உணர்வு சில நிமிடங்களாவது நீடிக்கிறது என்பதையே தங்கள் ஆய்வின் முடிவு கூறுகிறது என்கிறார் அவர்.
இன்னொரு சுவையான தகவல் உயிரின் எடையைப் பற்றியதாகும்!
உயிரின் எடை 21 கிராம் என்று சொல்லப்படுவதன் மூல காரணம் 1907இல் நடந்த ஒரு ஆராய்ச்சியினால் தான்!
மசாசூசெட்ஸில் டங்கன் மக்டௌகால் (Duncan MacDougall)
என்ற ஒரு டாக்டர் இறக்கும் தருவாயில் இருந்த ஆறு நோயாளிகளை (இரகசியமாக மருத்துவ அற நெறிகளையும் மீறி) மிக துல்லியமாக அளவுகளைத் தெரிவிக்கும் ஸ்பிரிங்குகள் உள்ள படுக்கைகளில் படுக்க வைத்தார். அவர்கள் இறந்தவுடன் மிகச் சரியாக 21 கிராம் எடையில் குறைந்து விட்டது தெரிய வருவதாகத் தெரிவித்தார். ஆகவே உயிரின் எடை 21 கிராம் தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தத் தகவல் உலகில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் இதை மறுத்த இன்னொரு விஞ்ஞானியான டாக்டர் அகஸ்டஸ் பி. க்ளார்க் என்பவர் ‘அப்படியானால் நாய்கள் இறந்த பின்னர் இப்படி எடை குறையவில்லையே, அப்படியானால் நாய்களுக்கு “உயிரே” கிடையாதா!’ என்று பதில் கேள்வி கேட்டார்.
ஆனால் ஆன்மா பற்றிய அனைத்து மதங்களின் தத்துவமும் ஒன்று தான். ஆன்மாவுக்கு எடை, காலம், வெளி எதுவும் கிடையாது என்பது தான். பிளேட்டோ காலத்திலிருந்து சொல்லி வரப்படும் உண்மை. ஆன்மா எதையும் கடந்தது என்பதை யார் தான் மறுக்க முடியும்?
ஆன்மா அல்லது உயிரின் எடை பற்றிய இன்னொரு ஆராய்ச்சி 1907க்குப் பின்னர் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஆன்மாவிற்கே ஒரு ஆராய்ச்சியா? ஹ, ஹ, ஹா என்கின்றனர் மெய்ஞானிகள்.
அதை கண்டு பிடிக்காமலா இருப்போம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சபாஷ், சரியான போட்டி! காலத்தின் கையில் தான் விடை இருக்கிறது!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. …
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside : பிறப்பு 18-5-1850 மறைவு 3-2-1925) பிரபல விஞ்ஞானி. கணித மேதையும் கூட. மின் சர்க்யூட்களைப் பற்றி அபாரமான ஆராய்ச்சிகளைச் செய்தவர் அவர்.
அவரது வாழ்க்கை சற்று விசித்திரமானது. பள்ளிப் படிப்பு என்பது ஆரம்ப காலத்தில் மட்டும் அவருக்கு ஒரு சிறிதே இருந்தது. ஆனால் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் சுயமாகக் கற்றார். உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானியானார்.
அவருக்கு காது சற்று மந்தம். ஆகவே தன்னைச் சந்திக்க வருவோரை மிகவும் குறைத்துக் கொண்டார். ஏறக்குறைய தனிமையில் வாழும் ஒரு சந்யாசியைப் போல வாழ்ந்தார்.
ஒரு நாள் தற்செயலாக ஒரு வாயு எரிய அதில் அவரது முகம் பட்டு முற்றிலுமாக வெந்து போனது.
கோரமான முகத்தைக் காட்ட விரும்பாது ஒரு தலைப்பாவை முகம் முழுவதும் மூடும் படியாகக் கட்டிக் கொண்டு வாழலானார். முகமூடியோ கழுத்துடன் ஒரு கயிற்றினால் இறுகக் கட்டப்பட்டிருக்கும். அவரது கண்கள் மட்டும் பெரிய முகமூடி வழியே மின்னும்!
உலகம் அவரைப் பாராட்டியபோதும் போதுமான பணமின்றி ஏழையாகவே அவர் வாழ்ந்தார். நண்பர்களோ யாரும் பார்க்க வரவில்லை அல்லது அவர் வரவிடவில்லை!
70 வயது ஆன பிறகு நிலைமை இன்னும் மோசமானது. கரண்ட் பில் கட்டக் கூட பணமில்லை. அவரோ அசரவில்லை. மின்சார இணைப்பு இல்லாமலேயே 15 மாதங்கள் இருட்டில் வாழ்ந்து வந்தார். அவரது குறிப்புப் புத்தகங்களும் ஆராய்ச்சி பற்றிய அனைத்து நோட்டுகளும் இன்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் காக்கப்பட்டு வருகிறது.
விசித்திரமான விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஆலிவர் ஹெவிசைட்
*********