Research Article Written by London swaminathan
Date: 7 December 2016
Time uploaded in London: 9-50 am
Post No.3426
Pictures are taken by Tamil Conference Booklet.
contact; swami_48@yahoo.com
(English version of this research article is also posted)
2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசனும் சங்கப் புலவர்களும் கடலில் வாழும் திமிங்கிலங்கள் பற்றி அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அவ்வப்பொழுது நாடு முழுதும் உள்ள கடற்கரைகளில் இறந்துபோன திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதையும், சில நேரங்களில் உயிருடன் கரை ஒதுங்கி தத்தளிப்பதையும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் நம் நாட்டுக் கரை ஓரமுள்ள கடற் பகுதியில் வந்து சென்ற விஷயங்களைக் காளிதாசன் பாடலும் காளிதாசன் புலவர் பாடல்களும் காட்டுகின்றன.
இப்போது அவை நம் நாட்டுக் கடற்பகுதிகளில் வசிப்பதில்லை. நம்மவர்கள் வேட்டையாடி அழித்திருக்கலாம் அல்லது கடல் வெப்ப நிலை மாற்றத்தால் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.
இதோ காளிதாசன் பாடல்:
காளிதாசன் கண்ட அற்புதக் காட்சி இது; திமிங்கிலங்கள் ஏராளமான மீன்களுடன் கூடிய தண்ணீரை உறிஞ்சி, மீன்களை வாயில் வைத்துக் கொண்டு, தலையிலுள்ள ஓட்டை வழியாக நீரைப் பாய்ச்சுவதைக் காளிதாசன் கண்டு மகிழ்ந்துள்ளான். இதை எல்லாம் விமானத்திலிருந்து இராமபிரான், சீதைக்குக் காட்டுவதாக கவி புனைந்துள்ளான் காளிதாசன்.
சசந்த்வமதாய நதீமுகாம்ப: சம்மீலயந்தோ விவ்ருதானனத்வாத்
அமீ சிரோபிஸ்திமய: சரங்ரைரூர்த்வம் விதன்வதி ஜலப்ரவாஹான்
—ரகுவம்சம் 13-10
அமீ-இந்த, திமய: – திமிங்கிலங்கள், விவ்ருத் ஆனனத்வாத்- – திறந்த வாய்களை உடையதால், சமத்வம் – பிற கடல்வாழ் உயிரினங்களுடன் கூடிய, நதீமுகாம்ப:- ஆற்றின் முகத்வார நீரை, ஆதாய- எடுத்து, சம்மீலயந்த: – வாய்களை மூடிக்கொள்கின்றன, சரங்க்ரை:- துளைகளுடன் கூடிய தலைகளின் வழியாக நீர்ப்பெருக்கை, ஊர்த்வம்- மேல் நோக்கி, விதன்வந்தி- விடுகின்றன.
(திமிங்கிலங்கள் உண்மையில் மூச்சுக் காற்றை வெளியேற்றவே கடலின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. அவை மேல் மட்டத்துக்கு வரும்போது வீசும் மூச்சுக் காற்று நீரில் குளிர்ந்து நீர்த்துளி ஆவதாலும், காற்றுடன் கடல் நீர் வீசுவதாலும் தண்ணீர் தெளித்தது போலாகிரறது. மேலும் திமிங்கிலங்களின் நீச்சலாலும் நீர்த்திவலைகள் வெளியே வரும். அதன் தலை ஓட்டையிலிருந்து வருவது மூச்சுக் காற்றுதான்; தண்ணீர் அல்ல என்பது விஞ்ஞான உண்மையாகும்)
தமிழ்க் கடலில் திமிங்கிலங்கள், Whales & Sperm Whale
Whales
இதோ சங்கப் புலவர்களின் திமிங்கிலப் பாடல்கள்:–
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக் கரை ஓரமாக திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் திமிங்கிலங்கள் தலையிலிருந்து உயரே பாய்ச்சும் நீரானது, காற்றினால் அடித்துவரப்பட்டு மீனவர் குடிசைகள் மீது விழுந்ததாகத் தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். அது மட்டுமல்ல தலையில் அதிக எண்ணையுடன் வரும் SPERM WHALE ஸ்பேர்ம் வேல் – எனப்படும் திமிங்கிலம் பற்றியும் பாடுகின்றனர். இது தவிர சுறாமீன்கள் செய்யும் அட்டூழியங்கள், வலைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஆகியன பற்றியும் பாடியுள்ளனர். இப்பொழுது தமிழ்நாட்டின் கரை ஓரங்களில் திமிங்கிலங்களைக் காணமுடியாது. எப்போதாவது வழி தவறி, திசை மாறி அடித்துவரப்படும் திமிங்கிலங்களை மட்டுமே பார்க்கலாம்.
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரைதொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப்
…………………
—நற்றிணைப் பாடல் 132
பெரிய ஊர் உறங்கும் வேளை; தூங்காதவர் யாரும் இல்லை; பெரிய வாயுடைய திமிங்கிலம் தண்ணீரைப் பாய்ச்சும். குளிர்ந்த காற்று ஒய்- என்ற ஒலியுடன் வீசும்; அந்தக் காற்றில் திமிங்கிலத் தலையிருந்து பொங்கும் நீர் அடித்து வரப்படும். கடலோரமாகவுள்ள மீனவர் வீடுகளில் அது மழைபோலப் பெய்யும்; இரட்டைகதவுகளின் துவாரம் வழியாக அது வீட்டுக்குள்ளேயும் தெரிக்கும்.
Sperm whale
கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் 291-ல் எண்ணைத் தலையுடைய SPERM WHALE ஸ்பெர்ம் வேல் பற்றிப் பாடுகிறார்:-
நீர்பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண்மணல் ஏறி, அரைசர்
ஒண்படைத் தொஉகுதியின் இலங்கித் தோன்றும்
தண் பெரும் பௌவ நீர்த்துறைவற்கு
……………….
இது ஒரு கடற்கரைக் காட்சி; எண்ணைச் சத்தை அதிகமாகக் கொண்ட தலையையுடைய ஒரு திமிங்கிலம் வழிதவறிப்போய் கடற்கரையோர சேற்றில் சிக்கிக் கொண்டது. அதைச் சாப்பிட பெரிய கொக்குக் கூட்டம் வெண்மணலில் குவிந்துவிட்டன. அது எப்படி இருக்கிறது என்றால் ஒரு அரசரின் படை போல உள்ளது.
நற்றிணைப் பாடல் 175-ல் மீன் எண்ணை பற்றிய குறிப்பு வருகிறது. மீன் பிடித்து வந்த பரதவர் (மீனவர்), மீன்களைக் கடற்கரையில் குவித்துவிட்டு பெரிய கிளிஞ்சல்களில் மீன் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுவர் என்று ஒரு புலவர் பாடி இருக்கிறார். இது சுறா போன்ற எண்ணைச் சத்துடைய மீன்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையாக இருக்கலாம். இதுதான் மீனவர்களின் எரிபொருள்.
Sperm Whale
நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்
கொழுமீன் கொள்ளை அழி மணல் குவைஇ
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும்……………
கம்பனும் கூட திமிங்கில எலும்புக்கூடு பற்றி ஒரு பாடலில் கூறுகிறான்
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப்
பண்டு வெந்தென நெடும் பசை வறந்திடினும் வான்
மன்டலம் தொடுவது அம் மலையின் மேல் மலை எனக்
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல் அரோ
தென்புலக் கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ்
வன்பு உலக்கரி மடிந்தது கொலோ மகரமீன்
என்பு உலப்புற உலர்ந்தது கொலோ இது எனா
அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் என அவன்
துந்துபிப் படலம் , கிட்கிந்தா காண்டம்
பொருள்:-
மிகுந்த ரத்தம் வற்றிப் போயிருந்தாலும், ஊழித்தீயில் வெந்தது போன்றும் வான மண்டலத்தைத் தொடுவது போன்றும், கடல் போலப் பரவிக் கிடக்கும் துந்துபி என்னும் அசுரனின் உடல் எலும்புக் குவியலை, ருசியமுக மலையில் கண்டான்; அது வேறு ஒரு மலைபோலக் காணப்பட்டது.
அதைப் பார்த்த ராமன் சொன்னான்:- இது என்ன தென் திக்கில் பயணம் செய்யும் எமதர்மனின் வாகனமான எருமைக் கடாவா? திக்குகள் தோறும் உள்ள யானைகள் இறந்து கல்லானதோ! மகரம் என்னும் பெரிய மீன் இறந்தபின்னர் உலர்ந்து கிடக்கும் எலும்புக்கூடா? என்று வியந்து சுக்ரீவனை நோக்கி உனக்குத் தெரிந்ததைச் சொல் என்றான்.
Whale Bone
உடனே துந்துபி என்னும் அரக்கனை வாலி கொன்ற வரலாற்றைச் சுக்ரீவன் சொன்னான்.
இங்கு வருணிக்கப்படும் மகர மீன் சுறாமீன் அல்ல; பெரிய திமிங்கிலமாகும். மகர என்ற சொல்லை டால்பின், சுறாமீன், திமிங்கிலம் ஆகிய எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவர்.
—subham–