Written by London swaminathan
Date: 9 December 2016
Time uploaded in London: 10-45 am
Post No.3433
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
(Posted in English as well)
நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா பலகலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்ன வேதபாரதி என்ர பெயரில் சாமியார் ஆனார்.
மாமன்னன் அசோகன் அவன் தலைநகரான பாடலிபுத்ரம் (பாட்னா) அருகில் கங்கை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அமைச்சர்கள், பரிவாரம் புடைசூழ நின்றிருந்தான் அசோகன். திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். யாராவது இந்த கங்கை நதியைப் பின்னோக்கி ஓடச் செய்ய முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் திகைத்து நின்றனர்.
மாமன்னன் ஆயிற்றே! ஆகவே ஒரு மந்திரி பயந்துகொண்டே சொன்னார்:
“மன்னர் மன்னவா! உலகில் எவ்வளவோ காரியங்களை நடத்த முடியாது என்று நினைப்பர்; ஆனால் உங்களைப் போன்ற மாவீரர்கள் நடத்திக் காட்டிவிடுவீர்கள்; ஆயினும் ஒரு நதி பின்னோக்கிச் சென்றதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் பதிலில் குறையிருந்தால் மன்னிக்கவும்” – என்று சொல்லி முடித்தார்.
அந்தப் பக்கமாக நடந்து சென்ற ஒரு விலை மாது இதைக் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு அருகில் வந்தாள். “நான் செய்வது இழி தொழில் ஆகையால் இங்கு பேசலாமா என்று தெரியாது. மன்னர் அனுமதித்தால் நான் பேசுகிறேன்”.
மாமன்னன் அசோகன் “அதற்கென்ன? பெண்ணே, பேசு” என்றான்.
அந்தப் பெண் சொன்னாள். “இதோ பாருங்கள். இப்பொழுது நதியைப் பின்னோக்கி ஓடச் செய்கிறேன். அது தோன்றிய மலையை நோக்கி ஓட வைக்கிறேன்” என்றாள்.
எல்லா அமைச்சர்களும் வியப்புடன், “செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவள் சொன்னவுடன் நதி மேல் நோக்கி மலையை நோக்கி ஓடத்துவங்கியது. இதனால் வரக்கூடிய இயற்கை விபத்துகளை உணர்ந்த அசோகன் “போதும் போதும் நிறுத்திவிடு; முன்னோக்கியே ஓடச் செய்துவிடு” – என்றான் அவளும் அப்படியே செய்தாள்.
மன்னன் கேட்பதற்கு முன்னால் அனைத்து அமைச்சர்களும், “அம்மணி! எப்படி இந்த அதிசயத்தைச் செய்தீர்கள்? என்று வினவினர்.
அவள் சொன்னாள்,
“வாழ்நாள் முழுதும் ஒருவர் ஏதேனும் ஒரு உறுதிமொழி அல்லது விரதத்தைக் கடைப் பிடித்து அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தால் மகத்தான சக்தி வரும். அந்த சக்தியை ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செலவிடலாம்
“நான் சொல்லுவது உண்மையானால்”, “நான் செய்தது உண்மையானால்” என்று சொல்லிவிட்டு இப்படிக் கட்டளையிடால அது நிறைவேறும் என்றாள்.
அம்மணி நீங்கள் என்ன உண்மையை , உறுதி மொழியை ரகசியமாகக் கடைப்பிடித்தீர்கள்? என்று கேட்டார்கள்.
நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த விலை மாதர் தொழிலில் இறங்கினேன். அப்பொழுது இந்தத் தொழிலிலும் ஏதேனும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா என்று வியந்தேன். அன்று என் மனதில் தோன்றியது. “மாமன்னன் வந்தாலும் சரி குஷ்ட ரோகி வந்தாலும் சரி; அவர்களுக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் சமமான இன்பம் கொடுப்பேன்” என்ற திட விரதம் பூண்டேன். அந்த விரதத்தை இன்றுதான் முதல் தடவையாக உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு விரதத்தை ஏற்று அதை வாழ்நாள் முழுதும் கடைப் பிடித்தால் அப்பொழுது மகத்தான சக்தி சேரும். அதை ஒரே ஒரு முறை பயன்படுத்தலாம்! என்று சொல்லிவிட்டு அவள் வந்த வழியே திரும்பிச் சென்றாள்.
என் கருத்துகள்:-
இதுபோல மனத்தின் மகத்தான சக்தியைக் காட்டும் சில கதைகள் நினைவுக்கு வருகின்றன. இவைகளை முன்னரே எழுதிவிட்டதால் தலைப்பை மட்டும் தருகிறேன்:-
1.நோயுற்ற ஹுமாயுனைக் காப்பாற்ற, அவனது தந்தை (Babar) மூன்றுமுறை வலம் வந்து “அல்லாவே! என் உயிரை எடுத்துக் கொண்டு என் மகனைக் காப்பாற்று” என்ற சம்பவம்
2.துரியோதணனைக் காப்பாற்ற “நிர்வாணமாக நில்; என் பார்வை படுமிடம் எல்லாம் பலம் பெறுவாய்; உன்னை யாரும் கொல்லமுடியாது” என்று சொல்லியும் அவன் தனது மர்ம ஸ்தானங்களை மறைத்த சம்பவம்
3.திரிசங்கு மன்னனை விஸ்வாமித்திரன் சொர்க்கத்துக்கு அனுப்பிய சம்பவம் — இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.
–Subham–