Picture of Osho
Written by S NAGARAJAN
Date: 6 December 2016
Time uploaded in London: 5-01 AM
Post No.3421
Pictures are taken from different sources;thanks.
contact; swami_48@yahoo.com
ஒரு ஜென் குட்டிக் கதை
சுவர்க்கமும் நரகமும் !
ச.நாகராஜன்
ஒஷோ என்று உலகில் பிரபலமான ஆசார்ய ரஜனீஷ் ஏராளமான ஜென் குட்டிக் கதைகளைக் கூறியுள்ளார். அவற்றில் ஒரு குட்டிக் கதை இது.
ஜப்பானிய மன்னன் ஒருவன் பலரையும் அணுகி சுவர்க்கம் என்றால் என்ன நரகம் என்றால் என்ன என்ற கேள்விகளைக் கேட்டு வந்தான். யாரிடமிருந்தும் அவனுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.
மன்னனின் மந்திரி, “ஒரு ஜென் மாஸ்டர் இருக்கிறார். அவர் அனைத்தையும் உணர்ந்தவர். அவரிடம் நீங்கள் சென்று கேட்டால் உங்களுக்குத் திருப்தியான பதில் கிடைக்கும்” என்றார்.
மன்னனும் அந்த ஜென் மாஸ்டரிடம் சென்று தனது வழக்கமான கேள்விகளைக் கேட்டான்.
ஜென் மாஸ்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.
பின்னர் மன்னனை நோக்கி,” என்ன முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய் நீ! அகம்பாவம் பிடித்தவனே! உன்னைப் போன்ற ஒரு முட்டாளையும் நான் பார்த்ததில்லை; அவலட்சணமானவனையும் நான் பார்த்ததில்லை” என்று வெறுப்புத் தொனிக்கும் குரலில் கூறினார்.
மன்னன் அதிர்ச்சியுற்றான். அவனிடம் இப்படி யாருமே பேசியதில்லை. கோபம் உச்சத்திற்கு ஏறியது.
“ அட மடையனே, என்னையா இப்படிச் சொல்கிறாய்” என்று கூவியவாறே தன் வாளை உருவினான். ஓங்கினான்.
இப்போது ஜென் மாஸ்டர் உரத்த குரலில் கூவினார்: “நில்! இது தான் நரகத்திற்குப் போகும் வழி. தெரிந்து கொண்டாயா?” என்றார்.
அவரது நில் என்ற கம்பீரமான சப்தத்தால் வாளை ஓங்கிய மன்னன் அப்படியே நின்றான். அவரது பதிலில் இருந்த உண்மையை அறிந்து கொண்டு அவர் காலில் விழுந்து பணிந்து தன்னை மன்னிக்குமாறு உருக்கமுடன் வேண்டினான்.
“ மன்னா! எழுந்திரு! இது தான் சுவர்க்கத்திற்குப் போகும் வழி! என்ன ஆச்சரியம், ஒரு நிமிடத்தில் நரகத்திற்குப் போகும் வழியையும் தெரிந்து கொண்டாய்! சுவர்க்கத்திற்குப் போகும் வழியையும் தெரிந்து கொண்டாயே” என்று கூறிய ஜென் மாஸ்டர் அவனை ஆசீர்வதித்தார்.
மன்னனும் மகிழ்ந்து அவரது சீடரானான்.
கோபம் நரகத்திற்கு வழி: பணிவு சுவர்க்கத்திற்கு வழி!
**********