Article Written by S NAGARAJAN
Date: 5 December 2016
Time uploaded in London: 5-59 AM
Post No.3418
Pictures are taken from various sources; thanks. They are representational.
contact; swami_48@yahoo.com
சென்ற வார பாக்யா இதழில் வெளிவந்த கட்டுரை
மகாகவி பாரதியார் பிறந்த தேதி டிசம்பர் 11. மஹரிஷி அரவிந்தர் மறைந்த தேதி டிசம்பர் 5. இருவரின் அழியா நட்பும் ஆன்மீக ரீதியிலானது. இந்த இருவரையும் பற்றிய சிறப்புக் கட்டுரை.
அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்!
ச.நாகராஜன்
விடுதலைப் போரில் ஈடுபட்டு அலிபூர் சிறையில் உயரிய ஆன்மீக அனுபவம் பெற்ற பின்னர் மஹரிஷி அரவிந்தரின் மனம் ஆன்மீக சிந்தனையில் ஊறித் திளைத்தது. ஒரு புதிய அரும் பெரும் சக்தியை பூவுலகில் இறக்குவதற்கான யோகத்தில் அவர் மனம் விழைந்தது.
இதையொட்டி அவர் உள் மனதில் ஒரு குரல் ஒலித்தது: ‘பாண்டிச்சேரிக்குப் போ’ என்று.!
அந்தக் குரலின் கட்டளையை ஏற்று அரவிந்தர் புதுவைக்கு ஒரு படகில் விரைந்தார்.
அப்போது புதுவையில் இருந்த சுதேசிகளான மகாகவி பாரதியார், ஸ்ரீநிவாசாச்சாரி, கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு அரவிந்தர் வருகை இரகசியமாக ஒருவர் மூலமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் அந்த தூதர் கொண்டு வந்த செய்தியை நம்பவில்லை.
ஆங்கிலேய் அரசின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒரு திட்டமே என நம்பினர்.
இருந்தாலும் கூட அவர் ஒருவேளை வந்து விட்டால் அவர் தங்குவதற்கென சர்க்கரை செட்டியார் என்ற அன்பரின் வீடு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். பாரதியார் அவரை வரவேற்றார்.
அன்றிலிருந்து ஒரு அற்புதமான நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி, அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது, பாரதியார் அவரை தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிததது என்று ஏராளமான நற் பணிகள் நடைபெற ஆரம்பித்தன.
அரவிந்தர் மேல் பேரன்பு கொண்டிருந்த மகாகவி, அவரைப் புகழ்ந்து,
“ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே – எங்கள்
அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே!
சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச்
சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்!”
என்று பாடினார்.
ஒரு நாள் மண்டயம் ஸ்ரீநிவாஸாசசாரியார் வீட்டிற்கு வந்த பாரதியார் சரஸ்வதி ஸ்தோத்திரமான எங்ஙனம் சென்றிருந்தீர் என்று தான் புனைந்த பாடலை பாடிக் காட்டினார். அப்போது அங்கு வ.வே.சு ஐயரும் வந்தார்.
அப்போது நடந்த உரையாடலை ஸ்ரீநிவாஸாசசாரியாரின் புதல்வியான யதுகிரி அம்மாள் ‘பாரதி நினைவுகள்’ என்ற தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
ஸ்ரீநிவாஸாசசாரியார் : ஒரு பதத்தில் நூறு பொருள்களை அடக்கும் சக்தி பாரதி தவிர வேறு யாருக்கும் வராது.
பாரதி: நம் நால்வருக்குள் நம் குண விசேஷங்கள் அடங்கி விட்டன. நான் நன்றாகப் பாடுகிறேன் என்கிறீர் நீர். உம்மைப் போன்ற எழுத்தாளர் இல்லை என்கிறேன் நான். ஐயரைப் போன்று மொழிபெயர்ப்பு நிபுணர் கிடையாது என்று நாம் சொல்கிறோம். பாபுவைப் போல் (அரவிந்தரைப் போல்) பழைய வேதங்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அடுக்குபவர் கிடையாது என்கிறோம். நாலு பேர் நாலு பக்கத்திற்கு.
ஸ்ரீநிவாஸாசசாரியார் : காலம் வரும். அவசரப்பட வேண்டாம். இது சோதனைக் காலம்.
ஐயரும் ஆறுதல் கூறினார் பாரதியாருக்கு. மஹாகவியாக இருந்தும் வறுமையில் ஆழ்ந்திருந்தது, உலகினர் தன்னை அறியாதிருந்தது அவரை வேதனைப் படுத்தியது.
புதுவையில் அடிக்கடி ஆங்கிலேயரின் சூழ்ச்சித் திட்டங்கள் அரங்கேறும்.
இந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுவையை ஆங்கிலேயருக்கு பிரெஞ்சுக்காரர்கள் விற்று விடுவதாகப் பேச்சு நடந்தது. அதைப் பற்றி பாரதியாரின் புதல்வியான சகுந்தலா பாரதி, ‘என் தந்தை’ என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார் இப்படி:
“ ஒரு சமயம் புதுவை நகரை பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு விற்றுவிடுவதாகப் பேச்சு நடந்தது. அப்பொழுது அங்கிருந்த ‘ஸ்வதேசிகளை’ ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடாமல், பிரெஞ்சுக்காரருக்குச் சொந்தமான அல்ஜேரியாவுக்கு அனுப்புவதாக பிரெஞ்சு கவர்னர் ஒப்புக்கொண்டார். அவ்வாறே போவதற்கு ஸ்ரீ வ.வே.சு. ஐயர், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸாசசாரியார் எல்லோரும் சம்மதித்து விட்டார்கள். என் தந்தை மட்டும், தன் மனைவி மக்களையும் தன்னுடன் வர அனுமதித்தால் தான் போக முடியும். இல்லாது போனால் விதிப்படி நடக்கட்டுமென்று ‘நான் புதுவையிலேயே தங்கியிருப்பேன்’ என்று கூறினார். அவ்வாறே அனுப்பவும் பிரெஞ்சுக்காரர்கள் சம்மதித்து விட்டார்கள். கடவுளின் அருளால் புதுவையை விற்கவுமில்லை. நாங்கள் பாலைவனத்திற்குப் போக வேண்டிய அவசியமும் நேரவில்லை”
இந்தக் கால கட்டத்தில் தினமும் பாரதியார் சகுந்தலாவிற்கு பாலைவனக் கதைகள் சொல்வாராம்
ஆனால் நல்ல வேளையாக அல்ஜீரியா பாலைவனத்திற்கு அரவிந்தர், பாரதியார் உட்பட்ட யாரும் போகவில்லை.
புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.
கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.
அந்த நாளைப் பற்றி சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:
“ஸ்ரீ அரவிந்தரிடம் என் தந்தை விடை பெறுவதற்காகச் சென்றார். நாங்களும் போயிருந்தோம். அந்தாளில் ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமத்திற்கு இப்போதுள்ளது போன்ற கட்டுக் காவல் கிடையாது. எங்களுக்கு விருப்பமானபோதெல்லாம்,ஸ்ரீ அரவிந்தரின் மாளிகைக்குச் செல்வதுண்டு. அங்கு ஸ்ரீ அரவிந்தரும், என் தந்தையாரும், ஸ்ரீ வ.வெ.சு ஐயரும் பல விஷயங்களைச் சம்பாஷிப்பார்கள். குழந்தைகளாகிய நாங்கள் சிறிது நேரம் கேட்டிருப்போம். பின்பு அவரது மாளிகையைச் சூழ்ந்த விசாலமான தோட்டத்தில் விளையாடியும், ஸ்ரீ அரவிந்தருடன் வசித்து வந்த அவரது சிஷ்யர்களுடன் பேசியும் சில நேரம் கழிப்போம்……
கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.
ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம். அவரது சீடர்கள் எங்களுடன் வீடு மட்டும் வந்தார்கள்.நண்பர்கள் யாவரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து புதுவையிலிருந்து புறப்பட்டோம்.”
சகுந்தலா பாரதியின் புதுவை வாசம் இப்படி உருக்கமுடன் கண்ணீருடன் முடிகிறது.
ஆங்கில சாம்ராஜ்யத்தையே ஆட்டுவித்த மகாவீரர், ஆன்மீக சிகரத்தில் ஏறி புதிய யோக சக்தியைப் பூவுலகில் இறக்கியவர் அரவிந்தர்.
தன் பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்தவர் தமிழ்க் கவிஞர் பாரதியார். வாராது வந்த மாமணி. வீயாச் சிறப்புடையவர்.
இவர்களின் கண்களில் பிரிவினால் அரும்பியது நீர் என்றால் அது புனித நீர் அல்லவா!
கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது!
******